பிரதமர் அலுவலகம்
மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
31 AUG 2024 1:41PM by PIB Chennai
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட் அவர்களே, நீதிபதி திரு. சஞ்சீவ் கண்ணா அவர்களே, நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களே, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி அவர்களே, உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் திரு. கபில் சிபல் அவர்களே, இந்திய பார் கவுன்சில் தலைவர் திரு. மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளே, மாவட்ட நீதிபதிகளே, இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
உங்களின் தீவிரமான பங்கேற்பு இந்த மாநாடு மிகவும் முக்கியமானதூ என்று என்னை உணர வைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவில் நான் கலந்து கொண்டேன். இன்று, உச்சநீதிமன்றப் பயணத்தின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு நடக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகால ஆட்சி என்பது ஒரு நிறுவனத்தின் பயணம் மட்டுமல்ல; இது இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களின் பயணம்! ஜனநாயக நாடாக முதிர்ச்சியடையும் பாரதத்தின் பயணம் இது! இந்தப் பயணத்தில் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், நீதித்துறையின் பல புகழ்பெற்ற நபர்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு சூழ்நிலையிலும், நீதித்துறை மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்த லட்சக்கணக்கான குடிமக்களின் பங்களிப்பும் இந்தப் பயணத்தில் அடங்கும். உச்ச நீதிமன்றத்தையும், நமது நீதித்துறையையும் பாரத மக்கள் ஒருபோதும் சந்தேகித்ததில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தின் இந்த 75 ஆண்டுகால வரலாறு, ஜனநாயகத்தின் தாய் என்ற பாரதத்தின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. நாடு சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் நிலையில், அது அரசியலமைப்பின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்க உள்ளது. எனவே, இந்த தருணத்தில் பெருமை, மகிமை மற்றும் உத்வேகம் உள்ளது. இந்தத் தருணத்தில் நான் சட்ட வல்லுநர்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நடைபெறவுள்ள தேசிய மாவட்ட நீதித்துறை மாநாட்டிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
நமது ஜனநாயகத்தில், நீதித்துறையானது அரசியலமைப்பின் பாதுகாவலராக கருதப்படுகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை நிறைவேற்ற உச்சநீதிமன்றமும், நமது நீதித்துறையும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்பதை நாம் பெருமையுடன் கூற முடியும். சுதந்திரத்திற்குப் பிறகு, நெருக்கடி நிலையின் இருண்ட காலத்திலும் நீதித்துறை நீதியின் உணர்வைப் பாதுகாத்தது. மேலும், தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்வி எழுந்த போதெல்லாம், நீதித்துறை எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனை உயர்த்திப் பிடித்து இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாத்தது. இத்தனை சாதனைகளுக்கிடையே, இந்த மறக்க முடியாத 75 ஆண்டுகளுக்காக அனைத்து அறிஞர்களையும் நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், நீதியை அணுகுவதற்கு நாடு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றங்களை நவீனமயமாக்குவதற்கான மட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதில் உச்ச நீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இன்று, மாவட்ட நீதித்துறையின் இந்த நிகழ்வு அதே முயற்சிக்கு மற்றொரு உதாரணமாகும். முன்னதாக, உச்ச நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் இணைந்து "அகில இந்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மாநாட்டை" ஏற்பாடு செய்திருந்தன. நீதியின் எளிமைக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை. அடுத்த இரண்டு நாட்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை நிர்வகித்தல், மனித வளம், சட்டத் துறையை மேம்படுத்துதல் போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. விவாதத்திற்குத் தேவையான அனைத்து தலைப்புகளையும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இவை அனைத்துடனும், அடுத்த இரண்டு நாட்களில் நீதித்துறை நல்வாழ்வு குறித்த அமர்வும் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நல்வாழ்வுக்கு தனிப்பட்ட ஆரோக்கியம் முதன்மையான தேவையாகும். இது நமது பணிக் கலாச்சாரத்தில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க உதவும்.
நண்பர்களே,
இந்த சுதந்திர அமிர்த காலத்தில், 140 கோடி இந்தியர்களின் கனவு வளர்ந்த இந்தியா மற்றும் 'புதிய இந்தியா' என்பதை நாம் அனைவரும் அறிவோம்! புதிய பாரதம் என்றால் சிந்தனையும் தீர்மானமும் கொண்ட நவீன பாரதம் என்று பொருள்! நமது நீதித்துறை, குறிப்பாக நமது மாவட்ட நீதித்துறை இந்த தொலைநோக்குப் பார்வையின் வலுவான தூணாக உள்ளது. மாவட்ட நீதித்துறை என்பது இந்திய நீதி அமைப்பின் அடித்தளமாகும். நாட்டின் சாதாரண குடிமகன் முதலில் நீதிக்காக உங்கள் கதவுகளைத் தட்டுகிறான். எனவே, இது நீதியின் முதல் மையம், முதல் படி. அதை முழுமையாக திறன்மிக்கதாகவும், நவீனமானதாகவும் மாற்றுவது நாட்டின் முன்னுரிமையாகும். இந்த தேசிய மாநாடு, அதன் விவாதங்களுடன், தேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள அளவுகோல் என்று ஏதாவது இருந்தால், அது சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரம்தான். சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரம் அவர்களின் எளிதான வாழ்க்கையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எளிய, அணுகக்கூடிய நீதி என்பது வாழ்க்கையை எளிதாக்குவதற்கு இன்றியமையாத நிபந்தனையாகும். நமது மாவட்ட நீதிமன்றங்களில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இன்று, சுமார் 4.5 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீதியின் இந்த தாமதத்தை அகற்ற கடந்த தசாப்தத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாடு கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நீதித்துறை உள்கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகையில் 75 சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த 10 ஆண்டுகளில் மட்டும், மாவட்ட நீதிபதிகளுக்காக 7,500 நீதிமன்ற அரங்கங்களும், 11,000 குடியிருப்பு அலகுகளும் கட்டப்பட்டுள்ளன.
நண்பர்களே,
சட்ட வல்லுநர்கள் மத்தியில் நான் வரும்போதெல்லாம், இ-நீதிமன்றங்கள் என்ற தலைப்பு இயல்பாகவே வருகிறது. இந்த தொழில்நுட்ப தலையீடு / கண்டுபிடிப்பு நீதித்துறை செயல்முறைகளை விரைவுபடுத்தியது மட்டுமல்லாமல், வழக்கறிஞர்கள் முதல் வழக்காடுபவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரைவாக குறைத்துள்ளது. இன்று, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, உச்ச நீதிமன்றத்தின் மின்னணுக் குழு இந்த அனைத்து முயற்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, முதல் முறையாக நமது சட்ட கட்டமைப்பில் இத்தகைய குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான மாற்றத்தை நாடு செய்துள்ளது. இந்திய நீதிச்சட்டம் என்ற பெயரில் புதிய இந்திய சட்டத் தொகுப்பை நாம் பெற்றிருக்கிறோம். இந்த சட்டங்களின் உணர்வு 'குடிமகன் முதலில், கண்ணியம் முதலில், மற்றும் நீதி முதலில்'. ஆட்சியாளர்கள் மற்றும் குடிமக்களின் காலனித்துவ மனநிலையிலிருந்து நமது குற்றவியல் சட்டங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசத்துரோகம் போன்ற ஆங்கிலேய சட்டங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. இந்தச் சட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதுடன் மட்டுமல்லாமல், குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் ஆகும். அதனால்தான், ஒருபுறம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன, மறுபுறம், முதல் முறையாக சிறிய குற்றங்களுக்கான தண்டனையாக சமூக சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டத்தின் கீழ், மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகள் இப்போது ஆதாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்போது மின்னணு முறையில் சம்மன் அனுப்பப்படலாம். இது நீதித்துறையின் நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமையை குறைக்கும். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்த புதிய அமைப்பில் மாவட்ட நீதித்துறைக்கு பயிற்சி அளிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே,
நாடும் சமூகமும் எதிர்கொண்டுள்ள மற்றுமொரு பிரச்சினையை நான் எழுப்ப விரும்புகிறேன். இன்று, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை சமூகத்தின் பெரும் கவலைகளாக உள்ளன. பெண்களின் பாதுகாப்புக்காக நாட்டில் பல்வேறு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில், விரைவான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ அரசு முன்மொழிந்தது. இதன் கீழ், முக்கிய சாட்சிகளுக்கு வாக்குமூல மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் இதிலும் முக்கிய பங்காற்ற முடியும். இந்தக் குழுவில் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுப்பினர்களாக உள்ளனர். குற்றவியல் நீதி அமைப்பின் வெவ்வேறு அம்சங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானது. இந்த குழுக்களை இன்னும் சுறுசுறுப்பானதாக மாற்ற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் விரைவான முடிவுகள் எடுக்கப்படுகின்றன, மக்கள் தொகையில் பாதி பேர் தங்கள் பாதுகாப்பில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
நண்பர்களே,
இங்கு நடைபெறும் கலந்துரையாடல்கள் நாட்டுக்கு மதிப்புமிக்க தீர்வுகளை வழங்கும் என்றும், 'அனைவருக்கும் நீதி' என்ற பாதை பலப்படுத்தப்படும் என்றும் நான் நம்புகிறேன். இந்த விவாதம் ஞானம் என்ற அமிர்தத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையுடன், இந்த புனிதமான விழா மற்றும் ஒன்றுகூடலுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி.
****
TS/PKV/KV
(Release ID: 2071124)
Visitor Counter : 19
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam