பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரஷ்ய அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (அக்டோபர் 22, 2024)

Posted On: 22 OCT 2024 7:24PM by PIB Chennai

அதிபர் அவர்களே,

உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கசான் போன்ற அழகான நகரத்திற்கு வருகை தரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரம் இந்தியாவுடன் ஆழ்ந்த மற்றும் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. கசானில் ஒரு புதிய இந்திய தூதரகம் திறக்கப்படுவது இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

அதிபர் அவர்களே,

கடந்த மூன்று மாதங்களில் ரஷ்யாவுக்கு நான் மேற்கொண்ட இரண்டு பயணங்கள் நமது நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நட்புறவை பிரதிபலிக்கின்றன. ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் மூலம் ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது.

அதிபர் அவர்களே,

கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். கடந்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதன் தனித்துவமான அடையாளத்தை நிறுவியுள்ளது. இப்போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் அதில் இணைய விரும்புகின்றன. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

அதிபர் அவர்களே,

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்டது போல, பிரச்சினைகளின் தீர்வு அமைதியான வழிமுறைகள் மூலம் மட்டுமே களையப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். எங்கள் முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. எதிர்காலத்திலும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

அதிபர் அவர்களே,

இந்த அனைத்து அம்சங்களிலும் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இன்று மற்றொரு முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும், பல நன்றிகள்.

---

AD/IR/KPG/DL




(Release ID: 2067164) Visitor Counter : 32