இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் ரீசெட் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு

Posted On: 13 SEP 2024 3:55PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியா முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள், புதிதாக தொடங்கப்பட்ட "ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சி" (RESET) திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், நாட்டின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீவிரமாக பங்களிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, இன்று இந்த முயற்சியை டாக்டர் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா,  ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சித் திட்டம் என்பது, தங்கள் சாதனைகளால் தேசத்தை பெருமைப்படுத்திய எங்கள் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து அதிகாரம் அளிப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றார். ஓய்வுபெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் புதிய திறன்களை வளர்ப்பதற்கும், விளையாட்டு சமூகத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கும், நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்திற்கு தொடர்ந்து பங்களிப்பதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் தொழில் வளர்ச்சியில் ஆதரவளிக்க வடிவமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சி திட்டம், தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களின் திறன்கள் மற்றும் அனுபவத்தை, ஆர்வமுள்ள இளம் விளையாட்டுத் திறமைகளுக்கு பயனளிக்க அனுமதிக்கிறது. ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை டாக்டர் மாண்டவியா மீண்டும் உறுதிப்படுத்தினார்.பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதன் மூலம், திட்டத்தைப் பயன்படுத்துமாறு அவர்களை வலியுறுத்தினார்.

சர்வதேச பதக்கங்களை வென்ற, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அல்லது தேசிய அல்லது மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற 20-50 வயதுடைய, ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சித் திட்டம், லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்துடன் (LNIPE) இணைந்து செயல்படுத்தப்படும். இது சுய-வேக ஆன்லைன் கற்றல், களப் பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப், வேலைவாய்ப்பு உதவி மற்றும் தொழில்முனைவோர் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக முடித்தவுடன் வழங்கப்படும்.

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சித்  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் https://lnipe.edu.in/resetprogram/ இணையதளத்தில் போர்ட்டலில் திறக்கப்பட்டுள்ளன. மேலும் உரிய மதிப்பீட்டிற்குப் பிறகு பாடநெறி தொடங்கும்.

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களின் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, எதிர்கால சாம்பியன்களை வளர்ப்பது மற்றும் இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிப்பதை, இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

*****

MM/KPG/KR/DL



(Release ID: 2054614) Visitor Counter : 27