நிதி அமைச்சகம்

2025-ம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்குமென பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது

Posted On: 22 JUL 2024 3:28PM by PIB Chennai

நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-ம் நிதியாண்டில் 8.2% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதுடன், நான்கு காலாண்டுகளில் மூன்றில் 8 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தொழில்துறை வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக அதிகரித்ததே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும்.

கடன் நிர்வாகம் மற்றும் அரசின் நிதிக் கொள்கைகள் காரணமாக 2024-ம் நிதியாண்டில், சில்லறை பணவீக்கமும், 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டின் இது 4.5 சதவீதமாகக் குறையக் கூடும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

இந்தியாவின் வங்கித்துறை மற்றும் நிதித்துறைச் செயல்பாடுகள் அபார வளர்ச்சியை எட்டியிருப்பதுடன் ரிசர்வ் வங்கியும், நிதானமான கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. வங்கிக் கடன் உதவியைப் பொருத்தவரை இரட்டை இலக்கத்தில், விரிவான வளர்ச்சியை எட்டியுள்ளது. வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களுக்கான கடன் உதவி, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

அமிர்தகாலத்தில், தனியார் முதலீட்டை ஊக்குவித்தல், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் விரிவாக்கம், வேளாண் தொழிலை வளர்ச்சி எந்திரமாக்குதல், பசுமை எரிபொருள் மாற்றத்திற்கு நிதியுதவி, கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியை சமன் செய்தல், மாநிலங்களின் திறனை அதிகரித்தல்  போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படும்.  

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான நடவடிக்கைகள்,  எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதுடன்,  நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தியில்,  45.4% புதைபடிமம் அல்லாத எரிபொருள் வளங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

34.7 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 7.37 கோடி பேரின் சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 22 வகையான மனநலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அபார வளர்ச்சியை எட்டி, 2024-ம் ஆண்டில் ஒரு லட்சம் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிப் பட்டியலில், இணைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 61.1 லட்சமாக உள்ளது. வேளாண் தொழில்சார்ந்த துறைகள், பெரும் வளர்ச்சி அடைந்து வேளாண் வருமானம் அதிகரிப்பதற்கான ஆதாரங்களாக திகழ்கின்றன. இந்தியாவின்  மருந்து உற்பத்திக்கான சந்தை உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக உருவெடுத்து, 50 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டம் ரூ.1.28 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்தியாவின் சேவைத் துறை ஏற்றுமதி, உலகின் வணிக ஏற்றுமதியில் 4.4% அளவுக்கு உள்ளது.

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்க 2023-ல் 92 லட்சமாக அதிகரித்துள்ளது. மின்னணு வர்த்தகத் தொழில், 2030-ம் ஆண்டு வாக்கில் 350 பில்லியன் டாலரை தாண்டும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம், 2014-ல் இருந்ததைவிட மும்மடங்கு அதிகரித்து 2024-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 34 கிலோ மீட்டராக உள்ளது. ரயில்வேத் துறைக்கான மூலதன செலவினங்களும், கடந்த 5 ஆண்டுகளில் 77 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 21 விமான நிலையங்களில் புதிய முனையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மிஷன் லைஃப் திட்டம் மனிதர்கள் – இயற்கை நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034969

*** 

SMB/MM/KPG/DL



(Release ID: 2035391) Visitor Counter : 15