உள்துறை அமைச்சகம்
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 38-வது ‘தேசிய விளையாட்டுப் போட்டிகளின்’ நிறைவு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
14 FEB 2025 7:58PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 38வது ‘தேசிய விளையாட்டுப் போட்டிகளின்’ நிறைவு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, உத்தராகண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி, மேகாலயா முதல்வர் திரு கான்ராட் சங்மா, மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு அஜய் தம்தா மற்றும் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விளையாட்டுகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளும் உணரப்பட்டதாக அவர் கூறினார். பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், தடகளம் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேசிய சாதனைகள் படைக்கப்பட்டதாகவும், இது சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அடுத்ததாக மேகாலயாவில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளின் போது, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் எதிரொலிக்கும் வகையில் சில நிகழ்வுகள் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சிகளால், நாட்டின் விளையாட்டு சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பல மாவட்டங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேர்வு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது உலகளவில் இந்திய விளையாட்டுகளின் நற்பெயரை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய விளையாட்டுகளின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, ஃபிட் இந்தியா மற்றும் கேலோ இந்தியா போன்ற முன்முயற்சிகள் மூலம் ஒவ்வொரு இளைஞரையும் விளையாட்டில் ஈடுபட தூண்டியுள்ளார். தோல்வியைக் கண்டு மனம் தளராமல், தோல்விக்குப் பிறகும் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன், வெற்றியின் உணர்வைக் கொண்டிருப்பதே 'விளையாட்டு' என்பதன் சாராம்சம் என்று அவர் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தி, அவர்களின் தியாகம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதலை நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் வலுவான பதிலடிக்கும் வழிவகுத்தது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103365
----
RB/DL
(Release ID: 2103423)
Visitor Counter : 17