பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 SEP 2024 5:09PM by PIB Chennai

வணக்கம்!

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிராவின்  பிரபலமான முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, புனேவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவையில் உள்ள எனது இளம் சகாவுமான திரு முரளிதர் அவர்களே, காணொலிக் காட்சி மூலம் இணைந்திருக்கும் இதர மத்திய அமைச்சர்களே, மகாராஷ்டிராவின் மூத்த அமைச்சர்களே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இந்த நிகழ்வில் தொடர்புடைய அனைத்து சகோதர சகோதரிகளே!

புனேயின்  அனைத்து  சகோதர, சகோதரிகளுக்கும் எனது வணக்கங்கள்!

பல்வேறு பெரும் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் இரண்டு நாட்களுக்கு முன் நான் புனேக்கு வருவதாக இருந்தது. இருப்பினும், இடைவிடாத மழை காரணமாக நிகழ்ச்சியை  ரத்து செய்ய வேண்டியிருந்தது. இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. ஏனென்றால் புனேயின்  ஒவ்வொரு துகளும் தேசபக்தியால் நிரம்பியுள்ளது. புனேயின் ஒவ்வொரு பகுதியும் சமூக சேவையால் நிரம்பியுள்ளது. அத்தகைய புனே நகருக்கு வருகை தருவது ஒருவரை ஆற்றலால் நிரப்புகிறது. எனவே, இன்று என்னால் புனேக்கு வர முடியாமல் போனது எனக்கு பெரிய இழப்பு. ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியால் உங்கள் அனைவரையும் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இன்று, புனேயின் இந்த மண், பாரதத்தின் மகத்தான ஆளுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் பூமி - மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு சாட்சியாக உள்ளது. மாவட்ட நீதிமன்றத்திலிருந்து ஸ்வர்கேட் பிரிவின் மெட்ரோ பாதை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது இந்தப் பாதையில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கும். ஸ்வர்கேட்-கத்ரஜ் பிரிவுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், நமது மதிப்பிற்குரிய புரட்சியாளர் சாவித்ரிபாய் பூலேயின் நினைவிடத்திற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புனேயில் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்தும் நமது கனவை நனவாக்குவதை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதர சகோதரிகளே,

இன்று விட்டல் பகவானின் அருளால் அவரது பக்தர்களுக்கும் விலைமதிப்பற்ற பரிசு ஒன்று கிடைத்துள்ளது. சோலாப்பூரை நேரடியாக விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் விமான நிலையத்தை மேம்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இங்குள்ள முனைய கட்டிடத்தின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் விட்டல் பக்தர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இனி மக்கள் நேரடியாக சோலாப்பூரை அடைந்து விட்டல் பகவானை தரிசிக்க முடியும். இது வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். இந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக மகாராஷ்டிர மக்களுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் ரூபி ஹால் கிளினிக்கிலிருந்து ராம்வாடிக்கு மெட்ரோ ரயில் சேவையை நான் தொடங்கி வைத்தேன். 2016 முதல் இப்போது வரையிலான இந்த 7-8 ஆண்டுகளில், புனே மெட்ரோவின் முன்னேற்றம் - பல வழித்தடங்களில் அதன் விரிவாக்கம் மற்றும் புதிய அடித்தளங்கள் அமைக்கப்பட்டு வருவது - பழைய பணிக் கலாச்சாரத்தின் கீழ் சாத்தியமில்லை. முந்தைய அரசால் 8 ஆண்டுகளில் மெட்ரோவுக்கு ஒரு தூணைக் கூட நிறுவ முடியவில்லை. ஆனால் எங்கள் அரசு புனேயில் ஒரு நவீன மெட்ரோ நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.

 

நண்பர்களே,

வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அரசின் தொடர்ச்சி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. இந்த விஷயத்தில் எப்போதெல்லாம் இடையூறு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மகாராஷ்டிரா பெரிதும் பாதிக்கப்படுகிறது. மெட்ரோ திட்டங்கள், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் அல்லது விவசாயிகளுக்கான முக்கியமான நீர்ப்பாசனப் பணிகள் - மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கான இதுபோன்ற பல முக்கியமான திட்டங்கள் இரட்டை என்ஜின் அரசு அமைவதற்கு முன் தடம் புரண்டன.

'வளர்ச்சியடைந்த இந்தியா' உச்சத்தை அடைய நாம் பல மைல்கற்களைக் கடக்க வேண்டும். நமது அடிப்படை விழுமியங்களில் வேரூன்றி இருக்கும் அதே வேளையில், பாரதம் நவீனமயமாக்கப்பட வேண்டும். நமது பாரம்பரியத்தைப் பெருமையுடன் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், பாரதம் வளர்ச்சியடைய வேண்டும். பாரதத்தின் உள்கட்டமைப்பு நவீனமானதாகவும், நமது நாட்டின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும்  இருக்க வேண்டும். நமது சமூகம் ஒரே மனதுடன், ஒரே இலக்குடன் முன்னேற வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, நாம் நமது முன்னோக்கிய பயணத்தைத் தொடர வேண்டும்.

சகோதர சகோதரிகளே,

நமது மகள்களுக்காக ஒவ்வொரு துறையின் கதவுகளும் திறக்கப்படும்போதுதான், நமது நாட்டின் வளர்ச்சிக்கு  உண்மையான கதவுகள் திறக்கப்படும். சாவித்ரிபாய் புலே நினைவகம் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நமது முயற்சிகளுக்கும் இயக்கத்திற்கும்  கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

மகாராஷ்டிராவிலிருந்தும், இந்த மண்ணிலிருந்தும் வரும் உத்வேகங்கள் எப்போதும் போல நாட்டை வழிநடத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் ஒன்றிணைந்து, 'விக்சித் மகாராஷ்டிரா, விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த மகாராஷ்டிரா, வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை அடைவோம். இந்த நம்பிக்கையுடன், இந்த முக்கியமான திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

​***

(Release ID: 2060114)


(Release ID: 2060314) Visitor Counter : 30