உள்துறை அமைச்சகம்
பிரேசிலில் நடைபெற்ற ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டம்- இந்திய உயர்மட்டக் குழு பங்கேற்பு
Posted On:
02 NOV 2024 10:00AM by PIB Chennai
பிரேசிலின் பெலெம் நகரில் 2024 அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெற்ற ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழுவினர் பங்கேற்றனர்.
இதில் பேரிடர் அபாய குறைப்பு (டிஆர்ஆர்) குறித்த அமைச்சர்கள் நிலையிலான முதலாவது பிரகடனத்தை இறுதி செய்வதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. டாக்டர் பி.கே.மிஸ்ரா, பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் இந்திய அரசு அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்திய தலைமையின் போது அறிவிக்கப்பட்ட பேரிடர் அபாயக் குறைப்புக்கான இந்தியாவின் ஐந்து முன்னுரிமைகளான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு, பேரிடர் மறுசீரமைப்பு நிதி, நெகிழ்திறன் மீட்பு, இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பேரிடர் அபாயக் குறைப்பில் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை டாக்டர் பி.கே. மிஸ்ரா எடுத்துரைத்தார். பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பில், தற்போது 40 நாடுகள், 7 சர்வதேச அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள பிரதமரின் உலகளாவிய முன்முயற்சியான பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.
பிரேசில், தென்னாப்பிரிக்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இந்தியக் குழுவினர், மாநாட்டை நடத்தும் நாடான பிரேசில் மற்றும் ஜப்பான், நார்வே, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகளுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
பேரிடர் அபாயக் குறைப்புப் பணிக்குழு, இந்தியாவின் ஜி20 தலைமையின் போது இந்தியாவின் முன்முயற்சியில் நிறுவப்பட்டது. இந்தியாவின் செயல்பாடுகள், உலகளாவிய பேரிடர் மறுசீரமைப்பு முயற்சிகளில் அதன் வளர்ந்து வரும் பங்கையும், பாதுகாப்பான, அதிக நெகிழ்திறன் கொண்ட உலகத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
*****
AD/PLM/KV
(Release ID: 2070284)
Visitor Counter : 48
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam