உள்துறை அமைச்சகம்
அசாமின் கோக்ராஜரில் அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் (ஏபிஎஸ்யூ) 57-வது வருடாந்திர மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
கடந்த காலங்களில், போடோலாந்து பகுதியில் அமைதியின்மை, குழப்பம் நிலவியது - இப்போது, கல்வி, வளர்ச்சி, தொழில்துறை மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது
Posted On:
16 MAR 2025 5:24PM by PIB Chennai
அசாமின் கோக்ராஜரில் அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் (ஏபிஎஸ்யூ) 57-வது ஆண்டு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (16.03.2025) சிறப்பு விருந்தினராக உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, சட்டப் பேரவைத் தலைவர் திரு பிஸ்வஜித் டைமரி, மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், அனைத்து போடோ மாணவர் சங்கமான ஏபிஎஸ்யூ பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி, உற்சாகத்தை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்று கூறினார். ஏபி.எஸ்யூ-வின் பங்கு இல்லாமல், போடோ ஒப்பந்தம் சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.
இன்று, போடோலாந்து முழுவதும் அதன் தலைவர் உபேந்திர நாத் பிரம்மா காட்டிய பாதையைப் பின்பற்றும் நிலையில், தில்லியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு போடோபா உபேந்திர நாத் பிரம்மா மார்க் என்று பெயரிட அரசு முடிவு செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். ஏப்ரல் முதல் வாரத்தில் தில்லியில் உபேந்திர நாத் பிரம்மாவின் மார்பளவு சிலை திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். போடோபா உபேந்திரநாத் பிரம்மா-வின் ஒவ்வொரு கனவையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், அசாம் அரசும் நனவாக்கும் என்று அவர் கூறினார்.
கல்வி, அதிகாரமளித்தல், வளர்ச்சியை ஏபிஎஸ்யூ முன்னெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். 2020 ஜனவரி 27 அன்று போடோலாந்து பிராந்திய பிராந்திய (பி.டி.ஆர்) அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் அதை கேலி செய்தன என்று திரு அமித் ஷா கூறினார். ஆனால், இன்று மத்திய அரசும், அசாம் அரசும் இந்த ஒப்பந்தத்தில் 82 சதவீதததை நிறைவேற்றியுள்ளன என அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தின் 100 சதவீதத்தை மத்திய அரசு செயல்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.
போடோலாந்தில் அமைதியின்மை, குழப்பம், பிரிவினைவாதம் குறித்து விவாதங்கள் இருந்த ஒரு காலம் இருந்தது எனவும் ஆனால் இப்போது கல்வி, வளர்ச்சி, தொழில்துறை ஆகியவை மீது கவனம் திரும்பியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போடோலாந்தின் மக்கள் தொகை 3.5 மில்லியன் மட்டுமே என்றாலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசும் அசாம் அரசும் இதன் வளர்ச்சிக்காக ரூ .1,500 கோடியை ஒதுக்கியுள்ளன என்று அவர் கூறினார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், போடோ மொழி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். ஒரு காலத்தில் தோட்டாக்கள் சுடப்பட்ட இடத்தில் இன்று போடோ இளைஞர்கள் தங்கள் கைகளில் மூவர்ணக் கொடியை அசைக்கிறார்கள் என்று திரு அமித் ஷா தெரிவித்தார். போடோலாந்து மக்கள் பின்பற்றும் பாத்தோ மதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
----
PLM/DL
(Release ID: 2111646)
Visitor Counter : 29
Read this release in:
Odia
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Gujarati