பிரதமர் அலுவலகம்
வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
03 AUG 2024 12:03PM by PIB Chennai
வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் ஆவர்களே, வேளாண் பொருளாதாரத்திற்கான சர்வதேச மாநாட்டின் தலைவர் டாக்டர் மதின் கைம் அவர்களே, நித்தி ஆயோக் உறுப்பினர் திரு ரமேஷ் அவர்களே, பாரதம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகளே, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நமது சகாக்களே, வேளாண் துறையுடன் தொடர்புடைய வல்லுநர்களே..
அனைவருக்கும் வணக்கம்.
65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த 12 கோடி விவசாயிகள், 3 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகள், 3 கோடி மீனவர்கள் மற்றும் 8 கோடி கால்நடை விவசாயிகள் சார்பில் அனைத்து பிரமுகர்களையும் வரவேற்கிறேன். 50 கோடிக்கும் அதிகமான கால்நடைகளைக் கொண்ட நாடு இந்தியா. விவசாயத்தையும் விலங்குகளையும் நேசிக்கும் இந்திய நாட்டிற்கு பிரதிநிதிகளை வரவேற்கிறேன்.
நணபர்களே,
வேளாண்மை, உணவு குறித்த பண்டைய இந்தியர்களின் நம்பிக்கைகள் அனுபவங்கள் பரந்து விரிந்தது. இந்திய வேளாண் பாரம்பரியத்தில் அறிவியலுக்கும், தர்க்கவியலுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உணவின் மருத்துவ குணங்களுக்குப் பின்னால் அறிவியல் இருக்கிறது.
நண்பர்களே,
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில்தான் விவசாயம் வளர்ந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான விவசாயம் குறித்த நூலான 'கிருஷி பராஷர்' என்ற நூல் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சிக்கும் வேளாண் கல்விக்குமான வலுவான அடித்தள அமைப்பு இருக்கிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. வேளாண் கல்விக்காக 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 700-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்களும் உள்ளன.
நண்பர்களே,
இந்தியாவில் வேளாண் திட்டமிடுதலில் ஆறு பருவகாலங்களின் தொடர்பு உள்ளது. 15 வேளாண் பருவநிலை மண்டலங்களில் தனித்துவமான பண்புகள் உள்ளன. நாட்டில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால் விவசாய விளைபொருட்கள் விளையும் தன்மை மாறும்.
நண்பர்களே,
நிலம், இமயமலை, பாலைவனம், தண்ணீர் பற்றாக்குறை பகுதிகள் அல்லது கடலோரப் பகுதிகள் என பல வகையான வேளாண் பகுதிகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தப் பன்முகத்தன்மை உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானது. இதுவே இந்தியாவை உலகின் நம்பிக்கை ஒளியாக ஆக்குகிறது.
நண்பர்களே,
65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வேளாண் பொருளாதார வல்லுநர்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அப்போது இந்தியா புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தது. அது இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயத்திற்கும் சவாலான நேரம். இன்று இந்தியா உணவு மிகை நாடாகவும், பால், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை, மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகிற்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்த காலம் ஒன்று இருந்தது. இன்று உலகளாவிய உணவு - ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது. எனவே, உணவு முறை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது. வளரும் நாடுகள் எனப்படும் உலகின் தென் பகுதியினருக்கு இது நிச்சயம் பயனளிக்கும்.
நண்பர்களே,
'உலக நண்பன்' என்ற முறையில் உலகளாவிய நலனுக்காக இந்தியா உறுதிப்பாடு கொண்டுள்ளது. உலகளாவிய நலனுக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை சிறப்பு வாய்ந்தது. சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கமான லைஃப்' இயக்கம், 'ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்' உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளது. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகளின் ஆரோக்கியத்தை குழிதோண்டிப் புதைத்து விடக்கூடாது என்பது இந்தியாவின் அணுகுமுறை. நிலையான விவசாயம் - உணவு முறைகளுக்கு முன்னால் உள்ள சவால்களை ஒரே பூமி, ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற முழுமையான அணுகுமுறையின் கீழ் மட்டுமே சமாளிக்க முடியும்.
நண்பர்களே,
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் மையமாக விவசாயம் உள்ளது. இந்தியாவில் 90 சதவீத சிறு விவசாயிகள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்கள். ஆசியாவில் உள்ள பல வளரும் நாடுகளிலும் இதேபோன்ற நிலைமை நிலவுகிறது. இந்தியாவின் முன்மாதிரி இதற்குப் பொருத்தமானது. ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை பெரிய அளவில் ஊக்குவிப்பதன் சாதகமான பலன்களை நாட்டில் காண முடியும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிலையான மற்றும் பருவநிலை-நெகிழ்திறன் விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க ஒரு முழுமையான சூழல் அமைப்பை உருவாக்க நடவடிக்பை எடுக்கப்பட்டுள்ளது. பருவநிலைக்கு ஏற்ற நெகிழ்திறன் கொண்ட பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சி - மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பருவநிலைக்கு ஏற்ப தட்பவெப்ப நிலையை தாங்கும் வகையில் சுமார் 1900 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாரம்பரிய வகைகளை விட 25 சதவீதம் குறைவான தண்ணீர் தேவைப்படும் அரிசி வகைகளும், கருப்பு அரிசியும் ஒரு முக்கிய சிறப்பு உணவாக உருவாகியுள்ளன. மணிப்பூர், அசாம், மேகாலயாவில் கருப்பு அரிசி அதன் மருத்துவ மதிப்பு காரணமாக விருப்பமான தேர்வாக உள்ளது. இந்தியா தமது அனுபவங்களை உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
நண்பர்களே,
தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்து சவாலின் தீவிரம் அதிகரித்துள்ளது. 'குறைந்தபட்ச நீர் - அதிகபட்ச உற்பத்தி' என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு சிறந்த தீர்வாக சிறுதானியங்கள் அமைகின்றன. கடந்த ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாடப்பட்டது.
நண்பர்களே,
விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கான முன்முயற்சிகள் நடைபெறுகின்றன. மண் வள அட்டை, சூரிய ஒளி விவசாயம், விவசாயிகளை எரிசக்தி அளிப்பவலர்களாக மாற்றுதல், டிஜிட்டல் வேளாண் சந்தையான இ-நாம், கிசான் கடன் அட்டை, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய விவசாயிகள் முதல் வேளாண் புத்தொழில்கள் வரை, பண்ணை முதல் உணவு மேசை வரை வேளாண் சார்ந்த துறைகளை முறைப்படுத்துவது அவசியம். கடந்த 10 ஆண்டுகளில், 90 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நுண் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதால், விவசாயம் - சுற்றுச்சூழல் இரண்டும் பயனடைகின்றன.
நண்பர்களே,
இந்தியாவில் வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகிறது. ஒரே தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தொழில் நுட்பம் மூலம் பணம் மாற்றப்படுகிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்திற்கு டிஜிட்டல் அடையாள எண் வழங்கப்படுகிறது. நிலத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. ட்ரோன்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய விவசாயிகளுக்கு பயனளிப்பது மட்டுமின்றி, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும்.
நண்பர்கள,
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறீர்கள். அடுத்த ஐந்து நாட்களில் நீடித்த வேளாண்-உணவு முறைகளுடன் உலகை இணைப்பதற்கான வழிகள் காணப்படும் என்று நம்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு நாம் அடுத்தவருக்கும் கற்பிப்போம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழி பெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
****
PLM/DL
(Release ID: 2044106)
Visitor Counter : 41
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam