சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் வசதியான பயணம் தொடர்பான 'ஹம்சஃபர் கொள்கை' - மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டார்
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பான, இனிமையான பயண அனுபவத்தை வழங்குவதே ஹம்சஃபர் கொள்கையின் நோக்கம்: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி
Posted On:
08 OCT 2024 4:08PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், வடிவமைக்கப்பட்ட 'ஹம்சஃபர் கொள்கையை' மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி புதுதில்லியில் இன்று வெளியிட்டார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு அஜய் தம்தா, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, இந்த முயற்சியின் மூலம் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினர் பயனடைவார்கள் என்றார். பயணிகளுக்கு சுமூகமான, பாதுகாப்பான, இனிமையான பயணத்தை எளிதாக்க இந்தத் திட்டம் உதவும் என்று அவர் சுட்டிக் காட்டினார். தூய்மையை மேம்படுத்துவதுடன் நீர் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, சூரிய சக்தி போன்றவை இந்த கொள்கையை உருவாக்கும்போது மனதில் கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
இந்தக் கொள்கையின் மூலம் பயணிகளுக்கு தரமான சேவையை உறுதி செய்யுமாறு அமைச்சக அதிகாரிகளை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல பசுமை நெடுஞ்சாலைகள் பல வசதிகளை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க்கில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த கொள்கையின் கீழ் உணவு வளாகம், சிற்றுண்டிச்சாலை, எரிபொருள் நிலையம், மின்சார வாகன சார்ஜிங் நிலையம், பார்க்கிங் வசதிகள், கழிப்பறை வசதி, குழந்தைகள் பராமரிப்பு அறை, ஏடிஎம் மையம், வாகன பழுதுபார்க்கும் மையம், மருந்தக சேவைகள் ஆகியவை தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு அஜய் தம்தா பேசுகையில், நாட்டில் 1.5 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் நாட்டில் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிகப் பெரிய அளவில் மேம்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, இணையமைச்சர் திரு. அஜய் தம்தா ஆகியோர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டனர்.
தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு சேவை வழங்குநர்களை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதை இந்த ஹம்சஃபர் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. உணவகங்கள், எரிபொருள் நிலையம், அவசர சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை தொடர்பான சேவை வழங்குநர்கள் ஹம்சஃபர் கொள்கையின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பயணிகளுக்கு உயர்தர வசதிகளை வழங்குவதன் மூலமும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலமும் உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதில் 'ஹம்சஃபர் கொள்கை' முக்கியப் பங்காற்றும்.
***
(Release ID: 2063189)
PLM/RR/KR
(Release ID: 2063207)
Visitor Counter : 57