மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav g20-india-2023

சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு அடுத்தபடியாக, இந்தியா வெள்ளி கிரகத்தில் அறிவியல் இலக்குகளை நோக்குகிறது

Posted On: 18 SEP 2024 3:12PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,வெள்ளி கிரக சுற்றுவட்டப் பாதையை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சந்திரன், செவ்வாய் கிரகங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும். பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் மற்றும் பூமியைப் போன்ற நிலைமைகளில் உருவாகியதாக நம்பப்படும் வீனஸ், கிரக சூழல்கள் எவ்வாறு மிகவும் வித்தியாசமாக உருவாகலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

 

வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் துணை மேற்பரப்பு, வளிமண்டல செயல்முறைகள் மற்றும் வெள்ளி வளிமண்டலத்தில் சூரியனின் தாக்கம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதற்காக, விண்வெளித் துறையால் நிறைவேற்றப்படவுள்ள 'வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்' வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஒரு அறிவியல் விண்கலத்தை சுற்றி வரச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் வாழக்கூடியது மற்றும் பூமிக்கு மிகவும் ஒத்ததாக நம்பப்படும் வீனஸின் மாற்றத்திற்கான அடிப்படை காரணங்களைப் பற்றிய ஆய்வு, வீனஸ் மற்றும் பூமி ஆகிய சகோதர கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் விலைமதிப்பற்ற உதவியாக இருக்கும்.

 

விண்கலத்தை உருவாக்குவதற்கும், அதை செலுத்துவதற்கும் இஸ்ரோ பொறுப்பேற்கும். இத்திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைமுறையில் உள்ள நடைமுறைகள் மூலம் திறம்பட நிர்வகிக்கப்பட்டு, கண்காணிக்கப்படும். இந்த இயக்கத்திலிருந்து உருவாக்கப்பட்ட தகவல்கள் தற்போதுள்ள வழிமுறைகள் மூலம் அறிவியல் சமூகத்திற்கு பரப்பப்படும்

 

மார்ச் 2028-ல் கிடைக்கும் வாய்ப்பில் இந்த பணி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீனஸ் மிஷன் பல்வேறு அறிவியல் முடிவுகளை ஏற்படுத்துவதுடன் நிலுவையில் உள்ள சில அறிவியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் மற்றும் செலுத்து வாகனம், பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் செயல்படுத்தப்படுவதால், பொருளாதாரத்தின் பிற துறைகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வீனஸ் ஆர்பிட்டர் மிஷனுக்காக (VOM) ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த நிதி ரூ.1236 கோடியாகும், இதில் ரூ.824.00 கோடி விண்கலத்திற்காக செலவிடப்படும். இந்த செலவில் விண்கலத்தின் குறிப்பிட்ட பேலோடுகள் மற்றும் தொழில்நுட்ப கூறுகள், வழிசெலுத்தல் மற்றும் நெட்வொர்க்கிற்கான உலகளாவிய தரை நிலைய ஆதரவு செலவு மற்றும் செலுத்து வாகனத்தின் செலவு ஆகியவை அடங்கும்.

 

சுக்கிரனை நோக்கிய பயணம்

இந்த பணி பெரிய பேலோடுகள், உகந்த சுற்றுப்பாதை செருகல் அணுகுமுறைகளுடன் எதிர்கால கிரக பயணங்களுக்கு இந்தியாவுக்கு உதவும். விண்கலம் மற்றும் செலுத்து வாகன மேம்பாட்டில் இந்திய தொழில்துறையின் குறிப்பிடத்தக்க ஈடுபாடு இருக்கும். பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, சோதனை தரவு குறைப்பு, அளவுத்திருத்தம் போன்றவற்றை உள்ளடக்கிய செலுத்துதலுக்கு முந்தைய கட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயக்கம் தனது தனித்துவமான கருவிகள் மூலம் இந்திய அறிவியல் சமூகத்திற்கு புதிய மற்றும் மதிப்புமிக்க அறிவியல் தரவுகளை வழங்குவதுடன் அதன் மூலம் வளர்ந்து வரும் மற்றும் புதுமையான வாய்ப்புகளை வழங்குகிறது.

 

*****

MM/RR



(Release ID: 2056175) Visitor Counter : 68