நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் தொழில் தொகுப்புகளை உருவாக்க குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 2:02PM by PIB Chennai

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முக்கியமானதாகும் என்று மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள்  அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொழில் தொகுப்புகளை உருவாக்க குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்களின் (எம்.எஸ்.இ) தொழில்நுட்பம், திறன்கள், தரத்தின் மேம்பாடு போன்ற பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளாக பொது வசதி மையங்கள் செயல்படுகின்றன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சமபங்கு நிதியுதவியின் முக்கியத்துவத்தை ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. 50,000 கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன்  தற்சார்பு இந்தியா (எஸ்.ஆர்.ஐ) நிதியத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த நிதிக்கு அரசிடமிருந்து ரூ .10,000 கோடியும், தனியார் பங்கு / மூலதன நிதியங்கள் மூலம் ரூ .40,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

எம்.எஸ்.எம்.இ சமாதான் மற்றும் சாம்பியன்ஸ் (உற்பத்தி மற்றும் தேசிய வலிமையை அதிகரிப்பதற்கான நவீன செயல்முறைகளின் உருவாக்கம் மற்றும் இணக்கமான பயன்பாடு)  தளம் போன்ற நடவடிக்கைகள் மூலம் எம்.எஸ்.எம்.இகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண  அரசு உறுதிபூண்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ சமாதான்  தளம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 2,20,704 விண்ணப்பங்கள் எம்.எஸ்.இ. நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் இணைய தளம் பதினோரு பிராந்திய மொழிகளில் தகவல்களை  வழங்கி வருகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையின்படி, நவம்பர் 26, 2024 நிலவரப்படி, எம்.எஸ்.எம்.இகள் 23.24 கோடி தனிநபர்களைப்  பணியில் அமர்த்தியுள்ளன.  நிறுவனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், ஜூலை 2020 இல் உதயம் பதிவு தளத்தை அரசு தொடங்கியது.  சுய அறிவிப்பு அடிப்படையிலான இந்த இணையவழி அமைப்புமுறைக்கு பதிவு செய்ய பான் அட்டை தேவைப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளையின் நிதி தொகுப்பில் ரூ.9,000 கோடியுடன் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097900

 

 

***

TS/RB/DL


(Release ID: 2098275) Visitor Counter : 10