பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


இந்த பத்து ஆண்டுகள் உத்தராகண்டின் ஆண்டுகளாக இருக்கும்: பிரதமர்

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் உத்தராகண்ட் முதலிடத்தை எட்டியுள்ளது: பிரதமர்

'எளிதாக தொழில் தொடங்குதலில்'  'சாதனையாளர்கள்' பிரிவிலும், புத்தொழில் பிரிவில் 'தலைமை' பிரிவிலும் உத்தராகண்ட் இடம் பெற்றுள்ளது: பிரதமர்

ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய அரசின் உதவி தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது: பிரதமர்

மாநிலத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. மேலும் போக்குவரத்து இணைப்பு திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன: பிரதமர்

'துடிப்பான கிராமம்' திட்டத்தின் கீழ், எல்லையோர கிராமங்களை நாட்டின் 'முதல் கிராமங்களாக' அரசு கருதுகிறது. முன்பு இருந்தது போல் கடைசி கிராமங்களாக அல்ல: பிரதமர்

உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது-இது முழு நாடடிலும் விவாதிக்கப்படுகிறது: பிரதமர்

மாநிலத்தின் வளர்ச்சியையும் அடையாளத்தையும் வலுப்படுத்துவதற்காக மாநிலத்தின் மக்களுக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் யாத்ர

Posted On: 09 NOV 2024 12:11PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது  என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையின் கீழ் உத்தராகண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்னதைக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அந்தக் கனவுகளும், விருப்பங்களும் இன்று நனவாவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தற்போதைய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

தற்போதைய பத்து ஆண்டுகள் உத்தராகண்ட் மாநிலத்துக்கானது என்று குறிப்பிட்ட பிரதமர், பல நம்பிக்கைகள் கடந்த ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். வளர்ச்சியில் உத்தராகண்ட் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது எனவும் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது எனவும் குறிப்பிட்ட பிரதமர், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் அடிப்படையில் உத்தராகண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிவித்தார். 'எளிதாக வர்த்தகம் செய்தல்' பிரிவில் உத்தராகண்ட் 'சாதனையாளர்கள்' என்ற பிரிவிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் பிரிவில் 'தலைவர்கள்' என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். 2014-ல் ரூ.1.25 லட்சமாக இருந்த தனிநபர் வருமானம் ரூ.2.60 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 2014-ல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இளைஞர்கள், பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான தெளிவான அறிகுறியாக இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் 5 சதவீத வீடுகளில் இருந்து இன்று 96 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வசதி அதிகரித்துள்ளது என்றும், கிராமப்புற சாலைகள் கட்டுமானம் 6,000 கிலோமீட்டரிலிருந்து 20,000 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டுதல், மின்சார விநியோகம், எரிவாயு இணைப்புகள், இலவச சிகிச்சை ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அரசு துணை நிற்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கிய மானியம் ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவித்த பிரதமர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செயற்கைக்கோள் மையம், ட்ரோன் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம், உத்தம் சிங் நகரில் சிறிய தொழில் நகரியம் ஆகியவற்றை நிறுவி சாதனை படைக்கப்பட்டதையும் பட்டியலிட்டார். மாநிலத்தில் ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டத்தை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். உத்தரகண்டில் உள்ள 11 ரயில் நிலையங்கள் அம்ரித் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிவேக நெடுஞ்சாலை நிறைவடைந்த பின்னர் தில்லி - டேராடூன் இடையேயான பயண நேரம் 2.5 மணி நேரமாகக் குறையும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த வளர்ச்சி, மக்களின் இடப்பெயர்வையும் தடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

வளர்ச்சியுடன் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் அரசு செயல்படுகிறது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, கேதார்நாத் கோயிலில் பிரம்மாண்டமான, தெய்வீக புனரமைப்பு பணிகளைக் குறிப்பிட்டார். பத்ரிநாத் தாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார். மானஸ்கண்ட் மந்திர் மிஷன் மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 16 பழமையான கோயில்கள் தொடர்பான பணிகளையும் அவர் எடுத்துரைத்தார். அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலைகள் சார் தாம் யாத்திரையை எளிதாக்கியுள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார். பர்வத் மாலா திட்டத்தின் கீழ் மத, சுற்றுலா தலங்கள் ரோப்வேக்கள் மூலம் இணைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 'துடிப்பான கிராமம்' திட்டம் மனா கிராமத்திலிருந்து தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, முன்பு எல்லையோர கிராமங்கள் கடைசி கிராமங்களாகக் கருதப்பட்டதாகவும், இப்போது எல்லையோர கிராமங்களை நாட்டின் 'முதல் கிராமங்களாக' அரசு கருதுகிறது என்றும் அவர் கூறினார். துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ் 25 கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற முயற்சிகளின் விளைவாக உத்தராகண்டில் சுற்றுலா தொடர்பான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு 6 கோடி சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் உத்தராகண்ட் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளதாக அறிக்கையை திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஹோட்டல்கள், ஹோம்ஸ்டேக்கள், போக்குவரத்து முகவர்கள், வாடகை வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பயனடைந்த நிலையில், கடந்த ஆண்டு 54 லட்சம் யாத்ரீகர்கள் சார்தாமுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் 5000 க்கும் மேற்பட்ட ஹோம்ஸ்டேக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தராகண்டின் முடிவுகளும், கொள்கைகளும் தேசத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமைகின்றன என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக கள்ளநோட்டு எதிர்ப்புச் சட்டம் குறித்தும் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சேர்ப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

உத்தராகண்ட் மக்களுக்காக ஐந்து கோரிக்கைகளையும், மாநிலத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு நான்கு கோரிக்கைகளையும் பிரதமர் பட்டியலிட்டார். கர்வாலி, குமாவோனி, ஜான்சாரி போன்ற மொழிகளின் பாதுகாப்பை வலியுறுத்திய அவர், எதிர்கால சந்ததியினருக்கு மொழிகளை கற்பிக்குமாறு மாநில மக்களை வலியுறுத்தினார். இரண்டாவதாக, பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்த்துப் போராட 'அன்னையின் பெயரில் மரக்கன்று' நடும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு ஒவ்வொருவரையும் அவர் கேட்டுக்கொண்டார். மூன்றாவதாக, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், குடிநீர் சுகாதாரம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நான்காவதாக, மக்கள் தங்கள் பண்பாட்டு வேர்களோடு இணைந்திருக்க வேண்டும் எனவும் தங்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஐந்தாவதாக, மாநிலத்தில் உள்ள பாரம்பரிய வீடுகளின் பாதுகாப்பை வலியுறுத்திய அவர், அவற்றை ஹோம்ஸ்டேக்களாக மாற்ற பரிந்துரைத்தார்.

மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களுக்கான நான்கு கோரிக்கைகளை பட்டியலிட்டார். தூய்மையை பராமரிக்கவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவும், 'உள்ளூர் பொருட்களுக்கான குரல்' என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்த செலவில் குறைந்தது 5 சதவீதத்தை செலவிடவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், இறுதியாக ஆலயங்கள், மத இடங்களின் கண்ணியத்தை பராமரிக்கவும் அவர் வலியுறுத்தினார். உத்தராகண்ட் மாநிலம் தேவ பூமி என்ற தமது அடையாளத்தை வலுப்படுத்துவதில் இந்த 9 கோரிக்கைகள் பெரும் பங்காற்றும் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். தமது உரையை நிறைவு செய்த பிரதமர், நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் உத்தராகண்ட் பெரும் பங்காற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

*****

PLM/KV

 

 

 

 


(Release ID: 2071979) Visitor Counter : 28