திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
மும்பையில் இந்திய திறன் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
Posted On:
09 OCT 2024 7:13PM by PIB Chennai
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.10.2024) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக, இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தை (ஐஐஎஸ்) பிரதமர் திறந்து வைத்தார், இது 4-வது தொழில்துறைப் புரட்சிக்கு ஏற்ற தொழிலாளர் படைய உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் உற்பத்தி, மெக்கட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்களை மேம்படுத்த இந்நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கும்.
பொது-தனியார் ஒத்துழைப்பு மாதிரியின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த நிறுவனம், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கும், டாடா ஐஐஎஸ்-க்கும் இடையேயான ஒத்துழைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தன்னம்பிக்கை நிரம்பியிருந்தால் மட்டுமே ஒரு நாட்டின் மீது உலகம் நம்பிக்கை வைக்கும் என்றார். இளைஞர்கள் நிறைந்த இன்றைய இந்தியாவின் நம்பிக்கை தேசத்தின் புதிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் பரந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் இவற்றில் குறிப்பிடத்தக்க மையமாக இந்தியாவை உலக சமூகம் பார்க்கிறது என்றும் பிரதமர் கூறினார்.இந்த வாய்ப்புகளுக்கு இந்திய இளைஞர்களைத் தயார்படுத்த, உலகத் தரத்திற்கு ஏற்ப அவர்களின் திறன்களை அரசு மேம்படுத்தி வருகிறது என்று பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி, 'உலகின் திறன் தலைமையிடமாக இந்தியாவை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை இது போன்ற நிறுவனங்கள் நனவாக்கும் என்றார். இந்த நிறுவனம் இந்தியாவிற்குள் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய சந்தைகளில் இந்திய இளைஞர்கள் போட்டியிடவும் வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் கூறினார்.
மும்பையின் சுனாபட்டியில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்திற்குள் (என்எஸ்டிஐ) 4 ஏக்கர் பரப்பளவில் ஐஐஎஸ் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் நேரடிப் பயிற்சிகளை வழங்கி பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இது அமைக்கப்பட்டுள்ளது.
****
PLM/KPG/DL
(Release ID: 2063660)
Visitor Counter : 44