உள்துறை அமைச்சகம்
குஜராத்தில் 919 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
Posted On:
03 OCT 2024 6:28PM by PIB Chennai
குஜராத்தில் அகமதாபாத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் உட்பட 919 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
நவராத்திரி வாழ்த்துக்களுடன் தமது உரையைத் தொடங்கிய திரு அமித் ஷா, இன்று, 919 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, சுகாதாரம், கல்வி, நூலகங்கள், பூங்காக்கள் மற்றும் சிறிய சாலையோர வியாபாரிகள் தொடர்பான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சியின் முயற்சிகள் காரணமாக, தனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து நகராட்சி தொடக்கப் பள்ளிகளும் வெற்றிகரமாக மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று தமது நன்றியை அவர் தெரிவித்தார்.
ஆரம்பக் கல்விக் குழுவின் முன்முயற்சிகளால் குழந்தைகள் முறையாக பயனடைந்தால், இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
காந்திநகர் மக்களவைத் தொகுதியில் இன்று சுமார் 472 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார். இந்த வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் அகமதாபாத் நகரில் வசிப்பவர்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், கடந்த சில ஆண்டுகளில், அகமதாபாத் நகரம், கலோல் மற்றும் சனந்த் தாலுகா, அகமதாபாத் நகரின் சில பகுதிகள் மற்றும் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் 23,951 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று திரு ஷா மேலும் கூறினார். மேலும், 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்றும் அவர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் மொத்தம் 37,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
அகமதாபாத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஏராளமான வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மையில் முதலிடத்தை அடைவதற்கு அகமதாபாத்தை உருவாக்க ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மகாத்மா காந்திக்குப் பிறகு, தூய்மை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய ஒரே தேசியத் தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கனவு கண்டார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த இயக்கத்தைத் தொடங்கினார். செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து கழிப்பறைகள் கட்டுவது குறித்து பேசிய ஒரே பிரதமர் திரு நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
நாகாலாந்து முதல் கேரளா வரையிலும், உத்தரப்பிரதேசம் முதல் அசாம் வரையிலும் நாடு முழுவதும் தூய்மை இயக்கம் மற்றும் அதன் விழுமியங்களை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி பாடுபட்டுள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061610
----------
LKS/RS/DL
(Release ID: 2061652)
Visitor Counter : 46