திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இலவச ஆன்லைன் பயிற்சி தற்போது தமிழிலும் கிடைக்கிறது: ஐடிஐ மாணவர்களுக்காக தமிழ் யூடியூப் அலைவரிசையை நிமி தொடங்கியுள்ளது
Posted On:
12 SEP 2024 4:38PM by PIB Chennai
தொழிற் கல்வி பயில்வதை மேலும் எளிதாக்கும் விதமாக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்திற்குட்பட்ட, பயிற்சிப் பிரிவு தலைமை இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், தேசிய பயிற்றுவிப்பு ஊடக நிறுவனம் (NIMI), உயர் தரமிக்க திறன் பயிற்சி குறித்த வீடியோக்களை தமிழ் மொழியில் வழங்கும் விதமாக, பிரத்யேக யூடியூப் அலைவரிசை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கற்போருக்கு பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் ஆதார வளங்களை இலவசமாக வழங்கும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிமி டிஜிட்டல் தமிழ், நிமி அமைப்பால் தொடங்கப்பட்ட 9 பிராந்திய மொழி அலைவரிசைகளில் ஒன்றாகும். தமிழ் பேசும் மாணவர்கள், பயிற்றுநர்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கில், தொழில்துறை சார்ந்த அம்சங்களை இலவசமாக வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த இணையதளம் வாயிலாக, தங்களுக்கான தனிப்பயிற்சி, செயல் விளக்கங்கள் மற்றும் உரைநடைப் பாடங்களை கற்போர் தமிழில் எளிதில் அறிந்து கொள்ளலாம். இது, பல்வேறு தொழிற்சாலைகளில் புதிதாக உருவாகும் தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்கள் அவர்களது தொழிற்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்.
நிமி டிஜிட்டல் தமிழ் அலைவரிசையின் சிறப்பம்சங்கள்:
- தமிழில் உள்ள தொழிற்பயிற்சிப் பாடங்களை இலவசமாக, எளிதில் அணுகலாம்.
- உற்பத்தி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகள் இதில் அடங்கும்.
- நவீன திறன் பயிற்சி முறைகள் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளை, கற்போர் உடனுக்குடன் அறிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும்.
இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள NIMI வலைதளத்தைக் காணவும் அல்லது யூடியூபில் NIMI டிஜிட்டலுக்கு சந்தாதாரர் ஆகவும்.
***
MM/RR/KV
(Release ID: 2054193)
Visitor Counter : 308