பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதனை புரியும் தலைவர்களை சோல் உருவாக்கும் : பிரதமர்

உலகின் அதிகார மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பிரதமர்

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு துறையிலும் வலிமை மற்றும் உணர்வுப்பூர்வமான செயல்திறனை ஊக்குவிப்பதே தலைமைத்துவ மாநாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த புதிய நிறுவனங்களை உருவாக்கக்கூடிய தலைவர்கள் தேவையாக உள்ளனர் : பிரதமர்

வலிமையான தலைமைப் பண்புடன் தலைவர்கள் திகழ வேண்டும் : பிரதமர்

Posted On: 21 FEB 2025 12:54PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார். நாட்டைக் கட்டமைப்பதில் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் தலைமைத்துவப் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார். தலைமைத்துவ பயிற்சி வழங்கும்  சோல் என்பது பெயரில் மட்டும் அல்ல, இந்தியாவின் சமூக வாழ்வியலில் ஆன்மாவாக திகழும் என்று கூறினார். இந்தப் பயிற்சி நிறுவனம் ஆன்மீக அனுபவத்தின் சாராம்சத்தையும் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் நகரில் விரைவில் இந்த சோல் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தனது பயணத்தில் முதல் அடியை எடுத்துவைத்துள்ள சோல்  தலைமைத்துவ பயிற்சிப் பள்ளி நிறுவனங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்  என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரின் கூற்றை மேற்கோள் காட்டிய பிரதமர் திரு மோடி, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் எப்போதும் நாடு அடிமைத்தளத்திலிருந்து விடுபடவே விரும்புவார் என்றும் 100 திறமையான தலைவர்களின் உதவியுடன் அதனை மாற்றியமைக்க விரும்பினார் என்றும் தெரிவித்தார். அதுபோன்ற உற்சாகத்துடன் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார். 21-ம் நூற்றாண்டின்  வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கனவுகளை நனவாக்க ஒவ்வொரு குடிமகனும் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட திரு மோடி, 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைத்து துறைகளிலும், சிறந்த தலைமை தேவை என்பதை வலியுறுத்தினார். சிறந்த தலைமைத்துவ பண்பிற்கான பயிற்சியை வழங்கும் இந்தப் பயிற்சிப் பள்ளி, அரசியல் உட்பட சர்வதேச அளவில் முத்திரை பதிக்கும் தலைவர்களை  உருவாக்கும் என்று  நம்பிக்கை தெரிவித்தார். எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திலும் மனித, இயற்கை வளங்களின் முக்கிய பங்களிப்பு குறித்து எடுத்துரைத்த பிரதமர், போதுமான இயற்கை வளங்கள் இல்லாத நிலையிலும், மனிதவளத்தால் இயக்கப்படும் தலைமையின் காரணமாக குஜராத் சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். "மனித வளம் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். 21-ம் நூற்றாண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும்  திறன்களை நெறிப்படுத்துவதற்கும் தகுந்த மூலவளங்கள் தேவை என்று அவர் கூறினார். பல்வேறு துறைகளில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். அறிவியல் மற்றும் முறையான அணுகுமுறை மூலம் புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதில் தலைமைத்துவப் பண்பின் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். இதற்கு சோல் போன்ற  தலைமைத்துவ பயிற்சி அமைப்புகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, இது சார்ந்த பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கையைத் திறம்பட செயல்படுத்துவதற்கு மாநில கல்வித்துறை செயலாளர்கள், மாநில திட்ட இயக்குநர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாகவும்  கூறினார். கூடுதலாக, குஜராத்தில் மாநிலத்தின் முதலமைச்சர் அலுவலகப்  பணியாளர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இது ஒரு தொடக்கம் என்று குறிப்பிட்ட அவர், தலைமைத்துவப் பயிற்சிக்கான உலகின் முன்னணி நிறுவனமாக இந்த பயிற்சி அமைப்பு உருவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 உலகின் அதிகார மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கான வேகத்தை அதிகரிப்பதற்கு உலகத்தரம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் தலைமைத்துவப் பண்பு தேவைப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். சோல் போன்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுவனம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக திகழும் என்ற கூறினார். இதுபோன்ற நிறுவனங்கள் தற்போதைய சூழலில், அவசியமான ஒன்று என்று கூறினார். "உலக அரங்கில் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், உலகளாவிய விவகாரங்களுக்குத் தீர்வு காணக்கூடிய ஆற்றல்மிக்க தலைவர்கள் ஒவ்வொரு துறையிலும் தேவையாக உள்ளனர் "என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய தலைவர்கள் உலகளவிலான  அணுகுமுறையுடன் கூடிய விரிவான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், உள்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியா மற்றும்  சர்வதேச நாடுகளின் கருத்துகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப வியூகத்தை வகுத்துக்கொண்டு, முடிவுகளை எடுக்கக்கூடிய மற்றும் நெருக்கடி மேலாண்மை மற்றும் எதிர்கால சிந்தனை ஆகியவற்றிற்கு தயாராக உள்ள நபர்களை தலைமைக்கு தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடவும், சர்வதேச சந்தைகளை புரிந்து கொள்ளும் வகையிலும் கூடிய தலைவர்கள் தேவையென்பதை பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதில் சோல் என்ப்படும் தலைமைத்துவ பயிற்சிப் பள்ளி முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதையே இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்காலத்தில் தலைமைத்துவம் என்பது அதிகாரத்துடன் மட்டுமின்றி, புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன்களுடன் கூடிய தலைவரின் தகுதி என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திரு மோடி அறிவுறுத்தினார். இதனைக் கருத்தில் கொண்டு தனிநபர்கள் தலைவர்களாக உருவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நபர்கள் சிந்தனைத் திறன், இடர்பாட்டு மேலாண்மை, தீர்வுகாணும் திறன் உள்ளிட்ட பண்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.  இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இடையில் பணியாற்றத் தயாராக இருக்கும் தலைவர்களை இந்நிறுவனம் உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய சூழல்களை பின்பற்றுவதைக் காட்டிலும், சூழலுக்குத் தேவையான உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் தலைவர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பேச்சுவார்த்தை முதல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வரை அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னோடி நாடாகக் கொண்டு செல்லும் வகையிலான தலைமைத்துவம் வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் நாட்டின் செல்வாக்கு மற்றும் தாக்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒட்டுமொத்த தொலைநோக்குப் பார்வையும், எதிர்காலத்திற்குத் தேவையான தலைமைத்துவ பண்பை உருவாக்குவதையே சார்ந்துள்ளது என்று குறிப்பிட்ட மோடி, உள்நாட்டு மேம்பாடு, உலகளாவிய சிந்தனை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறினார். சிறந்த நிர்வாகம், உலகத்தரம் வாய்ந்த கொள்கைகளை வகுக்கும் திறன் ஆகியவை சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள், தொழில்முனைவோர் ஆகியோர் உலகின் தலைசிறந்த நடைமுறைகளை உள்ளடக்கிய கொள்கைகளை வகுப்பதன் மூலம், இந்த இலக்கை எட்ட முடியும் என்று அவர் கூறினார். இதுபோன்ற அம்சங்களில் தலைமைத்துவ பயிற்சி நிறுவனம் குறிப்பிடத்தக்க பண்பை வழங்கும் என்று அவர் கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்திய திரு மோடி, சிறந்த மனிதர்களின் நடத்தையை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று வேதங்களை மேற்கோள் காட்டி கூறினார். எனவே, நாட்டின் தொலைநோக்குக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் தலைமைத்துவம்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க தேவையான வலிமையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்துவதே தலைமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வலுவான தலைமை அமைந்தவுடன்  தேவையான மாற்றங்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும் இயல்பாகவே நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுவான மற்றும் சமூகம் சார்ந்த துறைகளில் கொள்கைகளை வகுப்பதில் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் மனவலிமை ஆகிய இரண்டையும் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். நவீன தொழில்நுட்பம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தலைமைத்துவப் பண்புடன் கூடிய வலிமையான தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார். விளையாட்டு, விவசாயம், உற்பத்தி மற்றும் சமூக சேவை போன்ற பாரம்பரிய துறைகளிலும் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். அனைத்துத் துறைகளிலும் இந்தியா சிறந்து விளங்க விரும்புவதுடன், அதற்கான இலக்கு எட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். "உலகளவில் சிறந்த புதிய நிறுவனங்களை உருவாக்கக்கூடிய தலைவர்கள் நாட்டிற்கு தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் வரலாறு இதுபோன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் கதைகளைக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய உணர்வுகள் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பல திறமை வாய்ந்த நபர்கள் உள்ளனர் என்று நம்பிக்கை தெரிவித்த திரு மோடி, இந்த தலைமைத்துவப் பயிற்சி நிறுவனம் அவர்களது கனவுகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கான சோதனைக் கூடமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கான அடித்தளம், எதிர்கால சந்ததியினருக்கு பெருமை சேர்க்கும் ஆதாரமாகத் திகழ வேண்டும் என்றும், இது குறித்து 25-லிருந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இதனை பெருமையுடன் நினைவில் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இந்த நிறுவனம் செயலாற்ற வேண்டும் என்று திரு மோடி கேட்டுக்கொண்டார். சவால்கள் மற்றும் வாய்ப்புகளை முன்வைக்கும் துறைகள், காரணிகள் நன்கு வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். "நாட்டின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் பொதுவான இலக்குடன் கூடிய கூட்டு முயற்சி அசாத்தியமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார். வலிமையான பிணைப்பானது பல்வேறு தரப்பினரை ஒன்றிணைப்பதுடன், அவர்களது ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த பொது இலக்குகள் மற்றும்  நோக்கங்கள் தலைமைத்துவ பண்புடன் குழுவாக இணைந்து செயல்படும் உணர்வை வளர்க்க வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தனிநபர்கள் இலக்குகளை அடைவதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுடன், தங்களது திறன்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பேரளவிலான இலக்குகளை எட்டும் வகையில் தனிநபர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதுடன், சிறந்த செல்திறனை வெளிப்படுத்துவதும் முக்கியம் என்று திரு மோடி கூறினார். இத்தகைய செயல்பாடுகள் உயர் நிலையை எட்ட தேவையான திறமைகளைப் பெறுவதற்கு  முயற்சி செய்யும் தலைவர்களை உருவாக்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

தலைமைத்துவ பண்பு முன் எப்போதும் இல்லாத வகையில், குழு உணர்வையும் வளர்க்கக் கூடியது என்று திரு மோடி கூறினார். மக்களுடன் இணைந்து பயணிக்கும் போது, ஒரு வலுவான பிணைப்பு உருவாவதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய குழு உணர்வுகள் சிறந்த தலைமைத்துவப் பண்பை வளர்க்க வழி வகுக்கிறது என்று கூறினார். நாட்டின் சுதந்திரப் போராட்டம் இதற்கு ஒரு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், அரசியல் மட்டுமின்றி, பிற துறைகளிலும் இப்போராட்டம் தலைவர்களை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் உணர்வை புதுப்பித்து அதிலிருந்து உத்வேகம் பெற்று முன்னேறிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார்.

சமஸ்கிருத  வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர், மந்திரமாக மாற்ற முடியாத எந்த வார்த்தைகளும் இல்லை, மருந்தாக மாற முடியாத மூலிகைகளும் இல்லை, திறமையற்ற எந்த ஒரு நபரும் இல்லை என்று வலியுறுத்தினார். தனிநபர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வழிகாட்டுவதற்கு திட்டமிடுபவரின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். தலைமைத்துவ பயிற்சி நிறுவனம் (சோல்) இத்தகைய திட்டமிடுபவரின் தன்மையைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம் தங்களது தலைமைத்துவத் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். வளர்ச்சியின் பல்வேறு நிலைகளை மேற்கோள் காட்டிய பிரதமர், சுய வளர்ச்சியின் மூலம் தனிப்பட்ட வெற்றி, குழு வளர்ச்சியின் மூலம் நிறுவன வளர்ச்சி, தலைமைப் பண்பு வளர்ச்சியின் மூலம் அபரிமிதமான வளர்ச்சி என்ற கோட்பாடுகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது கடமைகள் மற்றும் பங்களிப்புகளை எப்போதும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

21-ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்களால் வடிவமைக்கப்பட்டு, நாட்டில் ஒரு புதிய சமூக அமைப்பு உருவாக்கப்படுவதை எடுத்துரைத்த திரு மோடி, இந்தத் தலைமுறையினர் நாட்டின் முதல் வளர்ந்த தலைமுறையினராக இருப்பார்கள் என்றும், அவர்களை அமிர்த காலத் தலைமுறையினர் என்றும் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலத் தலைமுறையினரின் தலைமைத்துவப் பண்பை தயார்படுத்துவதில் சோல் என்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

பூடான் பிரதமர் திரு. தாஷோ ஷெரிங் டோப்கே, தலைமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் தலைவர் திரு. சுதிர் மேத்தா, துணைத் தலைவர் திரு. ஹஸ்முக் ஆதியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். பூட்டான் மன்னரின் பிறந்த நாளையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக பூடான் பிரதமருக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார்.

பின்னணி

பிப்ரவரி 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த இரண்டு நாள் தலைமைத்துவ மாநாட்டில், அரசியல், விளையாட்டு, கலை, ஊடகம், ஆன்மீகம், பொதுக்கொள்கை, வர்த்தகம், சமூக நலன் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தலைமைத்துவப் பண்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் செய்வார்கள்.  இந்த மாநாடு ஒத்துழைப்பு, சிந்தனை ஆகிய இரண்டு அம்சங்களுடன் தலைமைத்துவப் பண்பிற்கான சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அம்சங்களை இளம் பார்வையாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் நிறுவனம் (சோல்) என்பது குஜராத்தில் அமையவுள்ள தலைமைத்துவ நிறுவனமாகும். இது திறமையான தலைவர்களை உருவாக்குவதன் மூலம் பொது நலனை மேம்படுத்த உதவுகிறது. முறையான பயிற்சி மூலம் இந்தியாவில் அரசியல் தலைமைத்துவப் பயிற்சிக்கான சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதும், தகுதி, அர்ப்பணிப்புணர்வு, பொதுச் சேவைக்கான ஆர்வம் ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்களை சேர்ப்பதும் இதன் நோக்கமாகும். இன்றைய உலகில் தலைமைத்துவத்தின் சிக்கலான சவால்களை வழிநடத்த தேவையான நுண்ணறிவு, திறன்கள், நிபுணத்துவப் பண்புகளை இந்த நிறுவனம் (சோல்) கொண்டு வருகிறது.

***

TS/SV /RJ /KR

(Release ID: 2105209)


(Release ID: 2105302) Visitor Counter : 21