பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய தெற்கின் குரல் 3-வது உச்சிமாநாட்டின் தலைவர்களின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

Posted On: 17 AUG 2024 11:03AM by PIB Chennai

வணக்கம்!

140 கோடி இந்தியர்களின் சார்பாக, 3-வது உலகளாவிய தெற்கின் குரல் உச்சிமாநாட்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். முந்தைய இரண்டு உச்சிமாநாடுகளின் போது, உங்களில் பலருடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, உங்கள் அனைவருடனும் இந்த மேடையில் இணையும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

2022-ல் ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும்போது, ஜி-20 அமைப்புக்கு புதிய தன்மையை அளிக்க நாங்கள் தீர்மானித்தோம். உலகளாவிய தெற்கின் குரல் உச்சி மாநாடு வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கும் ஒரு தளமாக மாறியது.

உலகளாவிய தெற்கின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில், ஜி 20 நிகழ்ச்சி நிரலை இந்தியா வகுத்தது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் ஜி20 முன்னோக்கி வழிவகுத்தது. ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) ஜி20-ன் நிரந்தர உறுப்பினராக ஆக்கப்பட்ட வரலாற்று தருணம் அதன் மிகப்பெரிய உதாரணம்.

நண்பர்களே,

உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் நிலவும் நேரத்தில் இன்று நாம் சந்தித்திருக்கிறோம். கொரோனாவின் தாக்கத்தில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதேவேளை, யுத்த சூழ்நிலை எமது வளர்ச்சிப் பயணத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. நாம் ஏற்கனவே பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது சுகாதார பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன.

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. தொழில்நுட்ப பிளவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புதிய பொருளாதார மற்றும் சமூக சவால்களும் உருவாகி வருகின்றன. கடந்த நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகளாவிய நிர்வாகமும் நிதி நிறுவனங்களும் இந்த நூற்றாண்டின் சவால்களை எதிர்த்துப் போராட முடியவில்லை.

நண்பர்களே,

எனவே, உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு, ஒரே குரலில் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் பலமாக மாறுவது காலத்தின் தேவையாகும். ஒவ்வொருவரின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம், நமது திறன்களைப் பகிர்ந்து கொள்வோம், ஒன்றிணைந்து நமது தீர்மானங்களை வெற்றியாக மாற்றுவோம்.

மனிதகுலத்தின் மூன்றில் இரண்டு பங்கினருக்கு அங்கீகாரம் பெற நாம் ஒன்றிணைவோம். இந்தியா தனது அனுபவங்களையும், திறன்களையும் தெற்கு பூகோளத்தின் அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது. பரஸ்பர வர்த்தகம், உள்ளடக்கிய வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், நமது பரஸ்பர ஒத்துழைப்பு உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

மிஷன் லைஃப் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மட்டுமின்றி, பங்குதாரர் நாடுகளிலும் மேற்கூரைகளில் சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். நிதி உள்ளடக்கம் மற்றும் கடைக்கோடி வரையிலான விநியோகத்தில் எங்களது அனுபவங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். உலகளாவிய தெற்கில் உள்ள பல்வேறு நாடுகளை யுபிஐ (யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ்) மூலம் இணைப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் நமது கூட்டணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, உலகளாவிய தெற்கு இளம் ராஜதந்திர மன்றமும் தொடங்கப்பட்டது. 'தக்ஷின்' எனப்படும் குளோபல் சவுத் எக்ஸலன்ஸ் சென்டர் நம்மிடையே திறன் வளர்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் பணியாற்றி வருகிறது.

நண்பர்கள்

உள்ளடக்கிய வளர்ச்சிக்கு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அதாவது டிபிஐயின் பங்களிப்பு, ஒரு புரட்சிக்கு சளைத்தது அல்ல. எங்கள் ஜி20 தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட உலகளாவிய டிபிஐ களஞ்சியம், டிபிஐ குறித்த முதல் பலதரப்பு ஒருமித்த கருத்தாகும்.

உலகளாவிய தெற்கைச் சேர்ந்த 12 கூட்டாளர்களுடன் "இந்தியா ஸ்டேக்"-ஐ பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய தெற்கில் டிபிஐ-ஐ துரிதப்படுத்த சமூக தாக்க நிதியத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதற்கு இந்தியா 25 மில்லியன் டாலர் ஆரம்ப பங்களிப்பை வழங்கும்.

நண்பர்களே,

ஒரே உலகம்-ஒரே ஆரோக்கியம் என்பதே சுகாதாரப் பாதுகாப்புக்கான எங்களது இயக்கம்; எங்கள் பார்வை - "ஆரோக்கிய மைத்ரி" அதாவது "ஆரோக்கியத்திற்கான நட்பு". ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு மருத்துவமனைகள், டயாலிசிஸ் இயந்திரங்கள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் 'மக்கள் மருந்தக மையங்கள்' ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்த நட்புறவை நாங்கள் பராமரித்து வருகிறோம்.

மனிதாபிமான நெருக்கடி காலங்களில், பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு அல்லது கென்யாவில் வெள்ள நெருக்கடி என எதுவாக இருந்தாலும், முதலில் பதிலளிப்பவராக இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு உதவுகிறது. காசா மற்றும் உக்ரைன் போன்ற மோதல் பகுதிகளில் மனிதாபிமான உதவிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.

நண்பர்களே,

உலகளாவிய தெற்கின் குரல் உச்சி மாநாடு என்பது இதுவரை கேள்விப்படாத மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு தளமாகும். நமது ஒற்றுமையில்தான் நமது பலம் அடங்கியுள்ளது என்று நான் நம்புகிறேன், இந்த ஒற்றுமையின் வலிமையுடன் நாம் ஒரு புதிய திசையை நோக்கி பயணிப்போம். எதிர்கால உச்சி மாநாடு அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ளது. இதற்குள், எதிர்காலத்திற்கான ஒப்பந்தம் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து நேர்மறையான அணுகுமுறையை எடுக்க முடியுமா? இந்த எண்ணங்களுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். இப்போது உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

மிகவும் நன்றி.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமரின் கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் கருத்துக்கள் இந்தியில் வழங்கப்பட்டன.

***

(Release ID: 2046224)

MM/KPG/KR


(Release ID: 2072341) Visitor Counter : 18