பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

உலகம் முழுவதும் கவலையில் ஆழ்ந்திருந்தபோது, இந்தியா நம்பிக்கையை பரப்பியது: பிரதமர்

தற்போது இந்தியா ஒவ்வொரு துறையிலும், அனைத்துப் பகுதிகளிலும் இதுவரை இல்லாத வேகத்தில் பணியாற்றுகிறது:பிரதமர்

இந்தியா தற்போது வளரும் நாடாகவும், வல்லரசாகவும் உருவாகி வருகிறது: பிரதமர்

இந்தியா உலகின் மிக இளைய நாடுகளில் ஒன்றாகவும், மிகப் பெரிய உச்சத்தை எட்டும் ஆற்றல் பெற்றதாகவும் திகழ்கிறது:பிரதமர்

இந்தியா தற்போது முன்னேற்றகரமான சிந்தனைகளுடன் முன்னேறி வருகிறது:பிரதமர்

இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற 140 கோடி மக்களும் உறுதிபூண்டுள்ளனர், அவர்களே இதனை முன்னெடுத்துச் செல்கின்றனர்: பிரதமர்

இந்தியா இரட்டை செயற்கை நுண்ணறிவு சக்தியைப் பெற்றது, முதலாவது ஏஐ செயற்கை நுண்ணறிவையும், இரண்டாவது ஏஐ முன்னேற்றத்தை விரும்பும் இந்தியாவையும் குறிக்கும்: பிரதமர்

சாதாரண உறவுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்படுவதில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை தான் நமது உறவுகளின் அடித்தளம்: பிரதமர்

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியதன் வாயிலாக டிஜிட்டல் பொது கட்டமைப்புக்கு, உலகிற்கு இந்தியா புதி

Posted On: 21 OCT 2024 12:18PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று  என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும்  வரவேற்றதுடன்,  உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள்  தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த 4-5 ஆண்டுகளில் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சனைகள், பொதுவான கருத்தாக விவாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.  சமீபத்திய சவால்களான கொவிட் பெருந்தொற்று, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் & வேலைவாய்ப்பின்மை, பருவநிலை மாற்றம், நீடித்து வரும் போர்கள்,  விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அப்பாவி மக்கள் உயிரிழப்பு, புவி அரசியல் சார்ந்த பதற்றங்கள் மற்றும் மோதல்கள் அனைத்து உலகளாவிய உச்சிமாநாடுகளிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தியாவில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு இணையாக, இந்தியா தனக்கான நூற்றாண்டு என்பதை வெளிப்படுத்தி வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த யுகத்தில் இந்தியா, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது. உலகம் கவலையில் ஆழ்ந்திருந்த போது இந்தியா நம்பிக்கையைப் பரப்பியது” என பிரதமர் குறிப்பிட்டார். உலகளாவிய சூழல் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் காரணமாக இந்தியா பாதிக்கப்பட்டாலும், நேர்மறை உணர்வுடன் பணியாற்றுவதை காணமுடிகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியா  தற்போது ஒவ்வொரு துறையிலும்அனைத்துப் பகுதிகளிலும் இதுவரை இல்லாத வேகத்தில் பணியாற்றுகிறது” என்று பிரதமர் தெரிவித்தார். அரசின் 3-வது பதவிக் காலத்தின் 125 நாட்கள் பூர்த்தியாகியிருப்பதை  சுட்டிக்காட்டிய பிரதமர் திரு மோடி,  நாட்டில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நினைவு கூர்ந்தார். ஏழைகளுக்கு 3 கோடி பாதுகாப்பான வீடுகள் கட்ட அரசு ஒப்புதல் அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதுடன், 15 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதோடு, 8 புதிய விமான நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது, இளைஞர்களுக்காக 2 லட்சம் கோடி தொகுப்புத் திட்டம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 21,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சைத் திட்டம், 5 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தித் தகடுகள் பொருத்தம், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ், 90 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பது, 12 புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க ஒப்புதல், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 5-7% வளர்ச்சி மற்றும் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலராக உயர்வு உள்ளிட்டவற்றை அவர் பட்டியலிட்டார்.  கடந்த 125 நாட்களில் இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச நிகழ்ச்சிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சர்வதேச எஸ்எம்யு, உலகளாவிய நிதித் தொழில்நுட்பத் திருவிழா, உலகளாவிய குறைகடத்தி சூழலியல் பற்றிய விவாதம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்தார். “இது நிகழ்வுகளின் பட்டியல் மட்டுமல்ல, மாறாக இந்தியாவுடன் இணைந்த  நம்பிக்கையின் பட்டியல் என்பதோடு, நாடு செல்லும் பாதையையும், உலகின் நம்பிக்கையையும்” எடுத்துக்காட்டுவதாக கூறிய பிரதமர், இவை  உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பிரச்சனை என்பதோடு, இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வரும் அம்சங்கள் என்றும் தெரிவித்தார்.

அரசின் 3-வது பதவிக் காலத்தில்  இந்தியாவின் வளர்ச்சி இதுவரை இல்லாத அளவு வேகம் பெற்றுள்ளதால், பல்வேறு தர  மதிப்பீடு முகமைகளும், இந்தியாவின் வளர்ச்சி பற்றிய தங்களது கண்ணோட்டத்தை அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். மார்க் மோபியஸ் போன்ற நிபுணர்களின் உற்சாகத்தை சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிபுணர்கள் உலக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை குறைந்தது 50%-ஐ இந்தியாவின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம் என கூறியிருப்பதையும் எடுத்துரைத்தார். “அவரைப் போன்ற பிரபலமான நிபுணர்கள், இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய யோசனை கூறியிருப்பது, நமது திறமை குறித்த உறுதியான செய்தியை எடுத்துரைத்திருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போதைய இந்தியா வளரும் நாடாகவும், வல்லரசு நாடாகவும் உருவாகி வருகிறது” என்று கூறிய  பிரதமர், வறுமையால் ஏற்படும் சவால்களை இந்தியா உணர்ந்திருப்பதுடன், வளர்ச்சிக்கான பாதையை எவ்வாறு வகுப்பது என்பதையும் அறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.  கொள்கை உருவாக்கம், முடிவெடுத்தல் மற்றும் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசின் வேகத்தையும் அவர் எடுத்துரைத்தார். மனநிறைவு பற்றி குறிப்பிட்ட பிரதமர்,  இத்தகைய மனப்பாங்கு நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல உதவாது என்றார்.  கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள்  வறுமையிலிருந்து விடுபட்டிருப்பதோடு, 12 கோடி நவீனக் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதுடன்,  16 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவும் போதாது என்று பிரதமர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 350-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியிருப்பதுடன், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தொழில்கள் தொடங்கப்பட்டு, 8 கோடி இளைஞர்களுக்கு முத்ரா கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “இதுவும் போதாது” என்று கூறிய பிரதமர், இந்திய இளைஞர்கள் தொடர்ந்து முன்னேற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். உலகின் மிக இளைய  நாடுகளில் ஒன்று என்ற திறமை, நம்மை மிகப் பெரிய உச்சத்திற்கு கொண்டு செல்வதோடு,  விரைவாகவும் திறம் படவும் மேலும் பல சாதனைகைளை எட்டுவோம்  என்றும் அவர் கூறினார்.

நாட்டின் மனப்பான்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அரசுகள் தங்களது சாதனைகளை முந்தைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுவதை நினைவு கூர்ந்ததுடன் 10-15 ஆண்டுகளுக்கு  பின்னோக்கிப் பார்ப்பதைவிட  சாதனைகளால் அவற்றை வெல்லும் காலம் தான் இருந்தததாக தெரிவித்தார்.  ஆனால் இத்தகைய அணுகுமுறையையும் இந்தியா மாற்றியிருப்பதுடன் வெற்றி என்பதை சாதனைகளால் மட்டும் வெகு நாட்களுக்கு மதிப்பிட முடியாது என்றும், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதுதான் சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையால், நாடு தற்போது எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையுடன் முன்னேறி வருவதாக பிரதமர் கூறினார். “2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற நமது குறிக்கோள்,  அரசின் தொலைநோக்கு மட்டுமல்லாமல், 140 கோடி இந்தியர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கக் கூடியது.  இது இனியும் பொதுமக்கள் பங்கேற்கும் இயக்கமாக மட்டுமல்லாமல், தேசத்தின் மீது நம்பக்கை இயக்கமாக திகழும்” என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.   வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்கு ஆவணத்தை அரசு  தயாரிக்கத் தொடங்கியபோது லட்சக்கணக்கான மக்கள் தங்களது யோசனைகளை பகிர்ந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார்.  பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில்  ஆலோசித்து விவாதிக்கப்பட்டதுடன்,  அதில் கிடைத்த உள்ளீடு அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை அரசு நிர்ணயித்ததாக அவர் கூறினார்.  “தற்போது வளர்ச்சியடைந்த இந்தியா பற்றிய விவாதங்கள்  நமது தேச உணர்வின் ஒரு அங்கமாக மாறியிருப்பதோடு, மக்கள் சக்தியை தேசத்தின் வலிமையாக மாற்றியமைத்திருப்பதற்கு உண்மையான உதாரணம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு பற்றி குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய யுகம் செயற்கை நுண்ணிறிவுக்கானது என்றும், தற்போதைய மற்றும் எதிர்கால உலகம் செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.  இந்தியா இரட்டை செயற்கை நுண்ணறிவு சக்தியைப் பெற்றது, முதலாவது  ஏஐ, செயற்கை நுண்ணறிவையும், இரண்டாவது ஏஐ, முன்னேற்றத்தை விரும்பும் இந்தியாவைக் குறிப்பதாகவும் அவர் கூறினார். முன்னேற்றத்தை விரும்பும் இந்தியாவின் சக்தியும், செயற்கை நுண்ணறிவும் சேரும் போது, வளர்ச்சிப் பணிகள் வேகமெடுப்பது இயற்கையானதாக அமைந்துவிடும் என்றும் திரு மோடி தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தொழில்நுட்பமாக மட்டுமல்லாது, இந்திய இளைஞர்களுக்கான புதிய வாய்ப்பின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு இயக்கம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சுகாதார சேவை, கல்வி மற்றும் புத்தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை  அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். “உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்க இந்தியா உறுதி பூண்டிருப்பதுடன், குவாட் போன்ற அமைப்புகள் வாயிலாக, இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான குறிப்பிடத்தக்க முன்முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார். முன்னேற்றத்தை விரும்பும் இந்தியா மீது கவனம் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினர், சாமானிய மக்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், சிறு தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு   அதிகாரமளித்தல், அரசின்  கொள்கை தயாரிப்பில்  பிரதான இடம் வகிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். சாலை இணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், தேசத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சிறந்த உதாரணம் என்பதோடு விரைவான, உள்ளடக்கிய இணைப்பு வசதிகள் மீது அரசு கவனம் செலுத்துவதாகவும், இவை இந்தியா போன்ற  பரந்து விரிந்த மற்றும் பன்முக தன்மை கொண்ட சமுதாயத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். இதன் காரணமாக விமானப் போக்குவரத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.  குறைந்த கட்டணத்தில் விமானப்பயணம் என்ற தமது தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்த அவர், ‘ஹவாய் செருப்பு’ அணிபவரும், குறைந்த செலவில் விமானப் பயணம் மேற்கொள்ள வழிவகுக்கும் உடான் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.  2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் புதிய விமான நிலைய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக, சாமானிய மக்களும் விமானப் பயணம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். உடான் திட்டத்தின் வெற்றி பற்றி குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தின் கீழ், சுமார் 3 லட்சம் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை சுமார் 1.5 கோடி சாமானிய மக்கள் பயணம் செய்திருப்பதாகவும் கூறினார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிய நகரங்களை இணைக்கும் வகையில், 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 2014-க்கு முன்பு 70 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 150-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக மாறும் வகையில் இந்தியாவின் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.  கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு குறித்த அரசின் கவனத்தை அவர் பட்டியலிட்டார்.  கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலன் தற்போது கண்கூடாக தெரிகிறது எனக்  குறிப்பிட்ட அவர், ஆராய்ச்சியின் தரத்தில் உலகளவில் இந்தியா மிகப்பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதை குறிப்பிட்டார்.  அண்மையில் நடைபெற்ற டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையில் இது பிரதிபலிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  கடந்த 8-9 ஆண்டுகளில் சர்வதேச தரவரிசையில் இந்திய பல்கலைக் கழகங்களின் பங்களிப்பு 30-லிருந்து 100-ஆக உயர்ந்திருப்பதை அவர் குறிப்பிட்டார்.    கடந்த 10 ஆண்டுகளில் க்யூ எஸ் உலக பல்கலைக் கழக தரவரிசையில் இந்தியாவின் இருப்பு 300 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். காப்புரிமை மற்றும் வணிக முத்திரைகளுக்காக இந்தியா விண்ணப்பித்திருப்பது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.    ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான உலக மையமாக இந்தியா வேகமாக மாறி வருவதை சுட்டிக்காட்டிய அவர், உலகம் முழுவதும் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் தங்களது ஆராய்ச்சி மையங்களை உருவாக்கியிருப்பதையும், நாட்டின் புத்தொழில் சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதையும் குறிப்பிட்டார். 

உலகளவில் இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடாக உயர்ந்து வருவதை எடுத்துக்காட்டிய திரு மோடி, பல துறைகளில் உலகளாவிய எதிர்காலத்திற்கான திசையை வழங்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக குறிப்பிட்டார்.  இது கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் பிரதிபலித்ததை சுட்டிக்காட்டிய அவர்,  அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றில் இந்தியாவின் திறனை வைத்து கோடிக்கணக்கான டாலர்களை இந்தியா சம்பாதித்திருக்க முடியும் என்று தெரிவித்தார்.   அப்படி டாலர்களை சம்பாதித்திருந்தால் இந்தியாவுக்கு பலன் கிடைத்திருக்கலாம், ஆனால் மனிதநேயம் பட்டுப்போயிருக்கும், இது நமது மதிப்புகளுக்கு பொருந்தாது, அதனால்தான் உயிர்காக்கும் மருந்துகளை நுாற்றுக்கணக்கான நாடுகளுக்கு இத்தகைய பெரும் சவாலான காலங்களில்  நாம் விநியோகித்திருக்கிறோம் என்று திரு மோடி கூறினார்.    மிகவும் நெருக்கடியான தருணங்களில் உலகத்திற்கு இந்தியாவால் உதவ முடிந்திருப்பது குறித்து, தாம் மன நிறைவு அடைந்ததாக அவர் கூறினார்.  வலுவான சர்வதேச உறவுகளை கட்டமைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் உறவுகள் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டது என்று தெரிவித்தார்.  உறவுகளை வலுப்படுத்துவதில் ஆதாயம் பார்ப்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், உலகமும் இதைப் புரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.  உலகத்தின் பிற நாடுகளுடன் இந்தியா நல்லிணக்கம் கொண்டிருப்பதை  சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியாவின் முன்னேற்றம் என்பது எந்த நாட்டிற்கும் பொறாமையையோ, பகைமையையோ ஏற்படுத்தாது என குறிப்பிட்டார்.  நமது முன்னேற்றத்திலிருந்து உலகம் மகிழ்ச்சி அடைகிறது என்று கூறிய அவர், ஏனெனில் நமது முன்னேற்றத்தின் மூலம் உலகம் பலனடைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.  உலகிற்கு இந்தியாவின் வளமான பங்களிப்பை சுட்டிக்காட்டிய திரு மோடி, கடந்த காலங்களில்  உலக வளர்ச்சியை  அதிகரிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்கை இந்தியா ஆற்றியுள்ளது எனக் குறிப்பிட்டார்.   இந்தியாவின்  லட்சியங்கள், புத்தாக்கங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவை பல நுாற்றாண்டுகளாக உலகின் அழியாத முத்திரையாக திகழ்கிறது என அவர் கூறினார்.  காலனி ஆதிக்கம் காரணமாக, தொழில் புரட்சியின்  பயனை இந்தியாவால் பெற முடியவில்லை என்று கூறிய பிரதமர், இது தொழில் புரட்சி 4.0 யுகம் என்றும்,  இந்தியா இப்போது அடிமையில்லை என்றும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும், எனவே இப்போது இதற்கு நாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில் புரட்சி 4.0-வுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு, திறன்களுடன் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதாக பிரதமர் கூறினார்.   கடந்த 10 ஆண்டு காலத்தில், ஜி 20, ஜி 7 உச்சிமாநாடுகள் உட்பட  பல்வேறு உலகத் தளங்களில்  தாம் பங்கேற்றிருப்பதை  அவர் சுட்டிக்காட்டினார்.  அந்த மேடைகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.   இன்று உலகமே இந்தியாவின் டிபிஐ-ஐ கண்டு உற்றுநோக்கி வருவதாக  அவர் தெரிவித்தார்.  பால் ரோமருடன் தமது சந்திப்பைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் ஆதார், டிஜிலாக்கர் போன்ற புத்தாக்கங்களை அவர் பாராட்டியதாக தெரிவித்தார்.  இணைய தள யுகத்தில் இந்தியா முதலில் பலன் பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.  நாட்டின் தனியார் தளங்கள், டிஜிட்டல் வெளியில் முன்னணி வகித்ததை அவர் எடுத்துக்காட்டினார்.  தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி உலகிற்கு புதிய மாதிரியை இந்தியா வழங்கியிருப்பதாக கூறிய அவர், ஜன்தன், ஆதார், மொபைல் இணைப்பு, விரைவான, கசிவற்ற சேவை வளங்களை அளித்ததாக தெரிவித்தார்.  500 மில்லியன் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாக கூறிய அவர், இந்த சாதனையில் பெருநிறுவனங்கள் இல்லை என்றும், நமது சிறு வணிகர்கள், வீதியோர வியாபாரிகள் தான் இதற்கு மூலகாரணம் என்றும் கூறினார்.  உள்கட்டமைப்பு திட்ட கட்டுமானத்தில் உள்ள  தேக்க நிலையை பிரதமரின் விரைவு சக்தி தளம் அகற்றியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இந்த உள்கட்டமைப்பு கட்டுமானம் தளவாடப் போக்குவரத்து சூழலை மாற்றுவதில் பேருதவி புரிந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.  இதேபோல, ஒஎன்டிசி தளம், ஆன்லைன் சில்லரை வணிகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன் ஜனநாயகப்படுத்தும் புத்தாக்கத்தை வழங்கி இருப்பதாக அவர் கூறினார்.  டிஜிட்டல் புத்தாக்கம், ஜனநாயக மாண்புகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதை இந்தியா பிரதிபலிக்கிறது என திரு மோடி தெரிவித்தார்.  அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான அதிகாரமளித்தலுக்கு தொழில்நுட்பம் ஒரு கருவியாக பயன்படுகிறது. 

மனித வரலாற்றில் 21 ஆம் நுாற்றாண்டு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலமாக கருதப்படுகிறது என்று தெரிவித்த திரு மோடி, நிலைத்தன்மை, தீர்வுகள் ஆகியவற்றை  பராமரிப்பது, இன்றைய யுகத்தின் அவசர தேவை என்று கூறினார்.  மனிதநேயத்திற்கான சிறப்பான எதிர்காலத்திற்கு இந்த அம்சங்கள் அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், இதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார்.  இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆதரவை எடுத்துக்காட்டிய அவர், தொடர்ச்சியாக 3 வது முறையாக அரசை வழிநடத்திச் செல்ல அவர்கள் வாய்ப்பு வழங்கியிருப்பதாகவும், 60 ஆண்டுகளில் முதன் முறையாக நிலைத்தன்மை அவசியம் என்ற வலுவான செய்தியை மக்கள் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.  மக்களின் இந்த உணர்வு அண்மையில் நடைபெற்ற ஹரியானா தேர்தலிலும் பிரதிபலித்ததை அவர் சுட்டிக்காட்டினார். 

பருவநிலை மாற்றம் என்னும் உலக நெருக்கடிப் பற்றி பேசிய பிரதமர்,  மனித குலம் முழுவதும் எதிர்கொள்ளும்  சிக்கல் இது என்று தெரிவித்தார்.  பருவநிலை மாற்ற சவாலில் இந்தியாவின் குறைந்த அளவிலான பங்களிப்பு இருந்த போதிலும், அதனை எதிர்கொள்வதில் நாடு முன்னணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.  வளர்ச்சியின் முக்கிய அம்சமாக பசுமை மாற்றத்தை அரசு  உருவாக்கி இருப்பதாக  தெரிவித்த திரு மோடி, இந்தியாவின் வளர்ச்சி திட்டமிடுதலில் நிலைத்தன்மை முக்கிய அம்சம் என்று விளக்கினார்.  பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், வேளாண்மைக்கான சூரிய சக்தி பம்ப் திட்டங்கள், மின்சார வாகனப் புரட்சி, எத்தனால் கலவைத்திட்டம், மிகப்பெருமளவிலான காற்றாலை சக்தி பண்ணைகள், எல்இடி விளக்கு இயக்கம், சூரிய சக்தியால் இயக்கப்படும் விமான நிலையங்கள், உயிரி எரிவாயு நிலையங்கள் என பல்வேறு எடுத்துக்காட்டுகளை  அவர் வழங்கினார்.  இந்த ஒவ்வொரு திட்டமும் பசுமை எதிர்காலம், பசுமை வேலைகளுக்கான வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிலைத்தன்மை மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றுடன் உலகின் சவால்களை சமாளிக்க தீர்வுகளை வழங்குவதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.  கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய சவால்களை முறியடிக்க தேவையான எண்ணற்ற முன்முயற்சிகளை இந்தியா மேற்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.  சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, வலுவான பேரிடர் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, இந்தியா- மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடம், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, யோகா, ஆயுர்வேதம், லைப் இயக்கம், சிறுதானிய இயக்கம்  ஆகியவை இதில் அடங்கும்.    இந்த முன்முயற்சிகள் அனைத்தும் உலகை அழுத்தும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக் குறித்து பெருமிதம் தெரிவித்த பிரதமர், “இந்தியா முன்னேறும் போது உலகம் அதைவிட அதிகமாக பயனடையும்” என்று தெரிவித்தார்.  இந்தியாவின் நுாற்றாண்டாக இந்த நுாற்றாண்டு மாறுவது, மனித குலம் அனைத்திற்குமான வெற்றியாக இருக்கும் என எதிர்காலம் பற்றிய தொலைநோக்கை அவர் வெளியிட்டார்.  இந்தியாவின் நுாற்றாண்டு ஒவ்வொருவரின் திறமை மற்றும் புத்தாக்கங்களால் செழுமைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.  உலகில் நிலைத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என பிரதமர் வலியுறுத்தினார்.  இந்தியாவின் முன்முயற்சிகள் மிகவும் நிலையான உலகம் மற்றும் உலக அமைதியை உயர்த்துவதற்கான நுாற்றாண்டாக இது திகழும் என்று கூறி திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

*******************

PKV/MM/KV/KPG/KR

(Release ID: 2066613)

 

 




(Release ID: 2066678) Visitor Counter : 31