பிரதமர் அலுவலகம்
நைஜீரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
Posted On:
17 NOV 2024 10:16PM by PIB Chennai
நைஜீரியாவின் அபுஜாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். இந்திய சமூகத்தினர் அவருக்கு அளித்த சிறப்பான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சமூகத்திலிருந்து கிடைத்த அன்பும் நட்பும் தமக்கு ஒரு பெரிய மூலதனம் என்று அவர் கூறினார்.
பிரதமராக நைஜீரியாவுக்கு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று கூடியிருந்தவர்களிடம் தெரிவித்த திரு மோடி, கோடிக்கணக்கான இந்தியர்களின் நல்வாழ்த்துகளை தம்முடன் சேர்த்துக் கொண்டதாகவும் கூறினார். நைஜீரியாவில் இந்தியர்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருதை தமக்கு வழங்கியதற்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் நன்றி தெரிவித்த திரு மோடி, இந்த விருதை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அர்ப்பணித்தார்.
நைஜீரியாவில் இந்தியர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தமக்கு பெருமிதம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் இதற்காக அதிபர் டினுபுவுடனான பேச்சுவார்த்தையின்போது அவரைத் தாம் பாராட்டியதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஓர் உவமையை மேற்கோள் காட்டிய திரு மோடி, தங்கள் குழந்தைகள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்கும் போது பெற்றோர்கள் உணரும் அதே முறையிலேயே தாமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாகக் கூறினார். நைஜீரியாவின் வளமான காலத்திலும் பலவீனமாக இருந்த காலத்திலும் இங்குள்ள இந்திய வம்சாவளியினர் பக்கபலமாக இருந்து உள்ளனர் என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். நைஜீரியாவில் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட பல இந்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒரு காலத்தில் இந்திய ஆசிரியர் ஒருவர் கற்பித்தார் என்று அவர் கூறினார். நைஜீரியாவில் பல இந்திய மருத்துவர்கள் தன்னலமின்றி பணியாற்றி வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். நைஜீரியாவின் வளர்ச்சிக் கதையில் பல இந்திய வர்த்தகர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். சுதந்திரத்திற்கு முன்பே திரு. கிஷன்சந்த் ஜீலாராம் நைஜீரியாவுக்கு குடிபெயர்ந்து தனது வர்த்தகத்தை தொடங்கி, நைஜீரியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக மாறியதாக பிரதமர் கூறினார். இன்று பல இந்திய நிறுவனங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். துளசிச்சந்திரா அறக்கட்டளை பல நைஜீரியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். நைஜீரியாவின் முன்னேற்றத்தில் தோளோடு தோள் நின்று நடைபோடும் இந்திய சமூகத்தினரைப் பாராட்டிய திரு மோடி, இது இந்தியர்களின் மிகப்பெரிய பலம் என்றும், இந்தியர்களின் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இது உள்ளது என்றும் கூறினார். அனைவரின் நலன் என்ற இலட்சியத்தை இந்தியர்கள் ஒருபோதும் மறந்ததில்லை என்றும், உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற நம்பிக்கையுடன் எப்போதும் வாழ்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியக் கலாச்சாரத்தின் மீது இந்தியர்கள் பெற்ற மரியாதை எல்லா இடங்களிலும் தெளிவாகத் தெரிகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார். நைஜீரிய மக்களிடையே யோகா தொடர்ந்து பிரபலமடைந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், நைஜீரியாவில் உள்ள இந்தியர்கள் தொடர்ந்து யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். நைஜீரியாவின் தேசிய தொலைக்காட்சி அலைவரிசையில் யோகா குறித்த வாராந்தர நிகழ்ச்சி நடைபெற்றதை பிரதமர் குறிப்பிட்டார். நைஜீரியாவில் இந்தி மற்றும் இந்தியத் திரைப்படங்கள் பிரபலமடைந்து வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி ஆப்பிரிக்காவில் கணிசமான காலத்தைச் செலவிட்டார் என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்திய மற்றும் நைஜீரிய மக்கள் தங்களது சுதந்திரப் போராட்டங்களில் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை என்றார். இந்திய சுதந்திரம் நைஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தை மேலும் ஊக்குவித்தது என்று அவர் மேலும் கூறினார். சுதந்திரப் போராட்ட நாட்களைப் போல இன்றும் கூட இந்தியாவும் நைஜீரியாவும் சீராக முன்னேறி வருகின்றன என்று திரு மோடி கூறினார். "இந்தியா ஜனநாயகத்தின் தாய், நைஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" என்று திரு மோடி குறிப்பிட்டார். இரு நாடுகளும் ஜனநாயகம், பன்முகத்தன்மை, மக்கள்தொகையின் வலிமை ஆகியவற்றை பொதுவான காரணிகளாக கொண்டுள்ளன என்று சுட்டிக் காட்டிய அவர் நைஜீரியாவில் உள்ள பன்முகத்தன்மை பற்றி குறிப்பிட்ட திரு மோடி, கோயில்கள் கட்டுவதற்கு நைஜீரிய அரசு அளித்த ஆதரவுக்காக இந்தியர்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
உலகம் முழுவதும் இந்தியா விவாதப் பொருளாக இருந்தது என்பதை வலியுறுத்திய திரு மோடி, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியா எதிர்கொண்ட ஏராளமான போராட்டங்களையும் தொட்டுக் காட்டினார். சந்திரயான், மங்கள்யான், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் போன்ற இந்தியாவின் சாதனைகள் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். விண்வெளி முதல் உற்பத்தித் துறை வரை, டிஜிட்டல் தொழில்நுட்பம் முதல் சுகாதாரம் வரை உலக சக்திகளுடன் இந்தியா போட்டியிடுகிறது" என்று திரு மோடி கூறினார். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 1 டிரில்லியன் டாலரை மட்டுமே கடந்திருந்தது என்று குறிப்பிட்ட திரு மோடி, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியா 2 டிரில்லியன் டாலர் சேர்த்து இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியா மிக விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியர்கள் துணிச்சலாக முடிவெடுப்பவர்கள் என்று குறிப்பிட்ட திரு மோடி, பல்வேறு துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றார். இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் 1.5 லட்சத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன என்று கூறிய திரு மோடி, இந்திய இளைஞர்களின் கடின உழைப்பின் நேரடி விளைவாக இது ஏற்பட்டது என்றார். "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 100-க்கும் அதிகமான யூனிகார்ன்கள் உள்ளன" என்று திரு மோடி கூறினார்.
இந்தியா சேவைத் துறைக்குப் பெயர் பெற்றது என்று குறிப்பிட்ட திரு மோடி, உற்பத்தித் துறையை உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு அரசு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றார். இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய செல்பேசி உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருப்பதிலும், 30 கோடிக்கும் அதிகமான செல்பேசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதிலும் இது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் செல்பேசி ஏற்றுமதி 75 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், இந்தியா தனது பாதுகாப்பு உபகரணங்களை இன்று 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றும் திரு மோடி கூறினார். இந்தியாவின் விண்வெளித் துறை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்திய விண்வெளி வீரர்களை தனது சொந்த ககன்யானில் விண்வெளிக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார். விண்வெளியில் ஒரு விண்வெளி நிலையத்தை இந்தியா உருவாக்கப் போகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது. இந்தியா இதைச் செய்திருக்கும்போது, நம்மாலும் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு நாட்டிற்கும் அளித்துள்ளது என்றார். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியா இன்று புதிய பயணத்தை தொடங்கியுள்ளது என்று திரு மோடி கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை நோக்கி ஒவ்வொரு இந்தியரும் பணியாற்றி வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வளர்ச்சி, அமைதி, வளம், ஜனநாயகம் என எதுவாக இருந்தாலும், உலகிற்கு இந்தியா ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். நைஜீரியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் கூட தாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறும்போது கிடைக்கும் மரியாதையை அனுபவித்திருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகில் எப்போது பிரச்சனை ஏற்பட்டாலும், உலக சகோதரர் என்ற முறையில் முதல் நாடாக இந்தியா அங்கு செல்கிறது என்று பிரதமர் கூறினார். கொரோனா காலத்தில் உலகில் எவ்வளவோ சலசலப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாடும் தடுப்பூசி பற்றி கவலைப்பட்டது. அந்த நெருக்கடியான நேரத்தில், முடிந்தவரை பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க இந்தியா முடிவு செய்தது என்று அவர் கூறினார். இது எமது கலாச்சாரம் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் இதைக் கற்பித்துள்ளது என்றும் அதனால்தான் இந்தியா தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரித்து, உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் அனுப்பியது என்றும் திரு மோடி கூறினார். இந்தியாவின் இந்த முயற்சியால் நைஜீரியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். இன்றைய இந்தியா 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தை நம்புகிறது என்று அவர் கூறினார்.
ஆப்பிரிக்காவின் எதிர்கால வளர்ச்சிக்கான பெரிய மையமாக நைஜீரியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, கடந்த 5 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 18 புதிய தூதரகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார். கடந்த ஆண்டுகளில், ஆப்பிரிக்காவின் குரலை உலக அரங்கில் உயர்த்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டது என்று அவர் கூறினார். ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியதை கோடிட்டுக் காட்டிய திரு மோடி, ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்க வலுவான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார். ஜி-20 அமைப்பில் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இந்தியா மற்றும் நைஜீரியாவின் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஒவ்வொருவருக்கும் பிரதமர் சிறப்பு அழைப்பு விடுத்தார். ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினம் தொடங்கி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஒரிசா மண்ணில் கடவுள் ஜகந்நாதரின் பாதங்களில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள் இணைந்து கொண்டாடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் நடைபெறவுள்ள மகா கும்பமேளா குறித்தும் பிரதமர் பேசினார். இந்த நேரத்தில் இந்திய வம்சாவளியினரை அவர்களின் நைஜீரிய நண்பர்களுடன் இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ள பல காரணங்கள் உள்ளன என்று திரு மோடி கூறினார். அயோத்தியில், 500 ஆண்டுகளுக்குப் பின், ஸ்ரீ ராமரின் பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டுள்ளது, அதை அவர்களும் அவர்களின் குழந்தைகளும் பார்வையிட வேண்டும் என்று பிரதமர் கூறினார். முதலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம், பின்னர் மகா கும்பமேளா, அதன் பிறகு குடியரசு தினம் என்று குறிப்பிட்ட திரு மோடி, இது ஒருவகையான திரிவேணி சங்கமம் என்றும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்துடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு இதற்கு முன்பும் பலமுறை வந்திருந்தாலும், இந்தப் பயணம் உங்கள் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற நினைவாக மாறும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். அனைவரின் உற்சாகத்துக்கும் அன்பான வரவேற்புக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
******
TS/SMB/BR/DL
(Release ID: 2074334)
Visitor Counter : 15
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam