பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவாட் தலைவர்களின் புற்றுநோய் மூன்ஷாட் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 SEP 2024 5:16AM by PIB Chennai

மேதகு தலைவர்களே,

இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அதிபர் பைடனை நான் மனதாரப் பாராட்டுகிறேன். மலிவான, எளிதில் அணுகக்கூடிய, தரமான சுகாதாரப் பராமரிப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. கொவிட் தொற்றுநோயின் போது, இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்திற்கான "குவாட் தடுப்பூசி முன்முயற்சியை" நாங்கள் தொடங்கினோம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சவாலை சமாளிக்க குவாட் அமைப்பில் நாம் கூட்டாக செயல்பட முடிவு செய்துள்ளோம் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

புற்றுநோயைக் குணப்படுத்த கவனிப்பும் ஒத்துழைப்பும்  அவசியம். புற்றுநோயின் சுமையை குறைக்க தடுப்பு, பரிசோதித்தல், நோயறிதல், சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். இந்தியாவில் பெரிய அளவில் மிகவும் செலவு குறைந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதித்தல் திட்டம் நடந்து வருகிறது. கூடுதலாக, உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தையும் இந்தியா செயல்படுத்துகிறது. அனைவருக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க சிறப்பு மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு இந்தியா தனது சொந்த தடுப்பூசியையும் உருவாக்கியுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய சிகிச்சைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேதகு தலைவர்களே,

இந்தியா தனது அனுபவத்தையும்  நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. புற்றுநோய் பராமரிப்பில் பணியாற்றும் பல நிபுணர்கள் இன்று, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து எங்களுடன் இணைந்துள்ளனர். இந்தியாவின் தொலைநோக்கு பார்வை "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்" என்பதாகும். இந்த உணர்வில், குவாட் மூன்ஷாட் முன்முயற்சியின் கீழ் ரத்த மாதிரி சேகரிக்கும் கருவிப் பெட்டிகள், நோய் கண்டறிதல் கருவிப் பெட்டிகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எங்கள் பங்களிப்பாக  7.5 மில்லியன் டாலரை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

தடுப்பூசிக் கூட்டணி, க்வாட் ஆகியவற்றின் முன்முயற்சிகள் மூலம், இந்தோ-பசிஃபிக் நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை இந்தியா வழங்கும் என்பதைப்  பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த 40 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியாக மாறுவதை நீங்கள் காண முடியும். குவாட் செயல்பாடு நாடுகளுக்கானது மட்டுமல்ல -  மக்களுக்கானது. இதுதான் மனிதனை மையமாகக் கொண்ட நமது அணுகுமுறையின் உண்மையான சாராம்சமாகும்.

நன்றி 

 

***** 


SMB/KV



(Release ID: 2064508) Visitor Counter : 13