பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 19 NOV 2024 6:02AM by PIB Chennai

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரான்ஸ் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மேக்ரோனை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ஜனவரி மாதம் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான தலைமை விருந்தினராக அதிபர் மேக்ரோன் இந்தியாவுக்கு வருகை தந்ததற்கும், ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அவர்கள் சந்தித்ததற்கும் பிறகு, இந்த ஆண்டு இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு மூன்றாவது சந்திப்பாகும்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டையும், ஹொரைசன் 2047 செயல்திட்டம் மற்றும் பிற இருதரப்பு பிரகடனங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை குறித்த பகிரப்பட்ட தொலைநோக்கையும் இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு, விண்வெளி மற்றும் சிவில் அணுசக்தி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் உட்பட இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர்கள், பாதுகாப்பு சுயாட்சி குறித்த தங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் அதை மேலும் துரிதப்படுத்த உறுதி பூண்டனர். இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத் திட்டத்தில் ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்துவதையும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியா பிரான்ஸ் கூட்டாண்மையையும் இரு தலைவர்களும் பாராட்டினர். இந்தச் சூழலில், பிரான்ஸில் வரவிருக்கும் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அதிபர் மேக்ரோனின் முன்முயற்சியை பிரதமர் வரவேற்றார்.

இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பன்முகத்தன்மைக்கு புத்துயிரூட்டவும், சீர்திருத்தம் செய்யவும், நிலையான சர்வதேச அமைப்பை உருவாக்க உதவவும் இணைந்து பணியாற்றுவது என்ற தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.

***

(Release ID: 2074436)
TS/PKV/RR/KR


(Release ID: 2074557) Visitor Counter : 33