பிரதமர் அலுவலகம்
மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்
குடியரசுத்தலைவரின் உரை, வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான உறுதியைத் தெளிவாக வலுப்படுத்துகிறது: பிரதமர்
நாங்கள் ஏழைகளுக்குத் தவறான முழக்கங்களை வழங்கவில்லை. உண்மையான வளர்ச்சிக்காகவும் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் உழைத்த அரசு இது: பிரதமர்
மக்கள் நலனுக்காக வளங்கள் செலவிடப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்: பிரதமர்
எங்கள் அரசு நடுத்தர வர்க்கத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறது, அதை எப்போதும் ஆதரிக்கும்: பிரதமர்
இந்தியாவின் இளைஞர் சக்திக்கு பெருமை; 2014 ஆம் ஆண்டு முதல், நாட்டின் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம், இன்று நமது இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்று வருகின்றனர்: பிரதமர்
ஆர்வமுள்ள இந்தியாவை உருவாக்க ஏ.ஐ-இன் சக்தியைப் பயன்படுத்துகிறோம்: பிரதமர்
நமது அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள விழுமியங்களை வலுப்படுத்துவதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு: பிரதமர்
பொதுச் சேவை என்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதாகும்: பிரதமர்
அரசியலமைப்பின் மீதான நமது உறுதிப்பாடானது வலுவான மற்றும் மக்கள் சார்பான முடிவுகளை எடுக்க நம்மைத் தூண்டுகிறது: பிரதமர்
எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்க எங்கள் அரசு உழைத்துள்ளது: பிரதமர்
ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீது அக்கறை காட்டுவதுடன் ஒற்றுமையை வலுப்படுத்துவது எப்படி என்பதை எங்கள் அரசு எடுத்துக்காட்டியுள்ளது: பிரதமர்
முழுமையானநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பான முடிவுகளை உருவாக்குகிறது:பிரதமர்
கடந்த பத்தாண்டுகளில், எம்.எஸ்.எம்.இ துறைக்கு முன் எப்போதும் இல்லாத ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
Posted On:
04 FEB 2025 9:13PM by PIB Chennai
மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது என்று குறிப்பிட்ட திரு மோடி, சுதந்திரத்திற்குப் பிந்தைய 20 ஆம் நூற்றாண்டு மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளின் சாதனைகளைக் காலம் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார். குடியரசுத்தலைவரின் உரையின் விரிவான ஆய்வானது எதிர்கால 25 ஆண்டுகளில் புதிய நம்பிக்கையையும், வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.குடியரசுத்தலைவரின் உரை வளர்ந்த பாரதத்துக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது, புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது, மேலும் பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழைகள் மீது அரசு அர்ப்பணிப்புடனும் மிகுந்த உணர்வுபூர்வமாகவும் இருந்து திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்த முயற்சி சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். அடித்தளத்தில் இருப்பவர்களும், அடிப்படை யதார்த்தத்தை அறிந்தவர்களும், தரை மட்டத்தில் உள்ள மக்களுக்காக உழைக்கும் போது, மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார். "எங்கள் அரசு ஏழைகளுக்கு பொய்யான முழக்கங்களை வழங்கவில்லை, உண்மையான வளர்ச்சியை வழங்கியுள்ளது" என்று திரு மோடி கூறினார். ஏழைகளின் வலியையும், நடுத்தர வகுப்பினரின் விருப்பங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் புரிந்துகொண்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் பணியாற்றிய அரசு தனது அரசு என்றும் இது சிலரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மழைக்காலத்தில் உறுதியில்லா வீடுகளிலும், குடிசைகளிலும் வாழ்வது உண்மையிலேயே விரக்தியை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்ட பிரதமர், இதுவரை நான்கு கோடி வீடுகளை ஏழைகளுக்கு அரசு வழங்கியுள்ளது என்றார். திறந்தவெளியில் மலம் கழிப்பதில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைத்த அவர், பெண்களின் சிரமங்களை போக்க அரசு 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளைக் கட்டியுள்ளது என்றும் கூறினார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழாய்களில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், சுமார் 75% அல்லது 16 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் குழாய் நீர் இணைப்புகள் இல்லை என்றார். கடந்த 5 ஆண்டுகளில் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார். குடியரசுத்தலைவர் உரையில் ஏழைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, ஒரு பிரச்சினையை அடையாளம் காண்பது மட்டும் போதாது, ஆனால் அதற்கான தீர்வைக் காண்பதை உறுதி செய்ய மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது அவசியம் என்றார். கடந்த 10 ஆண்டுகளில் தங்களது பணிகளிலும், குடியரசுத்தலைவரின் உரையிலும் காணப்பட்டதைப் போல, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை உறுதி செய்வதில் தமது அரசு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்றடைந்த முந்தைய சூழ்நிலையை சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களின் பணம் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசின் ‘சேமிப்புடன் முன்னேற்றம்’ என்ற மாதிரியை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மக்கள் நிதி கணக்கு– ஆதார் – செல்பேசி (ஜே.ஏ.எம்) அடங்கிய திட்டத்தின் மூலம், அரசு நேரடிப் பலன் பரிமாற்றத்தைத் தொடங்கியதாகவும், மக்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.40 லட்சம் கோடியை டெபாசிட் செய்ததாகவும் அவர் கூறினார். அரசின் நலத்திட்டங்களின் மூலம் சுமார் 10 கோடி போலி பயனாளிகள் பயனடைந்து வருவதை கோடிட்டுக் காட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் சமூக நீதியை உறுதி செய்வதற்காக போலி பயனாளிகள் நீக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மூலம் உண்மையான பயனாளிகள் சேர்க்கப்பட்டனர் என்றார். இதன் மூலம் தவறான கைகளுக்கு சென்றடையாமல் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. அரசு மின்னணு சந்தை இணைய தளம் மூலம் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து, பொது கொள்முதலில் தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்தி வருவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, தற்போது மாநில அரசுகளும் இதைப் பயன்படுத்தி வருகின்றன என்றார். பாரம்பரிய கொள்முதல் முறைகளுடன் ஒப்பிடும்போது அரசு மின்னணு சந்தை இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் மிகவும் செலவு குறைந்ததாக உள்ளது, இதன் விளைவாக அரசுக்கு ரூ .1,15,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் ஆரம்பத்தில் கேலி செய்யப்பட்டது என்றும், பலர் அதை ஒரு தவறு அல்லது பாவம் என்று கருதினர் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த தூய்மை சார்ந்த முயற்சிகள் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில், அரசு அலுவலகங்களிலிருந்து கழிவுகளை விற்பதன் மூலம் அரசு ரூ. 2,300 கோடியை ஈட்டியுள்ளது என்று அவர் பெருமையுடன் கூறினார். மகாத்மா காந்தியின் அறங்காவலர் கொள்கையை வலியுறுத்திய பிரதமர், அவர்கள் பொதுமக்களின் சொத்துக்களின் அறங்காவலர்கள் என்றும், ஒவ்வொரு பைசாவையும் சேமித்து முறையாக பயன்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
எத்தனால் கலப்பது குறித்து அரசு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா எரிசக்தியில் தன்னிறைவு பெறவில்லை என்றும், வெளி ஆதாரங்களை நம்பியுள்ளது என்றும் ஒப்புக் கொண்டார். எத்தனால் கலப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செலவு குறைந்தது, இதன் விளைவாக ரூ .1 லட்சம் கோடி சேமிக்கப்பட்டது என்று அவர் கூறினார். இந்தத் தொகை விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளித்து, அவர்களின் பாக்கெட்டுகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
தாம் சேமிப்பு பற்றிப் பேசும்போது, செய்தித்தாள்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்கள் பற்றிய தலைப்புச் செய்திகள் இடம்பெறுவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதுபோன்ற மோசடிகள் நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த ஊழல்கள் இல்லாததால் நாட்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த சேமிப்புகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக திருப்பி விடப்பட்டுள்ளன.
எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக லட்சக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்திய திரு மோடி, இந்த நிதிகள் பிரம்மாண்டமான அரண்மனைகள் கட்ட பயன்படுத்தப்படவில்லை என்றும், அதற்கு பதிலாக தேச கட்டமைப்பிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெளிவுபடுத்தினார். பத்தாண்டுகளுக்கு முன்பு உள்கட்டமைப்பு பட்ஜெட் ரூ.1.8 லட்சம் கோடியாக இருந்தது என்றும், இன்று உள்கட்டமைப்பு பட்ஜெட் ரூ.11 லட்சம் கோடியாக உள்ளது என்றும், இந்தியாவின் அடித்தளம் எவ்வாறு வலுப்படுத்தப்படுகிறது என்பதை குடியரசுத் தலைவர் தனது உரையில் விவரித்ததை பிரதமர் குறிப்பிட்டார். சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் ஊரகச் சாலைகள் போன்ற துறைகளில் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.
"அறங்காவலர் கோட்பாட்டின் மூலம் வலியுறுத்தப்பட்டபடி, அரசின் கருவூலத்திற்கு சேமிப்பு அவசியம். இருப்பினும், இத்தகைய சேமிப்பிலிருந்து சாமானிய குடிமக்களும் பயனடைவது சமமான முக்கியத்துவம் வாய்ந்தது" என்று பிரதமர் கூறினார். பொதுமக்களின் சேமிப்பை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேற்கோள் காட்டிய அவர், நோய்கள் காரணமாக குடிமக்கள் செய்யும் செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மக்களுக்கு சுமார் ரூ.1.2 லட்சம் கோடியை மிச்சப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். மக்கள் மருந்தக மையங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, 60-70 வயதுடைய முதியவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு மருத்துவச் செலவுகள் கணிசமாக இருக்கும் என்றும், மருந்துகளுக்கு 80% தள்ளுபடி அளிக்கும் மக்கள் மருந்தக மையங்கள் மருத்துவச் செலவுகளுக்கான ரூ.30,000 கோடியை சேமிக்க உதவியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
முறையான சுகாதாரம் மற்றும் கழிப்பறைகள் உள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.70,000 சேமிக்கின்றன என்ற யுனிசெஃப்பின் மதிப்பீட்டை திரு மோடி சுட்டிக்காட்டினார். தூய்மை இந்தியா இயக்கம், கழிப்பறை கட்டுமானம், தூய்மையான குடிநீர் வசதி போன்ற முன்முயற்சிகள் சாதாரண குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க பலன்களை கொண்டு வந்துள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.
"வீடுகளுக்கு குழாய்வழித் தண்ணீர்" முன்முயற்சி உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்த முயற்சியின் மூலம் சுத்தமான தண்ணீருக்கான அணுகல் மற்ற நோய்கள் தொடர்பான மருத்துவ செலவுகளில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ .40,000 சேமிக்க உதவியுள்ளது என்று குறிப்பிட்டார். சாமானிய குடிமக்கள் தங்கள் செலவுகளை மிச்சப்படுத்த இதுபோன்ற பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று அவர் எடுத்துரைத்தார்.
லட்சக்கணக்கான குடிமக்களுக்கு இலவச தானியங்கள் விநியோகிக்கப்பட்டதன் விளைவாக குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த திரு மோடி, பிரதமரின் இலவச சூர்யசக்தித் திட்டம், மின்சார செலவுகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ .25,000 முதல் ரூ .30,000 வரை குடும்பங்கள் மிச்சப்படுத்த உதவியுள்ளது என்றார். கூடுதலாக, உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரத்தை வருமானத்திற்காக விற்கலாம். பல்வேறு முன்முயற்சிகள் மூலம் சாமானிய குடிமக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பு தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். எல்.இ.டி விளக்கு பிரச்சாரம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், தங்களின் பதவிக்காலத்திற்கு முன்பு, எல்.இ.டி விளக்குகள் தலா 400 ரூபாய்க்கு விற்கப்பட்டன என்று குறிப்பிட்டார். பிரச்சாரம் காரணமாக, விலை ரூ.40 ஆக குறைந்தது, இதன் விளைவாக மின்சார சேமிப்பு மற்றும் வெளிச்சம் அதிகரித்தது. இந்த இயக்கம் குடிமக்களுக்கு சுமார் ரூ.20,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். மண் வள அட்டையை விஞ்ஞானப்பூர்வமாகப் பயன்படுத்திய விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 சேமிப்பு பெற்று குறிப்பிடத்தக்க அளவில் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.
வருமான வரி பற்றிப் பேசிய பிரதமர், கடந்த பத்து ஆண்டுகளில் அரசு வருமான வரி விகிதங்களைக் குறைத்துள்ளது, இதன் மூலம் நடுத்தர வகுப்பினருக்கு சேமிப்பு அதிகரித்துள்ளது என்றார். 2013-14 ஆம் ஆண்டில் ரூ .2 லட்சம் மட்டுமே வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது, இன்று ரூ .12 லட்சம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2014, 2017, 2019 மற்றும் 2023 முழுவதும், நிவாரணம் வழங்குவதில் அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், ரூ .75,000 நிலையான விலக்கைச் சேர்ப்பதன் மூலம், ஊதியதாரர்கள் ஏப்ரல் 1 முதல் ₹ 12.75 லட்சம் வரை வருமானத்திற்கு எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முந்தைய அரசுகள் கள யதார்த்தங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக விமர்சித்த பிரதமர், 21 ஆம் நூற்றாண்டு பற்றி பேசிய தலைவர்களால் 20 ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். பல தசாப்தங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டிய பணிகளை நிறைவேற்றுவதில் நாடு 40-50 ஆண்டுகள் தாமதமாக உள்ளது என்பதை உணர்ந்து அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். 2014-ஆம் ஆண்டு பொதுமக்கள் சேவை செய்ய வாய்ப்பு அளித்ததிலிருந்து, அரசு இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தி, அவர்களின் விருப்பங்களை வலியுறுத்தி, அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று திரு மோடி கூறினார். இதன் விளைவாக, இளைஞர்கள் இப்போது தங்கள் திறமைகளையும் சாதனைகளையும் பெருமையுடன் வெளிப்படுத்துகிறார்கள். விண்வெளித் துறை, பாதுகாப்புத் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டதையும், குறைக்கடத்தி திட்டம் தொடங்கப்பட்டதையும் பிரதமர் எடுத்துரைத்தார். புதுமைகளை ஊக்குவிப்பதற்காக, பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, ஸ்டார்ட் அப் இந்தியாவுக்கான சூழல் சார் அமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு குறித்த அறிவிப்பு, நடப்பு பட்ஜெட்டில் ஒரு குறிப்பிடத்தக்க முடிவு ஆகும், இது அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். மேலும், அணுசக்தித் துறையில் வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் அறிவித்தார், இது நாட்டிற்கு நீண்டகால நேர்மறையான தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு, 3டி அச்சு, ரோபோடிக்ஸ் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, கேமிங் துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டி இந்தியாவை உலகளவில் ஆக்கப்பூர்வமான கேமிங்கின் தலைநகராக மாற்ற நாட்டின் இளைஞர்களை ஊக்குவித்தார். தம்மைப் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு என்பது செயற்கை நுண்ணறிவு மட்டுமல்ல, ஆர்வமுள்ள இந்தியாவையும் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பள்ளிகளில் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டதையும், அங்கு மாணவர்கள் தங்களது ரோபோட்டிக்ஸ் படைப்புகளால் மற்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியதையும் அவர் சுட்டி காட்டினார். தற்போதைய பட்ஜெட்டில் 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கம் உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும், உலக செயற்கை நுண்ணறிவு தளத்தில் இந்தியாவின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆழ்ந்த தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், முற்றிலும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 21-ஆம் நூற்றாண்டில் வேகமாக முன்னேற, ஆழ்ந்த தொழில்நுட்பத் துறையில் இந்தியா விரைவாக முன்னேற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சில அரசியல் கட்சிகள் தேர்தலின் போது தொகை செலுத்துகை குறித்து வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவதன் மூலம் இளைஞர்களை ஏமாற்றுவதாக அவர் விமர்சித்தார். இந்த கட்சிகள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பேரழிவாக மாறியுள்ளன என்று அவர் கூறினார்.
ஹரியானாவில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், அரசு அமைந்த உடனேயே எந்தச் செலவும் இல்லாமல், இடைத்தரகர்கள் இல்லாமல் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இது அவர்களின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்று என்று குறிப்பிட்டார். ஹரியானாவின் வரலாற்று தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியை அவர் கொண்டாடினார், இதை மாநிலத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக குறிப்பிட்டார். இதேபோல், மகாராஷ்டிராவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை ஒப்புக் கொண்ட பிரதமர், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளும் கட்சி வசம் உள்ள இடங்களைக் குறிப்பிட்டு, இந்த வெற்றிக்கு மக்களின் ஆசீர்வாதமே காரணம் என்றார்.
அரசியலமைப்புச் சட்டம் 75-வது ஆண்டை நிறைவு செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட குடியரசுத்தலைவரின் உரையை பிரதமர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, அதன் உணர்வை வாழச் செய்ய வேண்டும், நாம் அதனுடன் நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளை தங்கள் உரைகளில் எவ்வாறு முன்வைப்பார்களோ, அதேபோன்று, கடந்த ஆண்டு அரசின் செயல்பாடுகளை குடியரசுத்தலைவர் தமது உரையில் கோடிட்டுக் காட்டுவது ஒரு பாரம்பரியம் என்று திரு மோடி குறிப்பிட்டார். குஜராத் மாநிலம் தனது 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வு வெளிப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். பொன்விழா ஆண்டில், கடந்த 50 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் ஆளுநர்கள் ஆற்றிய உரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக உருவாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்ததாகவும், அது இப்போது அனைத்து நூலகங்களிலும் கிடைக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த உரைகளை வெளியிடுவதில் தனது நிர்வாகம் பெருமை கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி வாழ்வதிலும், அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதிலும், அதன் உணர்வைப் புரிந்துகொள்வதிலும் அவர்களின் உறுதிப்பாட்டை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
2014 ஆம் ஆண்டில், தாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி எதுவும் இல்லை, ஏனெனில் எதுவும் தேவையான எண்ணிக்கையிலான இடங்களைப் பெறவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். பல சட்டங்கள் அரசாங்கம் சுயாதீனமாக செயல்பட அனுமதித்தன, மேலும் பல குழுக்கள் எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்குவதை விதித்தன, ஆனால் எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத போதிலும், அரசியலமைப்பின் உணர்வு மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு இணங்க, கூட்டங்களுக்கு மிகப்பெரிய கட்சியின் தலைவரை அழைக்க முடிவு செய்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இது ஜனநாயகத்தின் சாராம்சத்தின் மீதான அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. கடந்த காலங்களில் பிரதமர்கள் கோப்புகளை சுதந்திரமாக கையாளுவார்கள் என்று திரு மோடி குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அவரது நிர்வாகம் இந்த செயல்முறைகளில் எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்கியுள்ளது மற்றும் அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான சட்டங்களையும் இயற்றியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உருவாக்கப்படும்போது, எதிர்க்கட்சித் தலைவர் முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இருப்பார், இது அரசியலமைப்பின்படி வாழ்வதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தில்லியில் பல இடங்களில் குடும்பங்களால் உருவாக்கப்பட்ட தனியார் அருங்காட்சியகங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட திரு மோடி, பொது நிதியைப் பயன்படுத்தும்போது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி வாழ்வது முக்கியம் என்றார். பிரதமர்களின் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். இதில் பிரதமரகளின் வாழ்க்கை மற்றும் பணிகளை காட்சிப்படுத்தும் வகையில் முதலாவது பிரதமர் முதல் தமக்கு முந்தைய பிரதமர்கள் வரை இடம்பெற்றிருப்பதை அவர் குறிப்பிட்டார். பிரதமர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள மாபெரும் தலைவர்களின் குடும்பத்தினர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, இந்த அருங்காட்சியகத்தை மேலும் வளப்படுத்த கூடுதல் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும், இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். தனக்காக வாழ்வது பொதுவானது என்றும், ஆனால் அரசியலமைப்புக்காக வாழ்வது என்பது அவர்கள் உறுதிபூண்டுள்ள உயர்ந்த அழைப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
"அதிகாரம் சேவைக்காக பயன்படுத்தப்படும்போது, அது தேசத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்கிறது, ஆனால் அதிகாரம் ஒரு மரபாக மாறும்போது, அது மக்களை அழிக்கிறது" என்று பிரதமர் கூறினார். அவர்கள் அரசியலமைப்பின் உணர்வைக் கடைப்பிடிப்பதாகவும், பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமையின் சிலை சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
நகர்ப்புற நக்சல்களின் மொழியை சிலர் வெளிப்படையாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று கவலை தெரிவித்த திரு மோடி, இந்த மொழியைப் பேசுபவர்கள் மற்றும் இந்திய அரசுக்கு சவால் விடுபவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையோ அல்லது நாட்டின் ஒற்றுமையையோ புரிந்து கொள்ள முடியாது என்று எடுத்துரைத்தார்.
கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்கள் அரசியலமைப்பு உரிமைகளை இழந்து இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்று குறிப்பிட்டார். 370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், இந்த பிராந்தியங்களின் மக்கள் இப்போது நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே அதே உரிமைகளைப் பெறுகிறார்கள் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். அரசியலமைப்பின் உணர்வை அவர்கள் புரிந்துகொண்டு அதன்படி வாழ்கின்றனர், அதனால்தான் அவர்கள் இதுபோன்ற வலுவான முடிவுகளை எடுக்கிறார்கள்.
என்று அவர் வலியுறுத்தினார்.
அரசியலமைப்புச் சட்டம் பாகுபாட்டை அனுமதிக்கவில்லை என்பதை வலியுறுத்திய திரு மோடி, பாரபட்சமான மனநிலையுடன் வாழ்பவர்களை விமர்சித்தார். இஸ்லாமிய பெண்கள் மீது சுமத்தப்படும் சிரமங்களை சுட்டிக்காட்டினார். முத்தலாக் முறையை ரத்து செய்ததன் மூலம், இஸ்லாமிய மகள்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கு உரிய சமத்துவத்தை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார்.
தங்களது அரசு அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம், தாங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றியதாக குறிப்பிட்ட பிரதமர், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மையால் உந்தப்பட்டு சிலர் பிளவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்தார். மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையின்படி, அவர்கள் எப்போதும் பின்தங்கியவர்கள் மீது கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் விவகாரங்களுக்காக தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டதை திரு மோடி எடுத்துரைத்தார்.
இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு கடலோர மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மீனவ சமூகங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்த திரு மோடி, சிறிய உள்நாட்டு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள சமூகங்கள் உட்பட இந்த சமூகங்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மீனவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது தங்கள் அரசுதான் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிரிவினர்களுக்காக உள்ள வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், புதிய வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் விருப்பங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார். இது திறன் மேம்பாட்டுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வழிவகுத்தது. சாதாரண குடிமக்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதே ஜனநாயகத்தின் முதன்மையான கடமை என்றும் அவர் எடுத்துரைத்தார். கோடிக்கணக்கான மக்களை இணைக்கும் இந்தியாவின் கூட்டுறவுத் துறையை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், கூட்டுறவுகளுக்கென தனி அமைச்சகத்தை அரசு உருவாக்கியுள்ளது. இது அவர்களின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சாதி பற்றி விவாதிப்பது சிலருக்கு நாகரீகமாகிவிட்டது என்றும், கடந்த 30-35 ஆண்டுகளாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஓ.பி.சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்தைக் கோரி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்தை தங்களது அரசுதான் வழங்கியது என்றும் அவர் கூறினார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது அரசியலமைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு துறையிலும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகங்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க தாங்கள் உறுதியுடன் பணியாற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஒரே எஸ்.சி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தில் பணியாற்றிய காலம் எப்போதாவது இருந்ததா அல்லது ஒரே எஸ்.டி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தில் பணியாற்றிய காலம் இருந்ததா என்று அவர் தேசத்திற்கு முக்கியமான கேள்விகளை முன்வைத்தார். சில தனிநபர்களின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையிலான அப்பட்டமான வேறுபாட்டை அவர் எடுத்துக்காட்டினார், இது அவர்களின் வாக்குறுதிகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான பரந்த இடைவெளியை சுட்டிக்காட்டியது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், சமூக பதற்றங்களை உருவாக்காமல் ஒற்றுமையை பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன என்பதை உதாரணமாக அவர் குறிப்பிட்டார். இன்று, இந்த எண்ணிக்கை 780 ஆக அதிகரித்துள்ளது, இதன் விளைவாக கிடைக்கக்கூடிய இடங்கள் அதிகரித்துள்ளன. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு எஸ்.சி மாணவர்களுக்கு 7,700 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன. பத்து வருட வேலைக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 17,000 ஆக அதிகரித்துள்ளது, இதன் மூலம் தலித் சமூகம் மருத்துவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்துகிறது, சமூக பதட்டங்களை உருவாக்காமல், ஒருவருக்கொருவர் கண்ணியத்தை மதிக்கிறார்கள். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பழங்குடியின மாணவர்களுக்கு 3,800 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன என்பதை திரு மோடி எடுத்துரைத்தார். இன்று, இந்த எண்ணிக்கை சுமார் 9,000 ஆக அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓபிசி மாணவர்களுக்கு 14,000-க்கும் குறைவான இடங்களே இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று, இந்த எண்ணிக்கை சுமார் 32,000 ஆக உயர்ந்துள்ளது, இது 32,000 ஓ.பி.சி மாணவர்களை மருத்துவர்களாக மாற்ற உதவுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது, இரண்டு நாட்களுக்கு ஒரு புதிய கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"எந்தவொரு பயனாளியும் விடுபடாத வகையில் அனைத்து திட்டங்களும் 100% சென்றடைவதை உறுதி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று திரு மோடி கூறினார். நலத் திட்டங்களைப் பெற தகுதியுள்ள அனைவரும் அவற்றைப் பெற வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார், ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமானதாக இருந்த காலாவதியான மாதிரியை நிராகரித்தார். திருப்திப்படுத்தும் அரசியலை விமர்சித்த பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, நாடு திருப்திப்படுத்தும் நிலையிலிருந்து திருப்திகரமான பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்று கூறினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் எந்தவித பாகுபாடும் இன்றி தங்களுக்கு உரிய உரிமைகளைப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவரைப் பொறுத்தவரை, 100% முழுநிலையை அடைவது என்பது உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பிற்கான மரியாதை என்பதாகும்.
அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு என்று குறிப்பிட்ட திரு மோடி, இன்று புற்றுநோய் தினம் என்றும், நாடு மற்றும் உலகம் முழுவதும் சுகாதாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அரசியல் சுயநலத்தால் உந்தப்பட்ட சில தனிநபர்கள், ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தடையாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் அட்டைதாரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு தனியார் மருத்துவமனைகள் உட்பட 30,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இருப்பினும், சில அரசியல் கட்சிகள், தங்கள் குறுகிய மனப்பான்மை மற்றும் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக, இந்த மருத்துவமனைகளின் கதவுகளை ஏழைகளுக்கு மூடிவிட்டன, இது புற்றுநோயாளிகளை பாதிக்கிறது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் சரியான நேரத்தில் புற்றுநோய் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதார இதழான லான்செட் அண்மையில் வெளியிட்ட ஆய்வை மேற்கோள் காட்டிய திரு மோடி, புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் அரசின் தீவிரத்தை வலியுறுத்தினார். ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதன் மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்பதை எடுத்துரைத்தார். இந்தியாவில் இந்த திசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆயுஷ்மான் திட்டத்தை லான்செட் பாராட்டியுள்ளது.
புற்றுநோய் மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்ய இந்த நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கை பற்றி குறிப்பிட்ட திரு மோடி, புற்றுநோயாளிகளுக்கு, குறிப்பாக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இது என்றார். மதிப்பிற்குரிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு இந்த நன்மையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் காரணமாக நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை அவர் குறிப்பிட்டார் மற்றும் 200 பகல் பராமரிப்பு மையங்களை நிறுவும் முடிவை அறிவித்தார். இந்த மையங்கள் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கணிசமான நிவாரணத்தை வழங்கும். குடியரசுத்தலைவரின் உரையின் போது மேற்கொள்ளப்பட்ட வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதங்களைத் குறிப்பிட்ட பிரதமர், நாட்டிற்கு தீங்கு விளைவித்தாலும், முதிர்ச்சியடைந்த வெளியுறவுக் கொள்கை குறித்து பேச வேண்டிய அவசியத்தை சில தனிநபர்கள் உணர்கிறார்கள் என்று குறிப்பிட்டார். வெளியுறவுக் கொள்கையில் உண்மையிலேயே ஆர்வம் கொண்டவர்கள் புகழ்பெற்ற வெளியுறவுக் கொள்கை அறிஞர் எழுதிய "ஜே.எஃப்.கே இன் மறக்கப்பட்ட நெருக்கடி" புத்தகத்தை படிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் இடையிலான சவாலான காலங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் விவாதங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான குடியரசுத்தலைவரின் உரையைத் தொடர்ந்து அவருக்கு அவமரியாதை காட்டப்பட்டமை குறித்து பிரதமர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அரசியல் விரக்தியை தான் புரிந்துகொள்வதாக வலியுறுத்திய அவர், குடியரசுத்தலைவரை இவ்வாறு அவமதிப்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். பிற்போக்கு மனப்பான்மையை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு முழு வாய்ப்புகள் வழங்கப்பட்டால், இந்தியா இரு மடங்கு வேகத்தில் முன்னேற முடியும் என்று வலியுறுத்தினார். 25 ஆண்டுகள் இந்தத் துறையில் பணியாற்றிய பிறகுதான் அவரது நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 10 கோடி பெண்கள், முக்கியமாக விளிம்புநிலை மற்றும் கிராமப்புற பின்னணியைச் சேர்ந்தவர்கள், சுய உதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த பெண்களின் திறன்கள் அதிகரித்துள்ளன, அவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டுள்ளது, மேலும் அவர்களின் பணியை மேலும் மேம்படுத்த உதவும் வகையில் அரசாங்கம் அவர்களின் உதவியை ரூ. 20 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. இந்த முயற்சிகள் ஊரக பொருளாதாரத்தில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
குடியரசுத்தலைவர் உரையில் லட்சாதிபதி சகோதரிகள் இயக்கம் குறித்த விவாதம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், மூன்றாவது முறையாக புதிய அரசு அமைந்ததிலிருந்து, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்சாதிபதி சகோதரிகள் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார். இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 1.25 கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்றும், பொருளாதாரத் திட்டங்கள் மூலம் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவதே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். நமோ ட்ரோன் சகோதரிகள் என்று அழைக்கப்படும் ட்ரோன்களை இயக்கும் பெண்கள் கிராமங்களில் ஏற்படுத்தி உள்ள குறிப்பிடத்தக்க உளவியல் மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்கள் குறித்த சமுதாயத்தின் பார்வையை இது மாற்றியமைத்துள்ளது என்றார். இந்த ட்ரோன் சகோதரிகள் வயல்களில் வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முத்ரா திட்டத்தின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், கோடிக்கணக்கான பெண்கள் முதன்முறையாக தொழில்துறையில் நுழைந்து, தொழில்முனைவோர் பணிகளை ஏற்றுள்ளனர் என்றார்.
குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 4 கோடி வீடுகளில், சுமார் 75% பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை வலியுறுத்திய பிரதமர், "இந்த மாற்றம் வலுவான மற்றும் அதிகாரம் பெற்ற 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கிறது" என்று வலியுறுத்தினார். "கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய முடியாது" என்று பிரதமர் கூறினார். கிராமப்புற பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வளர்ந்த இந்தியாவின் வலுவான தூணாக விவசாயிகள் திகழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார். கடந்த தசாப்தத்தில், விவசாய பட்ஜெட் 2014 முதல் பத்து மடங்கு அதிகரித்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு யூரியா கேட்டபோது விவசாயிகள் சிரமங்களையும், காவல்துறையின் நடவடிக்கையையும் கூட எதிர்கொண்டனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் இரவில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது என்றும், விவசாயிகளுக்கான உரம் பெரும்பாலும் கள்ளச் சந்தைகளில் முடிவடைந்தது என்றும் அவர் கூறினார். இன்று விவசாயிகளுக்கு போதுமான உரம் கிடைக்கிறது என்று திரு மோடி கூறினார். கோவிட்-19 நெருக்கடியின் போது, விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தன, உலகளாவிய விலைகள் உயர்ந்தன என்று அவர் கூறினார். இறக்குமதி செய்யப்பட்ட யூரியாவை இந்தியா நம்பியிருந்த போதிலும், அதற்கான செலவை அரசால் தாங்க முடிந்தது என்று திரு மோடி கூறினார். 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு ரூ.3,000 மதிப்புள்ள யூரியா மூட்டை வழங்கப்படுகிறது. அவர்களின் தொடர் முயற்சிகள் விவசாயிகளுக்கு அதிகபட்ச பலன்களை உறுதி செய்கின்றன என்று அவர் எடுத்துரைத்தார்.
"கடந்த பத்து ஆண்டுகளில், விவசாயிகளுக்கு மலிவு உரத்தை உறுதி செய்வதற்காக ரூ .12 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது, மேலும் பிரதமரின் கிசான் சம்மன் நிதி மூலம், சுமார் ரூ .3.5 லட்சம் கோடி, நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று திரு மோடி கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை சுட்டிக்காட்டிய அவர், கடந்த பத்தாண்டுகளில் கொள்முதல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மிகவும் அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றப்பட்டுள்ளன, வழங்கப்பட்ட கடன் தொகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இயற்கை பேரழிவுகளின் போது, முன்பு விவசாயிகள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தனித்துவிடப்பட்டனர் என்று திரு மோடி வலியுறுத்தினார், ஆனால் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார். கடந்த பத்தாண்டுகளில் நீர்ப்பாசனத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், நீர் மேலாண்மை குறித்த டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் விரிவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் வயல்களுக்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதற்காக பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பெரிய நீர்ப் பாசனத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய நதிகள் இணைப்புத் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, கென்-பெட்வா இணைப்புத் திட்டம், பார்வதி-காளிசிந்த்-சம்பல் இணைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத்தில் தனக்கு கிடைத்த வெற்றிகரமான அனுபவங்களை இதேபோன்ற நதிகள் இணைப்புத் திட்டங்கள் மூலம் அவர் பகிர்ந்து கொண்டார்.
"உலகெங்கிலும் உள்ள உணவு மேஜைகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்கள் பரிமாறப்படுவதை பார்க்க ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும்" என்று பிரதமர் கூறினார். இந்திய தேயிலை மற்றும் காபி தற்போது உலகளவில் பிரபலமடைந்து வருவதாகவும், கோவிட் காலத்திற்குப் பிறகு மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். வரும் காலங்களில், இந்திய பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் மற்றும் பீகாரின் மக்கானா ஆகியவையும் உலகளவில் தங்கள் முத்திரையை பதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ அன்னா என்று அழைக்கப்படும் இந்தியாவின் சிறுதானியங்கள் சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தும் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எதிர்காலத்திற்கு தயார் நிலையில் உள்ள நகரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, நாடு வேகமாக நகரமயமாகி வருகிறது என்றும், இதை ஒரு சவாலாக பார்க்காமல் ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பின் விரிவாக்கம் வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார், அதிகரித்த இணைப்பு வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் முதலாவது நமோ ரயில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், அதில் பயணம் செய்த அனுபவத்தையும் தெரிவித்தார். நாட்டின் எதிர்கால திசையை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களையும் சென்றடைய இதுபோன்ற இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார். தில்லியின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், தற்போது மெட்ரோ இணைப்பு 2 மற்றும் 3 ஆம் நிலை நகரங்களுக்கு விரிவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு 1,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது என்றும், தற்போது கூடுதலாக 1,000 கிலோமீட்டர் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இது விரைவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 12,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துவது உட்பட மாசுபாட்டைக் குறைக்க இந்திய அரசு எடுத்த பல முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார், இது தில்லிக்கும் குறிப்பிடத்தக்க சேவையை வழங்குகிறது.
பெரிய நகரங்களில் கிக் பொருளாதாரம் விரிவடைந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்திருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இ-ஷ்ரம் தளத்தில் கிக் தொழிலாளர்கள்(ஆன்லைன் தொழிலாளர்கள்)பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படும் என்றும், சரிபார்ப்புக்குப் பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கிக் தொழிலாளர்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும், அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டில் தற்போது சுமார் ஒரு கோடி கிக் தொழிலாளர்கள் இருப்பதாக அவர் மதிப்பிட்டார், மேலும் இந்தத் துறையை ஆதரிப்பதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை வலியுறுத்தினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அளித்துள்ள குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை வலியுறுத்தினார். சிறு தொழில்கள் தற்சார்பு இந்தியாவை அடையாளப்படுத்துவதாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசின் கொள்கை எளிமை, வசதி மற்றும் எம்.எஸ்.எம்.இ.களுக்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கும் திறன் மேம்பாட்டின் மூலம் இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்குவதற்கும் மிஷன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையை மேம்படுத்த பல்வேறு முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட திரு மோடி, 2006-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நெறிகளுக்கான அளவுகோல்கள் கடந்த பத்தாண்டுகளில் இருமுறை புதுப்பிக்கப்பட்டதாகவும், 2020-ஆம் ஆண்டிலும், இந்த பட்ஜெட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி, முறையான நிதி ஆதாரங்களின் சவாலை எதிர்கொள்வது, கோவிட் நெருக்கடியின் போது எம்.எஸ்.எம்.இ துறைக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஆதரவு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். பொம்மை மற்றும் ஜவுளித் துறை போன்ற தொழில்களில் கவனம் செலுத்தி, பணப்புழக்கத்தை உறுதி செய்தல், அடமானம் இல்லாமல் கடன் வழங்குதல், இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவை ஏற்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். சிறு தொழில்களின் வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்க தனிப்பயனாக்கப்பட்ட கடன் அட்டைகள் மற்றும் கடன் உத்தரவாத பாதுகாப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதை அவர் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா பொம்மைகளை இறக்குமதி செய்தது, ஆனால் இன்று, இந்திய பொம்மை உற்பத்தியாளர்கள் உலகளவில் பொம்மைகளை ஏற்றுமதி செய்கிறார்கள், இறக்குமதியில் குறிப்பிடத்தக்க குறைவு மற்றும் ஏற்றுமதியில் 239% அதிகரிப்பு உள்ளது என்று அவர் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகள் உலக அங்கீகாரத்தைப் பெற்று வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களான ஆடைகள், மின்னணு பொருட்கள் மற்றும் மின் பொருட்கள் போன்றவை பிற நாடுகளில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி வருவதை சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு அரசின் கனவு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களின் கனவு என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறி வருவதை எடுத்துரைத்த அவர், இந்தக் கனவை நனவாக்க ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலை பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 20-25 ஆண்டுகளுக்குள் நாடுகள் வளர்ச்சியடைந்ததற்கு உலகளாவிய எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், மக்கள்தொகை அனுகூலம், ஜனநாயகம் மற்றும் தேவை ஆகியவற்றைக் கொண்டு, இந்தியா 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியை அடைய முடியும் என்று கூறினார்.
பெரிய இலக்குகளை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நவீன, திறன் வாய்ந்த மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல ஆண்டுகளுக்கு உறுதிபூண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைத்து அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் குடிமக்கள் எல்லாவற்றிற்கும் மேலாக தேசத்திற்கு முன்னுரிமை அளித்து, வளர்ந்த இந்தியா என்ற கனவை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். தனது உரையை நிறைவு செய்கையில், குடியரசுத்தலைவரின் உரைக்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், அவை உறுப்பினர்களுக்கும் தனது பாராட்டுகளை பிரதமர் தெரிவித்தார்.
TS/BR/KR
***
(Release ID: 2099969)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam