குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய பழங்குடியினர் திருவிழாவான 'ஆதி மஹோத்சவ' விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
16 FEB 2025 6:21PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான 'ஆதி மஹோத்சவ' விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பழங்குடியின பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த ஆதி மகோத்சவம் ஒரு முக்கிய நிகழ்வு என்று கூறினார். இதுபோன்ற விழாக்கள் பழங்குடி சமூகத்தின் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு சந்தையுடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியின சமுதாயத்தின் கைவினைப் பொருட்கள், உணவு, உடை, நகைகள், மருத்துவ நடைமுறைகள், வீட்டு உபகரணங்கள், விளையாட்டுகள் ஆகியவை நமது நாட்டின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதே நேரத்தில் அவை இயற்கையுடன் நல்லிணக்கத்தையும் நிலையான வாழ்க்கை முறையின் இலட்சியங்களையும் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், பழங்குடியின சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். பழங்குடியினர் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 25,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
பழங்குடியின சமுதாயத்திற்குப் பொருளாதார அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சியிலும் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். நாட்டில் உள்ள 470-க்கும் மேற்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் மூலம் சுமார் 1.25 லட்சம் பழங்குடியின குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 30 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சுட்டிக்காட்டினார்.
புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் 2025 பிப்ரவரி 16 முதல் 24 வரை பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் ஆதி மஹோத்சவ விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா நமது நாட்டின் பழங்குடியின சமூகங்களின் வளமான பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
PLM/KV
(Release ID: 2103837)
Visitor Counter : 57