பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் நவ்சாரியில் லட்சாதிபதி சகோதரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

Posted On: 08 MAR 2025 10:32PM by PIB Chennai

மகளிர் தினமான இன்று குஜராத்தில் நவ்சாரியில் லட்சாதிபதி சகோதரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மனம் நிறைந்த உரையாடலை நடத்தினார். அப்போது மகளிருக்கு அதிகாரம் அளித்தலின் முக்கியத்துவத்தையும், சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

உலகம் இன்று மகளிர் தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் அன்னையே தெய்வம் என்று தாயை வணங்குவதுடன் தொடங்குகிறது. நம்மைப் பொறுத்தவரை ஆண்டின் ஒவ்வொரு நாளும் அன்னையே தெய்வம் என்று தொடங்குகிறது என பிரதமர் கூறினார்.

சௌராஷ்டிராவின் கலாச்சார கைவிணை கலைகளில் ஒன்றான மணி வேலையில் ஈடுபட்டுள்ள ஷிவானி மகளிர் சுயஉதவி குழுவில் பணியாற்றும் லட்சாதிபதி சகோதரிகளில் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மணி வேலையில் 400க்கும் அதிகமான சகோதரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற சில சகோதரிகள் சந்தைப்படுத்துதல் மற்றும் கணக்கு பணிகளை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். சந்தைப்படுத்தும் குழு மாநிலத்திற்கு வெளியே பயணம் செய்கிறதா என்று பிரதமர் கேட்டபோது, இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து பெரிய நகரங்களுக்கும் சென்றதை அவர் உறுதி செய்தார். மற்றொரு லட்சாதிபதி சகோதரியான பாருல் பேகன் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதாக அந்த பங்கேற்பாளர் எடுத்துரைத்தார். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் தமது கனவு பற்றி திரு மோடி கூறியதோடு, இந்த எண்ணிக்கை 5 கோடியை எட்டும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

மற்றொரு லட்சாதிபதி சகோதரி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, கடின உழைப்பின் மூலம் ஒரு சில ஆண்டுகளில் தாம் கோடீஸ்வரி ஆக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வெற்றிக்கான பாதையை தங்களுக்கு காட்டியதற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். ட்ரோன் சகோதரி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்தபோது, இரண்டு லட்சம் ரூபாய் வரை தாம் வருவாய் ஈட்டுவதாக கூறினார். மிதிவண்டி ஓட்டத் தெரியாத பெண் ஒருவர் ட்ரோன் பைலட்டாக மாறி இருப்பது பற்றி பிரதமர் வியப்படைந்தார். ட்ரோன் சகோதரிகள் இப்போது ஒவ்வொரு கிராமத்தின் அடையாளமாக விளங்குகிறார்கள் என்று திரு மோடி கூறினார்.

இப்போது நீங்கள் அனைவரும் இணையதள வணிக உலகிற்குள் நுழைய வேண்டும். இந்த முயற்சியை மேம்படுத்த உங்களுக்கு உதவுமாறு அரசையும் நான் கேட்டுக்கொள்வேன் என்று அவர் தெரிவித்தார். ஏராளமான சகோதரிகளுக்கு நாங்கள் இணைப்பை தந்திருக்கிறோம் என்றும்  அவர்கள் அடித்தள நிலையில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.  இந்தியப் பெண்கள் வெறுமனே வீட்டு வேலை செய்வதோடு இருப்பவர்கள் அல்ல என்பதை உலகம் அறிவது அவசியமாகும். உண்மையில் அவர்கள் இந்தியாவின் பொருளாதார பலத்தை இயக்குகின்ற சக்திகளாக இருக்கிறார்கள். கிராமப்புற பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று திரு மோடி தெரிவித்தார். நமது பெண்கள் வெகுவிரைவாக தொழில்நுட்பத்தை புரிந்து கொள்வதை நான் கவனித்திருக்கிறேன். ட்ரோன் சகோதரிகள் இதனை நிரூபித்திருக்கிறார்கள் என்பது எனது அனுபவமாகும். நமது நாட்டில் பெண்கள் போராடவும், உருவாக்கவும், வளர்க்கவும், செல்வத்தை படைக்கவும் இயற்கையாகவே சக்தியை கொண்டிருக்கிறார்கள். இந்த சக்தி நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

••••

(Release ID: 2109551)

TS/SMB/LDN/KR

 


(Release ID: 2109916) Visitor Counter : 13