குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஸ்லோவாக்கியா-இந்தியா வர்த்தக அமைப்பில் குடியரசுத்தலைவர் உரை

Posted On: 10 APR 2025 8:54PM by PIB Chennai

ஸ்லோவாக்கியா பயணத்தின் இரண்டாம் நாளன்று  (ஏப்ரல் 10, 2025) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிராடிஸ்லாவாவில் நடைபெற்ற ஸ்லோவாக்கியா-இந்தியா வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய மற்றும் நட்புறவைப் பகிர்ந்து கொண்டுள்ளன என்று கூறினார். பல ஆண்டுகளாக, நமது நாடுகள் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துள்ளன. நமது வர்த்தகத் துறையின் பன்முகத்தன்மை குறித்து ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது என்றும், தொழில்நுட்பம், புதுமைப் படைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் உலகத் தலைமையாக உருவெடுத்து வருகிறது என்றும் குடியரசுத்தலைவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் நிதிசார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளோம். வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஸ்லோவாக்கியா போன்ற நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து அதைச் செய்ய நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், ஐரோப்பாவில் தனது வலுவான தொழில்துறை அடித்தளம் மற்றும் உத்திசார் அமைவிடம் ஆகியவற்றைக் கொண்ட ஸ்லோவாக்கியா ஆழமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது என்று கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினராகவும், வாகனம், பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கான மையமாகவும், ஸ்லோவாக்கியா இந்தியாவின் பரந்த நுகர்வோர் சந்தை, திறமையான பணியாளர்கள் மற்றும் செழிப்பான புத்தொழில்  சூழல் ஆகியவற்றிலிருந்து பயனடைகிறது. இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' முயற்சியில் சேர ஸ்லோவாக் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, நித்ராவில் உள்ள கான்ஸ்டன்டைன் தத்துவஞானி பல்கலைக்கழகத்திற்கு குடியரசுத்தலைவர் விஜயம் செய்தார், அங்கு அவருக்கு பொது சேவை மற்றும் நிர்வாகம், சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்திற்கான வாதிடுதல் மற்றும் கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

குடியரசுத்தலைவர் தனது ஏற்புரையில், இது ஒரு நாட்டிற்கும், நாகரீகத்திற்கும் அளிக்கப்படும் கௌரவம் என்றும், இது பழங்காலம் முதல் அமைதி மற்றும் கற்றலின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றும் கூறினார். தத்துவஞானி புனித கான்ஸ்டன்டைன் சிரில் பெயரிடப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த பட்டத்தைப் பெறுவது குறிப்பாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது, என்றார்.

அடுத்த நிகழ்ச்சியில், அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிராடிஸ்லாவாவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிற்சாலைக்கு சென்று ஆலையின் உற்பத்தி வசதிகளை அவர் பார்வையிட்டார்.

முன்னதாக காலையில், ஸ்லோவாக் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சியை குடியரசுத்தலைவர் பார்வையிட்டார். ஸ்லோவாக்-இந்திய நட்புறவு சங்கம், இந்திய தூதரகத்துடன் இணைந்து, 2015 முதல் 'ஃபேரி டேல்ஸில் மறைந்திருக்கும் அழகு - ஸ்லோவாக் குழந்தைகளின் கண்கள் மூலம் இந்தியா' என்ற ஓவியப் போட்டியை நடத்தி வருகிறது. திருமதி லென்கா முகோவா நடத்திய ராமாயணம் குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்:  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2120791&reg=3&lang=1

***

RB/RJ


(Release ID: 2120849) Visitor Counter : 27