பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, சீன மக்கள் குடியரசின் அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

Posted On: 23 OCT 2024 7:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024  அக்டோபர் 23 அன்று கசானில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன மக்கள் குடியரசின் அதிபர் திரு ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கான சமீபத்திய ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி, வேறுபாடுகள் மற்றும் மோதல்களை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிர்வகிப்பதை மேற்பார்வையிடவும், எல்லைப் பிரச்சனைக்கு நியாயமான, பொறுப்புமிக்க மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறியவும் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்தவும், மீண்டும் கட்டியமைக்கவும் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் இதர அதிகாரிகள் நிலையிலான பொருத்தமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டு அண்டை நாடுகள் மற்றும் உலகின் இரண்டு பெரிய நாடுகள் என்ற முறையில் இந்தியா, சீனா இடையேயான நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் இணக்கமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். இருதரப்பு உறவுகளை திட்டமிட்ட  மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். உத்தி சார்ந்த தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பைக் கண்டறிய வேண்டும் என்றும் தலைவர்கள் உறுதிபூண்டனர்.

***


TS/IR/RS/DL

 




(Release ID: 2067486) Visitor Counter : 21