பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 02 OCT 2024 7:20PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திரு மனோகர் லால் அவர்களே, திரு சி.ஆர். பாட்டீல் அவர்களே, திரு டோகான் சாஹு அவர்களே, திரு.ராஜ் பூஷண் அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி  ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின்  இந்த மகத்தான புதல்வர்களுக்கு  நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

நண்பர்களே,

இந்த அக்டோபர்  2 அன்று நான் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும்  என் கடமை உணர்வு என்னுள் நிறைந்திருக்கிறது. . தூய்மை இந்தியா திட்டத்தின் 10-வது ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தின் இந்தப் பயணம் கோடிக்கணக்கான இந்தியர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் அடையாளமாகும். கடந்த 10 ஆண்டுகளில், எண்ணற்ற இந்தியர்கள் இந்த பணியை ஏற்று , அதை தங்கள் சொந்தமாக்கி, தங்கள் அன்றாட வாழ்க்கையில் இணைத்துள்ளனர். இந்த 10-வது ஆண்டு வரலாற்றில், ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தூய்மைப் பணியாளர்களுக்கும், நமது மதத் தலைவர்களுக்கும், நமது விளையாட்டு வீரர்களுக்கும், நமது பிரபலங்களுக்கும், நமது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தை இத்தனை பெரிய பொது இயக்கமாக மாற்றியிருக்கிறீர்கள். நாட்டுக்கு உத்வேகம் அளித்து, தூய்மை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்களித்த முன்னாள், இந்நாள் குடியரசுத்தலைவர்கள் , குடியரசு துணைத்தலைவர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இன்று, நாடு முழுவதும் தூய்மை தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மக்கள் தங்கள் கிராமங்கள், நகரங்கள், சுற்றுப்புறங்கள்அடுக்குமாடி குடியிருப்புகள், சமூகங்கள் என எதுவாக இருந்தாலும் உற்சாகமாக சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு முன்னிலை வகிக்கின்றனர். கடந்த பதினைந்து நாட்களில் மட்டும், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தூய்மை இயக்கங்களில் பங்கேற்றுள்ளனர். சேவை இருவார விழாவின் 15 நாட்களில், நாடு முழுவதும் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 28 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தொடர் முயற்சிகளால் மட்டுமே பாரதத்தை தூய்மையாக வைத்திருக்க முடியும். ஒவ்வொரு இந்தியருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த முக்கியமான காலகட்டத்தில், தூய்மை தொடர்பான சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அம்ருத் இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் பல நகரங்களில் நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும். "நமாமி கங்கா" தொடர்பான பணியாக இருந்தாலும்  "கோபர்தான்" ஆலைகள் மூலம் கழிவுகளில் இருந்து சாண எரிவாயு உற்பத்தி செய்வதாக இருந்தாலும், இந்த முன்முயற்சிகள் தூய்மை இந்தியா இயக்கத்தை புதிய உச்சத்திற்கு உயர்த்தும். தூய்மை இந்தியா இயக்கம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ, அந்த அளவுக்கு நமது நாடு பிரகாசமாக ஒளிரும்.

நண்பர்களே,

இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்குப் பின், 21ஆம் நூற்றாண்டின் பாரதம் பற்றி ஆய்வு செய்யப்படும் போது, தூய்மை இந்தியா இயக்கம் நினைவுகூரப்படும் என்பதில் ஐயமில்லை. தூய்மை இந்தியா என்பது இந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய, மிகவும் வெற்றிகரமான, மக்கள் தலைமையிலான, மக்களால் இயக்கப்படும் பொது இயக்கமாகும். தெய்வீகமாக நான் கருதும் மக்களின் ஆற்றலை இந்த இயக்கம் எனக்குக் காட்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை, தூய்மை என்பது மக்கள் சக்தியின் கொண்டாட்டமாகியிருக்கிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ... இந்த இயக்கம் தொடங்கியபோது, லட்சக்  கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். திருமணங்கள் முதல் பொது நிகழ்ச்சிகள் வரை, எங்கும் தூய்மை பற்றிய செய்தி இருந்தது. ஒரு வயதான தாய் தனது ஆடுகளை கழிப்பறைகள் கட்டுவதற்கு பங்களிக்க விற்றபோது, சிலர் தங்கள் தாலிக் கயிறுகளை விற்றனர், மற்றவர்கள் கழிப்பறைகள் கட்ட நிலத்தை நன்கொடையாக வழங்கினர். சில ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தங்கள் ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கினர், ராணுவ வீரர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை தூய்மைக்காக அர்ப்பணித்தனர். இந்த நன்கொடைகள் கோயில்களுக்கோ அல்லது வேறு எந்த நிகழ்வுக்கோ வழங்கப்பட்டிருந்தால், அவை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகி ஒரு வாரம் விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், யாருடைய முகங்கள் தொலைக்காட்சியில் தோன்றியதில்லையோ, யாருடைய பெயர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறவில்லையோ, அவர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள் என்பதை தேசம் அறிய வேண்டும், அது நேரமாக  இருந்தாலும் சரி, செல்வமாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள், இந்த இயக்கத்திற்கு புதிய பலத்தையும், சக்தியையும் அளித்திருக்கிறார்கள். இது நமது தேசத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கைவிடுவது பற்றி நான் பேசியபோது, கோடிக்கணக்கான மக்கள் கடைகளுக்கு செல்லும்போது சணல் மற்றும் துணிப்பைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இல்லையெனில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது பற்றி நான் பேசியிருந்தால், பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள்... ஆனால் அவர்கள் செய்யவில்லை. பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் அவர்கள் ஒத்துழைத்தனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மோடி தடை செய்துள்ளதாகவும், இதனால் வேலையின்மை ஏற்படுவதாகவும் கூறி போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவேளை அவர்களின் கவனம் அங்கு செல்லவில்லை.

நண்பர்களே,

இந்த இயக்கத்தில் நமது திரையுலகமும் பின்தங்கவில்லை. வணிக நலன்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தொழில்துறை தூய்மையின் செய்தியைப் பரப்புவதற்காக திரைப்படங்களைத் தயாரித்தது. இந்த 10 ஆண்டுகளில், இது ஒரு முறை செயல்  அல்லஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்ச்சியான பணி என்று நான் உணர்கிறேன். மனதின் குரல் நிகழ்ச்சியில் தூய்மை பற்றி நான் 800 முறை குறிப்பிட்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். தூய்மைக்காக தங்களின் முயற்சிகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு மக்கள் லட்சக்கணக்கான கடிதங்களை அனுப்புகிறார்கள்.

நண்பர்களே,

இன்று, நாட்டின், அதன் மக்களின் சாதனைகளை நான் காணும்போது, ஒரு கேள்வி எழுகிறது: இது ஏன் முன்பே நடக்கவில்லை? சுதந்திரப் போராட்டத்தின் போது தூய்மைக்கான பாதையை மகாத்மா காந்தி நமக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு காட்டியது மட்டுமல்ல, கற்றும்  கொடுத்தார். அப்படியானால், சுதந்திரத்திற்குப் பிறகு தூய்மை மீது ஏன் கவனம் செலுத்தப்படவில்லை? காந்தியின் பெயரால் அதிகாரத்தை நாடி அவர் பெயரால் வாக்குகளைப் பெற்றவர்கள் அவருக்கு பிடித்த  தூய்மையை மறந்துவிட்டனர். கழிப்பறை வசதி இல்லாததை அவர்கள் நாட்டின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை, இதன் விளைவாக மக்கள் அசுத்தமாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அசுத்தம்  வாழ்க்கையின் வழக்கமான ஒரு பகுதியாக மாறியது. தூய்மையைப் பற்றிப் பேசுவது நின்று போனது. எனவே, நான் செங்கோட்டையில் இருந்து பிரச்சினையை எழுப்பியபோது, அது ஒரு புயலை ஏற்படுத்தியது. கழிப்பறை மற்றும் தூய்மை பற்றி பேசுவது பாரதப்  பிரதமரின் வேலை அல்ல என்று சிலர் என்னை கேலி செய்தனர். தொடர்ந்து என்னை கிண்டல் செய்கிறார்கள்.

ஆனால் நண்பர்களே,

பாரதப் பிரதமரின் முதல் வேலை இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும். என் பொறுப்பைப் புரிந்துகொண்டு, கழிப்பறைகள் பற்றிப் பேசினேன், சானிட்டரி நாப்கின்கள் பற்றிப் பேசினேன். அதன் பலனை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரதத்தின் மக்கள் தொகையில் 60% க்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது மனித மாண்பை அவமதிக்கும் செயலாகும். அது மட்டுமல்ல, இது நாட்டின் ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும் - இது பல தலைமுறைகளாகத் தொடரும் அவமானம். கழிப்பறை வசதி இல்லாதது நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. வலியையும் அசௌகரியத்தையும் சகித்துக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை, இருள் வரும் வரை காத்திருந்தனர், இது அவர்களின் பாதுகாப்பில் கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தியது. குளிராக இருந்தாலும் சரி, மழை பெய்தாலும் சரி, சூரிய உதயத்திற்கு முன்பாக அவர்கள் செல்ல வேண்டும். எனது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் இந்த சோதனையை அனுபவித்தனர். திறந்தவெளி மலம் கழிப்பால் ஏற்பட்ட அசுத்தம் நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது. இது குழந்தைகளின் இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. சுகாதாரமற்ற நிலைமைகள் காரணமாக கிராமங்களிலும் புறப்பகுதிகளிலும் நோய்கள் பரவுவது பொதுவாகிப்போனது.

நண்பர்களே,

இப்படிப்பட்ட நிலையில் எப்படி ஒரு நாடும் முன்னேற முடியும்? அதனால்தான் இது இப்படியே  தொடர முடியாது என்று நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் இதை ஒரு தேசிய மற்றும் மனிதாபிமான சவாலாக கருதி, இதற்குத் தீர்வுகாண  ஒரு இயக்கத்தைத் தொடங்கினோம். இங்குதான் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான விதை ஊன்றப்பட்டது. இந்தத் திட்டம், இந்த லட்சியம், இந்த இயக்கம்பொது விழிப்புணர்வுக்கான இந்த முயற்சி, துன்பத்தின் கருவறையிலிருந்து பிறந்தது. துன்பத்திலிருந்து பிறந்த வேதவாக்கியங்கள் ஒருபோதும் சாவதில்லை. குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான இந்தியர்கள் மகத்தான சாதனைகளை நிகழ்த்தினர். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த கழிப்பறை வசதி தற்போது 100 சதவீதத்தை எட்டியுள்ளது.

நண்பர்களே,

நாட்டில் உள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையில் தூய்மை இந்தியா இயக்கத்தின் தாக்கம் விலைமதிப்பற்றது. அண்மையில் , ஒரு புகழ்பெற்ற சர்வதேச இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தினர். தூய்மை இந்தியா இயக்கம் ஆண்டுதோறும் 60,000 முதல் 70,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்று அது கண்டறிந்துள்ளது. யாராவது ரத்த தானம் செய்து ஓர் உயிரை காப்பாற்றினாலும், அது ஒரு மகத்தான நிகழ்வு. ஆனால், தூய்மையின் மூலமும், குப்பைகளை அகற்றுவதன் மூலமும், அசுத்தத்தை அகற்றுவதன் மூலமும், 60,000-70,000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது கடவுளிடமிருந்து இதைவிட பெரிய ஆசீர்வாதம் என்ன இருக்க முடியும்? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2014 மற்றும் 2019 க்கு இடையே,வயிற்றுப்போக்கால் இழக்கப்படவிருந்த  300,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

நண்பர்களே,

இது மனித சேவையின் கடமையாகிவிட்டது. வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படுவதால் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இப்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது. தூய்மை இந்தியா திட்டம் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் கணிசமாக குறைந்துள்ளன.  ஆயிரக்கணக்கான பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதால் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. யுனிசெஃப்பின் மற்றொரு ஆய்வு, தூய்மை காரணமாக கிராமப்புற குடும்பங்கள் ஆண்டுக்கு சராசரியாக 50,000 ரூபாய் சேமிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. முன்னதாக, இந்த நிதி அடிக்கடி நோய்வாய்ப்பட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடப்பட்டிருக்கும் அல்லது நோய் காரணமாக வேலை செய்ய இயலாமை காரணமாக இழக்கப்பட்டிருக்கும்.

நண்பர்களே,

தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பது குழந்தைகளின் உயிரைக் காக்கும், நான் உங்களுக்கு மற்றொரு உதாரணம் அளிக்க விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன், கோரக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் இறந்ததாக தொடர்ந்து செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அசுத்தம் மறைந்து, தூய்மையின் வருகையுடன், அந்தச் செய்திகளும் மறைந்து விட்டன. அழுக்குடன் என்ன போகிறது என்று பாருங்கள்! தூய்மை இந்தியா இயக்கம் மூலம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தூய்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

நண்பர்களே,

தூய்மைக்கு அதிகரித்துள்ள மதிப்பு  நாட்டில் குறிப்பிடத்தக்க உளவியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை இன்று குறிப்பிடுவது முக்கியம் என்று நினைக்கிறேன். முன்பு, துப்புரவுப் பணியுடன் தொடர்புடையவர்கள் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டனர், அவர்கள் எவ்வாறு பார்க்கப்பட்டனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  சுத்தம் செய்வது வேறு ஒருவரின் பொறுப்பு என்று நம்பினர், ஆணவ உணர்வுடன் வாழ்ந்தனர், அதே நேரத்தில் சுத்தம் செய்தவர்களை இழிவுபடுத்தினர். ஆனால் நாட்டு மக்களும் தூய்மைப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கிய வேளையில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் கூட, தாங்கள் செய்யும் பணி மகத்துவம் வாய்ந்ததாக எண்ணினர்.   இது ஒரு பெரிய உளவியல் மாற்றத்திற்கு வழிவகுத்தது. தூய்மை இந்தியா இயக்கம் குடும்பங்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் மிகுந்த மரியாதையையும், கண்ணியத்தையும் கொண்டுவந்து, அவர்களின் பங்களிப்பு குறித்து பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது. இன்று, அவர்கள் எங்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள். தங்கள் வயிற்றை நிரப்புவதற்காக மட்டும் உழைக்கவில்லை, தேசத்தை பிரகாசிக்கச் செய்வதிலும் அவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதில் அவர்கள் இப்போது பெருமிதம் கொள்கிறார்கள். தூய்மை இந்தியா இயக்கம்  கோடிக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பெருமிதத்தையும், கவுரவத்தையும் அளித்துள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்கவும் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் ஏற்படும் அபாயங்களை அகற்றவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அரசு, தனியார் துறை மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள், மேலும் பல புதிய ஸ்டார்ட்அப்கள் உருவாகி வருகின்றன, புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வருகின்றன.

நண்பர்களே,

தூய்மை இந்தியா இயக்கம் என்பது தூய்மைக்கான திட்டம் மட்டுமல்ல; அதன் நோக்கம் பரவலாக விரிவடைந்து வருகிறது. இது தற்போது தூய்மை சார்ந்த வளத்திற்கு வழி வகுத்து வருகிறது. தூய்மை இந்தியா இயக்கம் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படுவது பல துறைகளுக்கு பயனளித்துள்ளது, மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. கிராமங்களில், கொத்தனார்கள், குழாய் பொருத்துபவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த இயக்கத்தின் மூலம் சுமார் 1.25 கோடி மக்கள் சில பொருளாதார ஆதாயம் அல்லது வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது. இந்த இயக்கத்தின்  விளைவாக புதிய தலைமுறை பெண் கொத்தனார்களும் உருவாகி  உள்ளனர். முன்பு, பெண் கொத்தனார்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை, ஆனால் இப்போது பெண்கள் கொத்தனார்களாக வேலை செய்வதை நீங்கள் காணலாம்.

தூய்மையான தொழில்நுட்பத்தின் மூலம், நமது இளைஞர்களுக்கு சிறந்த வேலைகளும்  வாய்ப்புகளும்  உருவாகி வருகின்றன. இன்று, சுமார் 5,000 ஸ்டார்ட் அப்கள் தூய்மை தொழில்நுட்பத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. கழிவுகளிலிருந்து செல்வம், கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து, நீர் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி போன்ற துறைகளில், நீர் மற்றும் துப்புரவு துறையில் பல வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் பத்தாண்டுகளின் இறுதிக்குள், இந்தத் துறையில் 65 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, தூய்மை இந்தியா இயக்கம் இதில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

நண்பர்களே,

தூய்மை இந்தியா இயக்கம் சுழற்சிப்  பொருளாதாரத்திற்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. வீட்டில் உருவாகும் கழிவுகளிலிருந்து உரம், சாண எரிவாயு , மின்சாரம், சாலை அமைப்பதற்கான கரி போன்ற பொருட்களை நாம் இப்போது உற்பத்தி செய்கிறோம். இன்று கோபர்தன் திட்டம் ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிராமங்களில் நூற்றுக்கணக்கான சாண எரிவாயு ஆலைகள் அமைக்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, வயதான கால்நடைகளை கையாள்வது நிதிச் சுமையாக மாறும். இப்போது, கோபர்தன்  திட்டத்தின் மூலம், பால் உற்பத்தி செய்யாத அல்லது பண்ணைகளில் வேலை செய்யாத கால்நடைகள் கூட வருமான ஆதாரமாக மாற முடியும். கூடுதலாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அழுத்தப்பட்ட சாண எரிவாயு ஆலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இன்று, பல புதிய ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன, புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

வேகமாக மாறிவரும் இந்த நேரத்தில், தூய்மை தொடர்பான சவால்களை நாம் புரிந்துகொள்வது முக்கியம். நமது பொருளாதாரம் வளர்ந்து நகரமயமாக்கல் அதிகரிக்கும் போது, கழிவுகளின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது அதிக குப்பைகளுக்கு வழிவகுக்கும். பொருளாதாரத்தின் தற்போதைய "பயன்பாடு மற்றும் தூக்கி எறிதல்" மாதிரியும் இந்த சிக்கலுக்கு பங்களிக்கிறது. மின்னணு கழிவுகள் உட்பட புதிய வகை கழிவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நமது எதிர்கால உத்திகளை மேம்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை கட்டுமானத்தில் நாம் உருவாக்க வேண்டும். நமது காலனிகள், வீட்டு வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் முடிந்தவரை பூஜ்ஜிய கழிவுகளுக்கு நெருக்கமாக நம்மை கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். அதை பூஜ்ஜிய கழிவுகளுக்கு கொண்டு வர முடிந்தால் மிகவும் நல்லது.

நீர் வீணாகாமல் இருப்பதையும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் திறம்பட மீண்டும் பயன்படுத்தப்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். நமாமி கங்கா  திட்டம் நமக்கு ஒரு முன்மாதிரி. இந்த முயற்சியின் விளைவாக, கங்கை நதி இப்போது மிகவும் தூய்மையாக உள்ளது. அமிர்த இயக்கமும்  அமிர்த நீர் நிலை  இயக்கமும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இவை, அரசு மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு கொண்டு வந்த மாற்றத்திற்கு  சக்திவாய்ந்த மாதிரிகள் . இருப்பினும், இது போதாது என்று நான் நம்புகிறேன். நீர் சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு மற்றும் நமது நதிகளை சுத்தம் செய்வதற்கான புதிய தொழில்நுட்பங்களில் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தூய்மை என்பது சுற்றுலாவுடன் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை நாமனைவரும் அறிவோம். எனவே, நமது சுற்றுலாத் தலங்கள், புனிதத் தலங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களையும் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

நண்பர்களே,

 

கடந்த 10 ஆண்டுகளில், தூய்மையைப் பொறுத்தவரை நாம்  நிறைய சாதித்துள்ளோம். ஆனால் கழிவுகளை உருவாக்குவது  அன்றாட வழக்கமாக இருப்பதைப் போலவே, தூய்மையைப் பராமரிப்பதும் தினசரி வழக்கமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனோ அல்லது உயிரினமோ ஒருபோதும் கழிவுகளை உருவாக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது. கழிவுகள் தவிர்க்க முடியாதது என்றால், தூய்மையும் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும். இந்தப் பணியை ஒரு நாள் அல்லது ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கும் நாம் தொடர வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தூய்மையை தனது பொறுப்பாகவும், கடமையாகவும் புரிந்து கொள்ளும்போது, மாற்றத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாடு ஒளிர்வது உறுதி.

தூய்மைக்கான இயக்கம் என்பது ஒரு நாள் பணி அல்ல, வாழ்நாள் முழுவதற்குமான நடைமுறை. அதை நாம் தலைமுறை தலைமுறையாகக் கடத்த வேண்டும். தூய்மை என்பது ஒவ்வொரு குடிமகனின்  இயல்பாக இருக்க வேண்டும். இது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், மேலும் அழுக்கு மீது சகிப்பின்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை நாம் சகித்துக்கொள்ளவோ அல்லது பார்க்கவோ கூடாது. அழுக்கின் மீதான வெறுப்புதான் தூய்மையை நாடுவதில் நம்மை நிர்ப்பந்தித்து பலப்படுத்தும்.

வீடுகளில் உள்ள சிறு குழந்தைகள் தங்கள் பெரியவர்களை பொருட்களை சுத்தமாக வைத்திருக்க எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள் என்பதை நாம்  பார்த்தோம். பலர் என்னிடம் தங்கள் பேரக்குழந்தைகள் அல்லது குழந்தைகள் அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள், "மோடி ஜி சொன்னதைப் பாருங்கள். ஏன் குப்பை போடுகிறாய்?" கார் ஜன்னலுக்கு வெளியே ஒரு பாட்டிலை வீசுவதை அவர்கள் தடுக்கிறார்கள். இந்த இயக்கம் அவர்களுக்குள்ளும் ஒரு விதையை விதைத்திருக்கிறது. எனவே, இன்று நான் இளைஞர்களுக்கும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் சொல்ல விரும்புகிறேன்: அர்ப்பணிப்புடன் இருப்போம், மற்றவர்களிடம்  தொடர்ந்து விளக்குவோம், ஊக்குவிப்போம், ஒன்றுபடுவோம். நாடு தூய்மையாகும் வரை ஓயக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளின் வெற்றி, இது சாத்தியம், நம்மால் அதை அடைய முடியும், பாரத அன்னையை அழுக்கிலிருந்து நம்மால் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

நண்பர்களே,

இன்று, இந்த இயக்கத்தை மாவட்டம், வட்டாரம், கிராமம், குடியிருப்பு மற்றும் தெரு நிலைகளுக்கு எடுத்துச் செல்லுமாறு மாநில அரசுகளை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தூய்மையான பள்ளிகள், தூய்மையான மருத்துவமனைகள், தூய்மையான அலுவலகங்கள், தூய்மையான குடியிருப்புகள், தூய்மையான குளங்கள், தூய்மையான கிணறுகள் ஆகியவற்றுக்கான போட்டிகளை பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் நாம் நடத்த வேண்டும். இது ஒரு போட்டி சூழலை உருவாக்கும், மேலும் வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு  வெறுமனே 2-4 நகரங்களை சுத்தமான நகரங்களாகவோ அல்லது 2-4 மாவட்டங்களை தூய்மையானதாகவோ அறிவித்தால் போதாது. இதை நாம் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நகராட்சிகள் பொது கழிப்பறைகள் நன்கு பராமரிக்கப்படுவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும், அதற்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும். அமைப்புகள் பழைய வழிகளுக்குத் திரும்புவதை விட மோசமானது எதுவும் இல்லை. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தூய்மைக்கு முன்னுரிமை அளித்து, அதை தங்கள் உயர் முன்னுரிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்போம். நாம் எங்கிருந்தாலும் - வீட்டில்சுற்றுப்புறத்தில் அல்லது  பணியிடத்தில் இருந்தாலும் - நாங்கள் அசுத்தத்தை உருவாக்க மாட்டோம், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தூய்மை நமது இயல்பான பழக்கமாக மாறட்டும். வழிபாட்டுத் தலங்களைச் சுத்தமாக வைத்திருப்பதைப் போலவே, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) பயணத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் "தூய்மை என்பது வளத்திற்கு வழிவகுக்கிறது" என்ற மந்திரத்தை வலுப்படுத்தும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும், நாமனைவரும் முன்னேறிச் செல்வோம், வீண் விரயத்தை உருவாக்க மாட்டோம் என்று மனவுறுதி கொள்வோம், தூய்மைக்காக நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம், ஒருபோதும் நமது பொறுப்புகளிலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று காந்தி அண்ணலுக்கு உண்மையான அஞ்சலிகளை அர்ப்பணிப்போம். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

******

(Release ID: 2061214)

SMB/KR


(Release ID: 2061403) Visitor Counter : 43