பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)

Posted On: 22 DEC 2024 7:46PM by PIB Chennai

குவைத் நாட்டின் அமீரான  ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.

 குவைத் அரசின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா மற்றும் குவைத் அரசின் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் சபா அல்-காலித் அல்-சபா அல்-ஹமாத் அல்-முபாரக் அல்-சபா ஆகியோர் டிசம்பர் 22, 2024 அன்று பாயான் அரண்மனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தனர். குவைத் அரசின் மிக உயரிய விருதான 'தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதை அவருக்கு வழங்கியதற்காக குவைத் அரசின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களுக்கு பிரதமர் நன்றி  தெரிவித்தார். பரஸ்பர அக்கறை கொண்ட இருதரப்பு உறவுகள் ,உலகளாவிய, பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பாரம்பரியமான, நெருக்கமான மற்றும் நட்புரீதியான இருதரப்பு உறவுகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியா மற்றும் குவைத் இடையேயான உறவுகளை 'உத்திசார் கூட்டாண்மை' என்ற நிலையில் உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இது இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்கு ஏற்பவும், இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காகவும் இருக்கும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய கூட்டணியை உருவாக்குவது நமது நீண்டகால வரலாற்று உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதுடன்ஆழப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பின்னர் குவைத் பிரதமர் மேதகு ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-முபாரக் அல்-சபா உடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். புதிதாக நிறுவப்பட்ட உத்திசார் கூட்டாண்மையில், அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, கலாச்சாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சார பிணைப்புகளில் வேரூன்றிய பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று உறவுகளை இரு தரப்பினரும் நினைவு கூர்ந்தனர். பல்வேறு நிலைகளில் நடைபெற்ற வழக்கமான கலந்துரையாடல்கள், பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பில் உத்வேகத்தை உருவாக்கவும், நீடித்திருக்கவும் உதவியது என்று அவர்கள் திருப்தி தெரிவித்தனர். அமைச்சர்கள் மட்டத்திலும், மூத்த அதிகாரிகள் மட்டத்திலும் வழக்கமான இருதரப்பு பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் உயர்மட்ட பரிமாற்றங்களில் சமீபத்திய வேகத்தை நீடிக்க வேண்டும் என்று இருதரப்பும் வலியுறுத்தின.

இந்தியா மற்றும் குவைத் இடையே ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையம்(ஜே.சி.சி) சமீபத்தில் அமைக்கப்பட்டதை இரு தரப்பினரும் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் மதிப்பாய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு நிறுவன செயல்முறையாக ஜே.சி.சி இருக்கும், மேலும் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இதற்கு தலைமை தாங்குவார்கள். பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த, வர்த்தகம், முதலீடுகள், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, வேளாண்மை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜே.சி.சி மற்றும் அதன் கீழ் உள்ள கூட்டு பணிக்குழுக்களின் கூட்டங்களை விரைவில் கூட்ட வேண்டும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நீடித்த இணைப்பாக உள்ளது என்பதைக் குறிப்பிட்ட இரு தரப்பினரும், இருதரப்பு வர்த்தகத்தில் மேலும் வளர்ச்சி மற்றும் பன்முகப்படுத்தலுக்கான சாத்தியக்கூறுகளை வலியுறுத்தினர். வர்த்தக பிரதிநிதிகள் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், நிறுவன இணைப்புகளை வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

 இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பதை அங்கீகரித்தும், குவைத்தின் குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திறனை அங்கீகரித்தும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் அந்நிய நிறுவன முதலீடுகளுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை குவைத் தரப்பு வரவேற்றதுடன், தொழில்நுட்பம், சுற்றுலா, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, சரக்கு போக்குவரத்து மற்றும் பிற துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஆர்வம் தெரிவித்தது. இந்திய நிறுவன அமைப்புகள்,பெருநிறுவனங்கள்,  மற்றும் நிதியங்களுக்கும் குவைத்தில் உள்ள முதலீட்டு ஆணையங்களுக்கும் இடையே நெருக்கமான உறவும்  அதிக அளவில் ஈடுபாடும் தேவை என்ற அவசியத்தை அவர்கள் அங்கீகரித்தனர். இரு நாடுகளின் நிறுவனங்களும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யவும், பங்கேற்கவும் அவர்கள் ஊக்குவித்தனர். இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்குமாறு இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

 எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இருதரப்பு எரிசக்தி வர்த்தகம் குறித்து திருப்தி தெரிவித்த அவர்கள், அதை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் ஒப்புக் கொண்டனர். வாங்குவோர் – விற்பவர் உறவு என்பதிலிருந்து மேல் நிலை மற்றும் கீழ்நிலைத் துறைகளில் அதிக ஒத்துழைப்புடன் கூடிய விரிவான கூட்டாண்மையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி, சுத்திகரிப்பு, பொறியியல் சேவைகள், பெட்ரோ கெமிக்கல் தொழில்கள், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதில் இரு தரப்பும் ஆர்வம் காட்டின.

 தனக்கும், தனது குழுவினருக்கும் அளித்த அன்பான உபசரிப்புக்காக குவைத் அரசின் மேதகு அமீருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தப் பயணம் இந்தியா மற்றும் குவைத் இடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் வலுவான பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை தொடர்ந்து வளர்ந்து, இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் என்று தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியாவுக்கு வருகை தருமாறு குவைத் அமீர் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-சபா அல்-ஹமாத் அல்-முபாரக் அல்-சபா மற்றும் குவைத் பிரதமர் மேதகு ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-முபாரக் அல்-சபா ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2087074

***

(Release ID: 2087074)

TS/BR/RR/KR

 


(Release ID: 2087184) Visitor Counter : 12