குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பெண் சாதனையாளர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்

Posted On: 04 NOV 2024 1:36PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 4, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த பெண்கள் குழுவினருடன் கலந்துரையாடினார். மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதையும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட 'மக்களுடன் குடியரசுத்தலைவர்" என்ற முன்முயற்சியின் கீழ் இந்த சந்திப்பு நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், பெண்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகக் கூறினார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களில் 15 சதவீதம் பெண்கள், விமானங்களை அனுப்புபவர்களில் 11 சதவீதம் பெண்கள் மற்றும் விண்வெளி பொறியாளர்களில் 9 சதவீதம் பெண்கள் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு வணிக உரிமங்களைப் பெற்ற விமானிகளில் 18 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். புதுமையாக சிந்திக்கும் மற்றும் புதிய பாதைகளில் நடக்கும் தைரியம் கொண்ட அனைத்து பெண் சாதனையாளர்களையும் அவர் பாராட்டினார்.

மத்திய அரசின் அனைவரையும் உள்ளடக்கிய முயற்சிகள், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதிகளவிலான பெண்கள் இப்போது விமானப் போக்குவரத்தை தங்கள் தொழிலாக தேர்வு செய்கிறார்கள். விமானத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதோடு, இந்தத் துறையில் முன்னேறும் சம வாய்ப்புகளும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் முறையான பயிற்சி தவிர, குடும்பத்தின் ஆதரவும் முக்கியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். குடும்பத்தின் ஆதரவு இல்லாததால், பல பெண்கள் உயர் கல்வி பெற்ற பிறகும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடிவதில்லை என்பதை அடிக்கடி காண முடிகிறது. பெண் சாதனையாளர்கள் மற்ற பெண்களுக்கு வழிகாட்டிகளாக மாற வேண்டும் என்றும், தங்கள் தொழில்களைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

----

(Release ID 2070552)

TS/MM/KPG/KR


(Release ID: 2070582) Visitor Counter : 46