பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா குறித்து மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 18 MAR 2025 1:05PM by PIB Chennai

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

பிரயாக்ராஜில் நடைபெற்ற பிரம்மாண்டமான மகாகும்பமேளா குறித்த அறிக்கையை நான் இங்கு வழங்குகிறேன். இந்த மதிப்புமிக்க அவையின் வாயிலாக, மகாகும்பமேளாவை வெற்றியடையச் செய்த கோடிக்கணக்கான நாட்டுமக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றியை உறுதி செய்வதில் பல தனிநபர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அரசுக்கும், சமுதாயத்திற்கும், அர்ப்பணிப்புள்ள அனைத்து ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கும், உத்தரப்பிரதேச மக்களுக்கும், குறிப்பாக பிரயாக்ராஜ் மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே,

புனித கங்கையை பூமிக்குக் கொண்டு வர ஒரு அசாதாரண முயற்சி தேவைப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மஹாகும்பமேளாவின் பிரமாண்டமான ஏற்பாட்டிலும் அதைப் போன்ற ஒரு மகத்தான முயற்சி காணப்பட்டது. செங்கோட்டையிலிருந்து அனைவரும் சேர்ந்து மேற்கொள்ளும் முயற்சியின் முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தி உள்ளேன். மகா கும்பமேளா மூலம் பாரதத்தின் மகத்துவத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டது. இதுதான் 'அனைவரின் முயற்சி' என்பதன் உண்மையான உருவகமாகும். இந்த மஹாகும்பமேளா மக்களின் அர்ப்பணிப்பால் உத்வேகம் பெற்ற ஒரு மக்கள் நிகழ்வாகும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மகத்தான மகாகும்பமேளாவில் நமது நாட்டின் உணர்வு மகத்தான அளவில் விழிப்படைந்ததை நாம் கண்டோம். இந்தத் தேசிய உணர்வுதான் நமது நாட்டை புதிய தீர்மானங்களை நோக்கி செலுத்துகிறது. அவற்றை அடைய நம்மை ஊக்குவிக்கிறது. நமது கூட்டு வலிமை குறித்து சிலருக்கு இருந்த சந்தேகங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மகா கும்பமேளா பொருத்தமான பதிலை அளித்துள்ளது.

பேரவைத் தலைவர் அவர்களே,

கடந்த ஆண்டு, அயோத்தியில் ராமர் கோயிலின் குடமுழுக்கு விழாவின் போது, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்தோம். அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, மகாகும்பமேளா வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் இந்தக் கூட்டுணர்வு அதன் அளப்பரிய வலிமையைப் பிரதிபலிக்கிறது. வரலாறு முழுவதும், எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக மாறும் வரையறுக்கப்பட்ட தருணங்கள் உள்ளன. நமது நாடும் இதுபோன்ற தருணங்களைக் கண்டிருக்கிறது. அவை அதற்கு ஒரு புதிய திசையைக் கொடுத்திருக்கின்றன. அதன் மக்களை விழிப்படையச் செய்திருக்கின்றன. பக்தி இயக்கத்தின் போது, நாடு முழுவதும் ஆன்மீக விழிப்புணர்வு பரவியதை நாம் கண்டோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது உரையை நிகழ்த்தியபோது, அது பாரதத்தின் ஆன்மீக உணர்வின் ஒரு சிறந்த பிரகடனமாக இருந்தது. இந்தியர்களிடையே ஆழமான சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தியது. இதைப் போலவே, 1857-ம் ஆண்டு புரட்சி, வீரர் பகத்சிங்கின் உயிர்த்தியாகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் "தில்லி சலோ" அறைகூவல், மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற பல்வேறு திருப்புமுனைகள் நமது சுதந்திரப் போராட்டத்தில் இடம் பெற்றன. இந்த நிகழ்வுகள் நாட்டிற்கு உத்வேகம் அளித்து சுதந்திரத்திற்கு வழி வகுத்தன. பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவை இதுபோன்ற மற்றொரு வரையறுக்கும் தருணமாகவே  நான் பார்க்கிறேன். அங்கு விழிப்புணர்வு பெற்ற நாட்டின் பிரதிபலிப்பையும் நாம் காண முடியும்.

பேரவைத் தலைவர் அவர்களே,

சுமார் ஒன்றரை மாதங்களாக பாரதத்தில் நடந்த மகாகும்பமேளாவின் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் நாம் கண்டோம். வசதி, சிரமம் என்ற கவலைகளுக்கு அப்பாற்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் திரண்டனர். இந்த அசைக்க முடியாத பக்தி நமது மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் பாரதத்துக்கு மட்டும் என்று சுருங்கிவிடவில்லை. கடந்த வாரம், நான் மொரீஷியஸ் சென்றிருந்தேன். அங்கு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து கங்கையின் புனித நீரை எடுத்துச் சென்றேன். மொரீஷியஸில் உள்ள கங்கை குளத்தில் இந்த புனித நீர் கலக்கப்பட்டபோது பக்தி, நம்பிக்கை, கொண்டாட்டத்தின் சூழ்நிலை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக இருந்தது. நமது மரபுகள், கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் எவ்வாறு தீவிரமாக அரவணைக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன என்பதை இந்தத் தருணம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

பேரவைத் தலைவர் அவர்களே,

நமது கலாச்சார விழுமியங்கள் ஓர் தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எந்த அளவு தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன என்பதையும் நான் காண்கிறேன். இன்றைய நமது நவீன இளைஞர்களைப் பாருங்கள் – அவர்கள் மகாகும்பமேளா மற்றும் பிற பாரம்பரியப் பண்டிகைகளோடு எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறார்கள். பாரதத்தின் இளைய தலைமுறையினர் பெருமையுடன் அதன் பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் மரபுகளை மிகுந்த பெருமை மற்றும் பக்தியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

பேரவைத் தலைவர் அவர்களே,

ஒரு சமூகம் அதன் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்ளும்போது, மஹாகுமேளாவின் போது பார்த்ததைப் போன்ற மகத்தான மற்றும் எழுச்சியூட்டும் தருணங்களை நாம் காண்கிறோம். இது நமது சகோதரத்துவ உணர்வை பலப்படுத்துகிறது மற்றும் ஒரு நாடாக, நாம் பெரிய சாதனைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. நமது பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் மரபுகளுடனான ஆழமான தொடர்பு இன்றைய பாரதத்திற்கு விலைமதிப்பற்ற சொத்தாகும்.

பேரவைத் தலைவர் அவர்களே,

மகாகும்பமேளா நமக்கு விலைமதிப்பற்ற பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது, அதன் மிகப் பெரிய பரிசுகளில் ஒன்று ஒற்றுமை என்ற அமிர்தமாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும்,  மக்கள் ஒன்றிணைந்த நிகழ்வு அது. தனிப்பட்ட அகங்காரங்களை உதறித் தள்ளிவிட்டு, தனி மனிதன் என்ற உணர்வை விட, கூட்டாண்மை என்ற உணர்வைத் தழுவினர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் புனிதமான திரிவேணியின் ஒரு பகுதியாக மாறினர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தேசியவாத உணர்வை வலுப்படுத்தும்போது, நமது நாட்டின் ஒற்றுமை மேலும் வலுவடைகிறது. சங்கமத்தின் கரையில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் 'ஹர ஹர கங்கே' என்று ஒலிக்கும் போது, அது 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற அம்சத்தை வெளிப்படுத்துகிறது. ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. சிறியது, பெரியது என்ற பாகுபாடு இல்லை என்பதை மகா கும்பமேளா நிரூபித்துக் காட்டியது.  பாரதத்தின் அளப்பரிய பலத்தை அது பிரதிபலித்தது. ஒற்றுமையின் ஆழமான அம்சம் நம்மிடையே ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. நம்மைப் பிரிக்கும் எந்த முயற்சியையும் முறியடிக்கும் அளவுக்கு நமது ஒற்றுமையின் சக்தி மகத்தானது. இந்த அசைக்க முடியாத ஒற்றுமை உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். உலகம் பிளவுபட்டு சிதறுண்டு கிடக்கும் இந்த நேரத்தில், இந்தப் பிரம்மாண்டமான ஒற்றுமைதான் நமது மிகப்பெரிய பலம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது எப்போதுமே பாரதத்தின் வரையறுக்கும் பண்பாகும் - நாம் எப்போதும் அதை நம்பினோம், உணர்ந்தோம், அதன் மிக அற்புதமான வடிவத்தை பிரயாக்ராஜின் மகாகும்பமேளாவில் அனுபவித்தோம். வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை என்ற இந்தத் தனித்துவமான பாரம்பரியத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும்.

பேரவைத் தலைவர் அவர்களே,

மகாகும்பமேளா நமக்கு எண்ணற்ற உத்வேகங்களை அளித்துள்ளது. நமது நாட்டில் பல சிறிய மற்றும் பெரிய நதிகள் உள்ளன. அவற்றில் சில கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. கும்பமேளாவில் இருந்து உத்வேகம் பெற்று, ஆற்றுத் திருவிழா என்ற பாரம்பரியத்தை விரிவுபடுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். இந்த முயற்சி தற்போதைய தலைமுறையினர் நீரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், நதிகளின் தூய்மையை மேம்படுத்தவும், நமது நதிகளைப் பாதுகாக்கவும் பங்களிக்க உதவும்.

பேரவைத் தலைவர் அவர்களே,

மகா கும்பமேளாவிலிருந்து பெறப்பட்ட ஞானாமிர்தம், நமது நாட்டின் தீர்மானங்களை அடைவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மகா கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன், இந்த மதிப்பிற்குரிய அவையின் சார்பாக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID: 2112139)
TS/IR/RR/KR


(Release ID: 2112352) Visitor Counter : 11