நிதி அமைச்சகம்
தொழிலாளர் சந்தை குறியீடுகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25
Posted On:
31 JAN 2025 2:00PM by PIB Chennai
பெருந்தொற்றுக்குப் பிந்தைய வலுவான மீட்சி மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியாவில் தொழிலாளர் சந்தை குறியீடுகள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால தொழிலாளர் வள ஆய்வின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது மற்றும் தொழிலாளர் பங்கேற்பு மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் கணிசமான முன்னேற்றங்களைக் காட்டியுள்ளன. கூடுதலாக, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகள் உயர்நிலை வேலைகளை உருவாக்குவதற்கான பரந்த திறனை வழங்குகின்றன, இது வளர்ந்த பாரத்தின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு அவசியம். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சந்தையின் முக்கிய குறிகாட்டிகள்:
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கான வேலையின்மை விகிதம், 2017-18 ஆம் ஆண்டின் 6 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இ.பி.எஃப்.ஓ சந்தாக்களில் நிகர சேர்க்கைகள் நிதியாண்டு 19 இல் பதிவான 61 லட்சத்திலிருந்து நிதியாண்டு 24 இல் 131 லட்சமாக, இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. இது வேலை சந்தையின் முறைப்படுத்தலைக் குறிக்கிறது.
நிகர சம்பளப் பட்டியல் சேர்க்கையில் கிட்டத்தட்ட 61% பேர் 29 வயதிற்குட்பட்டவர்களிடமிருந்து வந்துள்ளது, இது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் புதிய வேலைகள் இளைஞர்களுக்கு செல்கிறது என்பதைக் குறிக்கிறது.
தொழிலாளர் தொகுப்பில் சுயதொழில் செய்பவர்களின் விகிதம் 2017-18 ஆம் ஆண்டின் 52.2 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 58.4 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது வளர்ந்து வரும் தொழில்முனைவோர் செயல்பாடு மற்றும் நெகிழ்வான பணி ஏற்பாடுகளுக்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கை, 24.9 சதவீதத்திலிருந்து 19.8 சதவீதமாக குறைந்திருப்பதானது சுய வேலைவாய்ப்பின் ம கட்டமைக்கப்பட்ட வடிவங்களை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது.
2023 நிதியாண்டிற்கான வருடாந்திர தொழில்துறை ஆய்வு முடிவுகள், முந்தைய ஆண்டை விட வேலைவாய்ப்பில் 7 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் காட்டுகின்றன. நிதியாண்டு 19 (பெருந்தொற்றுக்கு முந்தைய நிலை) ஐ விட நிதியாண்டு 23 இல் 22 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.
பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 23.3 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 41.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் அதிகரித்த பங்களிப்பை இது காட்டுகிறது.
முத்ரா திட்டம், திறன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும், திறன் பயிற்சி அளிப்பதிலும், தற்சார்பு மற்றும் நீடித்த வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளன.
தொழில்முனைவில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கேற்பு, பொருளாதார நடவடிக்கைகளில் பங்களிப்பதற்கான அவர்களின் திறனைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டை உயர் மட்ட வளர்ச்சியை நோக்கி நகர்த்த முடியும் என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பெண்களின் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், எளிதாக கடன் கிடைப்பது, சந்தைப்படுத்தலில் ஆதரவு, திறன் மேம்பாடு, பெண்களின் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு போன்ற பல்வேறு முன்முயற்சிகளை அரசு தொடங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097899
***
TS/RB/DL
(Release ID: 2098273)
Visitor Counter : 7