உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமின் டெர்கானில் லச்சித் பர்புகான் போலீஸ் அகாடமியை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திறந்து வைத்தார்.

Posted On: 15 MAR 2025 5:15PM by PIB Chennai

 

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை  அமைச்சருமான திரு அமித் ஷா, அசாமின் டெர்கானில் லச்சித் பர்புகான் போலீஸ் அகாடமியை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அசாம் முதலமைச்சர் டாக்டர். ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தமது உரையில், அடுத்த 5 ஆண்டுகளில், லச்சித் பர்புகான் போலீஸ் அகாடமி நாடு முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் அகாடமிகளிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று கூறினார். அசாமின் துணிச்சலான போர்வீரரும், பழம்பெரும் வீரருமான லச்சித் பர்புகான், முகலாயர்களுக்கு எதிராக அசாமின் வெற்றிக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார். லச்சித் பர்புகானின் துணிச்சலான வரலாறு ஒரு காலத்தில் அசாமில் மட்டுமே இருந்தது, ஆனால் மோடி அரசின் முயற்சியால் இன்று அவரது வாழ்க்கை வரலாறு 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் கிடைக்கிறது என்று அவர் மேலும் கூறினார். அஸ்ஸாமின் இந்த சிறந்த மகனைப் பற்றி முழு தேசமும் கற்றுக்கொள்வதையும் அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவதையும் உறுதிசெய்ததற்காக அஸ்ஸாம் அரசை திரு ஷா பாராட்டினார். லச்சித் பர்புகான் போலீஸ் அகாடமியின் வடிவில் இன்று நடப்பட்ட விதை ஒரு நாள் ஆலமரமாக வளரும் என்றும், நாடு முழுவதும் காவல்துறைக்கு சேவை செய்யும் என்றும் அவர் கூறினார். இது அஸ்ஸாமுக்கு மட்டுமின்றி முழு வடகிழக்கு பகுதிக்கும் ஒரு உச்ச போலீஸ் அகாடமியாக இருக்கும். இந்த தளம் பிராந்தியத்தில் அமைதிக்கான புதிய தொடக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

லச்சித் பர்புகான் அகாடமியின் முதல் கட்டம் ரூ 167 கோடி செலவில் நிறைவடைந்துள்ளதாகவும், மூன்று கட்டங்களுக்கும் மொத்தம் ரூ 1050 கோடி செலவிடப்படும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார். பல அதிநவீன வசதிகளுடன் கூடிய அகாடமி முழு நாட்டிலும் சிறந்த போலீஸ் அகாடமியாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக, அஸ்ஸாமின் போலீசார் மற்ற மாநிலங்களுக்கு பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்தது, ஆனால் கடந்த 8 ஆண்டுகளில், மாநில ஆட்சியின் கீழ், அத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது, கோவா மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 2,000 போலீசார் இந்த போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் அஸ்ஸாம் தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் தலைமையில், பல அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: 2020-ல் அஸ்ஸாம்-போடோலாந்து ஒப்பந்தம், 2021-ல் கர்பி ஆங்லாங் ஒப்பந்தம், 2022-ல் பழங்குடியின அமைதி ஒப்பந்தம் உள்பட பல ஒப்பந்தங்கள்  கையெழுத்தானது. 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். ஒரு காலத்தில் இயக்கங்கள், கிளர்ச்சிகள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகளுக்கு பெயர் பெற்ற அசாமில், ரூ 27,000 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அஸ்ஸாமில் அட்வாண்டேஜ் அசாம் 2.0 என்ற பெயரில் சமீபத்தில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு மாநாடு நடத்தப்பட்டது, அங்கு ரூ 5.18 லட்சம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, மேலும், அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ 3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி அரசு கொண்டு வருவதாக குறிப்பிட்டார். மொத்தம் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்கள், அஸ்ஸாம் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

மோடி அரசும், அஸ்ஸாம் அரசும் ஏழைகளுக்கு பல நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக திரு அமித் ஷா கூறினார். முதன்முறையாக 58 லட்சம் வீடுகளுக்கு குழாய் நீர், 1.8 கோடி பேருக்கு ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை, 43 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில் அமைதியை ஏற்படுத்த மோடி அரசு முயற்சிகளை மேற்கொள்வது மட்டுமின்றி, அதை வெற்றிகரமாக நிலைநாட்டியுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மோடி அரசு உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்பியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111498.

***

PKV/KV

 


(Release ID: 2111519) Visitor Counter : 27