பிரதமர் அலுவலகம்
ராம நவமி நாளில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார்
தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்
Posted On:
04 APR 2025 2:35PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். ராம நவமி நாளான அன்று, நண்பகல் 12 மணியளவில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, சாலை பாலத்திலிருந்து ஒரு ரயிலையும் கப்பலையும் கொடியசைத்து தொடங்கி வைத்து, பாலத்தில் நடைபெறும் போக்குவரத்து செயல்பாட்டையும் அவர் பார்வையிடுகிறார்.
அதன்பிறகு மதியம் 12.45 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர், ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்தப் பாலம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, ராமர் சேது கட்டுமானம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து தொடங்கப்பட்டது.
ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறமைக்கு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. இது 550 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 99 இடைவெளி இணைப்புகளையும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானையும் கொண்டுள்ளது. இது 17 மீட்டர் உயரம் வரை உயரும். இது கப்பல்களின் சீரான இயக்கத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்து செயல்பாடுகளையும் உறுதி செய்கிறது. துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்ட இந்தப் பாலம் அதிகரித்த ஆயுளையும் குறைந்த பராமரிப்புத் தேவைகளையும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு, ரயில் பாலத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது கடுமையான கடல் சூழலில் ரயில் பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் – புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 32-ல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் – சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36-ல் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நெடுஞ்சாலைகள் பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்க உதவும். மேலும் உள்ளூர் விவசாயிகள் வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல இவை உதவும். உள்ளூர் தோல் தொழில்களையும் சிறு தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் புதிய சாலை ஊக்குவிக்கும்.
***
(Release ID: 2118700)
TS/PLM/KPG/SG
(Release ID: 2118844)
Visitor Counter : 192
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam