உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாட்நகரில் உலகத்தரம் வாய்ந்த தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் – உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

Posted On: 16 JAN 2025 6:47PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகம், குஜராத் மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து வாட்நகரில் அதிநவீன அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் விளக்க மையத்தை அமைத்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முக்கியத் திட்டமானது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரமான வாட்நகரின் துடிப்பான வரலாற்றை சிறப்புற எடுத்துரைக்கிறது. நவீன அருங்காட்சியகத்தின் சான்றான வாட்நகர் தொல்பொருள் அனுபவ அருங்காட்சியக வளாகத்தில் மூன்று முக்கிய கட்டமைப்புகள் உள்ளன.

வாட்நகரில் உள்ள தொல்பொருள் அனுபவ அருங்காட்சியகம் இந்தியாவில் அருங்காட்சியக வளர்ச்சிக்கு ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. இது புதுமையான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்தியை பிரதிபலிக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், ஒட்டுமொத்த உலகமும்  இப்போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது என்றார். இந்த அருங்காட்சியகம்  உலக வரைபடத்தில் வாட்நகருக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத்தரும் என்றும் அவர் கூறினார். வாட்நகர் உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாகும் எனவும்,  இதன் பயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம் மற்றும் அகழ்வாராய்ச்சி வளாகத்தை மக்கள் கண்டிப்பாக பார்வையிட வேண்டும் என்று திரு அமித் ஷா கேட்டுக்கொண்டார். ஏனென்றால் வரலாறு, அகழ்வாராய்ச்சி ஆகியவை இவ்வளவு தனித்துவமான முறையில் இணைந்த வகையிலான வேறு எந்த அருங்காட்சியகமும் உலகில் இல்லை என்று அவர் தெரிவித்தார். சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகம், நாட்டின் கலாச்சாரத்தையும் உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.

யோகாவையும் ஆயுர்வேதத்தையும் பிரபலப்படுத்தியதோடு இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி புத்துயிர் அளித்துள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். பழங்குடி சமூகங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பெண்கள் ஆகியோரின் நலனில் இந்த அரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

வாட்நகரின் வரலாறு எழுதப்படும்போது, பிரதமர் திரு நரேந்திர மோடி உட்பட பல சிறந்த சிந்தனையாளர்களின் பிறப்பிடமாக இது நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையே வாட்நகரின் 2,500 ஆண்டுகால பயணத்தை அருங்காட்சியக வடிவில் பாதுகாத்து உலகிற்கு வழங்க வழிவகுத்துள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார். வாட்நகரின் வரலாற்றை உலக வரைபடத்தில் வைப்பதில் இந்த அருங்காட்சியகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093525  

*****

TS/PLM/RS/DL


(Release ID: 2093544) Visitor Counter : 22