பிரதமர் அலுவலகம்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் அளித்த பதிலுரையின் தமிழாக்கம்

Posted On: 02 JUL 2024 9:39PM by PIB Chennai

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் தது உரையில் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தீர்மானம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுவுள்ளார். மாண்புமிகு குடியரசுத் தலைவர் முக்கியமான விஷயங்களை எழுப்பியுள்ளார். மாண்புமிகு குடியரசுத் தலைவர் நம் அனைவருக்கும், நாட்டிற்கும் வழிகாட்டியுள்ளார், இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவரின் உரை குறித்து நேற்றும் இன்றும் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக முதன்முறையாக நம்மிடையே வந்திருப்பவர்களையும், நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திய நமது மதிப்பிற்குரிய சகாக்கள் சிலரையும் நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறேன். அனுபவம் வாய்ந்த எம்.பி.க்கள் போல் அவர்களின் நடத்தை இருந்தது. எனவே, அவர்கள் நாடாளுமன்றத்திற்கு புதியவர்கள் என்றாலும், அவையின் கண்ணியத்தை மேம்படுத்தி, இந்த விவாதத்தை தங்கள் சிந்தனைகளால் மிகவும் மதிப்புமிக்கதாக மாற்றியுள்ளனர்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்பதை நாடு உலகிற்கு நிரூபித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டு மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தொடர்ச்சியாக பொய்களைப் பரப்பிய போதிலும், கடுமையான தோல்வியைச் சந்தித்த சிலரின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரமாகும், பாரத மக்கள் மூன்றாவது முறையாக நாட்டிற்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். இது ஜனநாயக உலகிற்கு மிகவும் குறிப்பிடத்தக்க, பெருமைக்குரிய நிகழ்வாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ஒவ்வொரு அளவுகோலிலும் எங்களை சோதித்த பின்னர் நாட்டு மக்கள் எங்களுக்கு இந்த ஆணையை வழங்கியுள்ளனர். எங்களது 10 ஆண்டுகால சாதனையை மக்கள் பார்த்துள்ளனர். ஏழைகளின் நலனுக்காக  முதல் சேவை மக்கள் சேவை என்ற தாரக மந்திரத்துடன் மிகுந்த அர்ப்பணிப்புடன் நாங்கள் பணியாற்றுவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இது 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டது. பாரதத்தின் சுதந்திர காலப்பகுதியில் இத்தனை குறுகிய காலத்தில் இத்தனை பேரை வறுமையில் இருந்து மீட்இந்த வெற்றிகரமான முயற்சி இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

 

2014-ல் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் முதன்முறையாக வெற்றி பெற்றபோது,, ஊழலை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறினோம். ஊழலால் பாதிக்கப்பட்ட நாட்டின் சாமானிய மக்களுக்கு எங்கள் அரசு நிவாரணம் அளித்துள்ளது குறித்து இன்று நான் பெருமைப்படுகிறேன். ஊழல் நாட்டை கரையான்களைப் போல வெறுமையாக்கிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், ஊழலுக்கு எதிரான எங்களின் சகிப்பின்மை கொள்கையை நாடு ஆசீர்வதித்துள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இன்று உலகளவில் பாரதத்தின் புகழ் அதிகரித்துள்ளது. இன்று, பாரதம் உலகளவில் கௌரவிக்கப்படுகிறது, ஒவ்வொரு இந்தியரும் பாரதத்தை உலகம் பார்க்கும் விதம் குறித்து பெருமிதம் கொள்கிறார்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

எங்களது ஒரே குறிக்கோள் முதலில் தேசம், என்பதை நாட்டு மக்கள் பார்த்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக, எங்கள் அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனுக்காகவும் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்துடன் பாடுபட்டு வருகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நாட்டுக்கு சேவை செய்யும் போது எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து மதங்களையும் மதிக்கும் உணர்வைக் கடைப்பிடித்து, பாரத அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்துதல் இந்த நாட்டைச் சீரழித்துவிட்டது. அதனால்தான் எல்லோருக்கும் நீதி, யாரையும் குறிப்பாக திருப்திப்படுத்தாமல் இருத்தல் என்ற கோட்பாட்டை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

பாரத மக்கள் எவ்வளவு முதிர்ச்சி அடைந்தவர்கள், எவ்வளவு நியாயமாக, உயர்ந்த லட்சியங்களுடன் தங்கள் ஞானத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. இதன் விளைவாக, மூன்றாவது முறையாக நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தாழ்மையுடன் தயாராக நாங்கள் உங்கள் முன் இங்கு இருக்கிறோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நாடு வளர்ச்சியடையும் போது, கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நிறைவேறும். நாடு வளர்ச்சியடையும் போது, லட்சக் கணக்கான மக்களின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நாடு வளர்ச்சியடையும் போது, எதிர்கால சந்ததியினர் தங்கள் கனவுகளை நிறைவேற்ற ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

பாரதம் வளர்ச்சியடையும் போது, நமது கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது. கிராமங்களில் வாழ்க்கை கண்ணியமானதாகவும் உயர்ந்ததாகவும் மாறும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. நமது நகரங்களின் வளர்ச்சியும் கூட வளர்ச்சியடைந்த இந்தியாவில் ஒரு வாய்ப்பாக அமைகிறது, மேலும் உலகளாவிய வளர்ச்சிப் பயணத்தில் பாரதத்தின் நகரங்கள் சமமாக நிற்க வேண்டும் என்பது எங்கள் கனவாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2014-ன் நாட்களை நினைவுகூருங்கள். 2014-ம் ஆண்டின் அந்த நாட்களை நாம் நினைத்துப் பார்த்தோமானால், நமது நாட்டு மக்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்கள், தேசம் விரக்தியின் படுகுழியில் மூழ்கிக் கொண்டிருந்தது என்பதை நம்மால் உணர முடியும். தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே அதன் இலக்கை அடைந்தது என்ற உண்மையை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டனர். ஒரு ரூபாய்க்கு 85 பைசா ஊழல் நடந்துள்ளது. ஊழல் மலிந்த இந்த சகாப்தம் நாட்டை விரக்தியில் ஆழ்த்தியது. கொள்கை முடக்கம் ஏற்பட்டது. சாதாரண இளைஞர்கள் நம்பிக்கையைக் கைவிட்டனர். இதுதான் நிலைமை. ஏழைகள் வீடு பெற ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறுவதற்குக் கூட மக்கள் எம்.பி.க்களின் அலுவலகங்களைச் சுற்றி அலைய வேண்டியிருந்தது, அப்போதும் கூட லஞ்சம் கொடுக்காமல் இணைப்பு பெற முடியவில்லை.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இலவச ரேஷன் கூட நிச்சயமற்றது; மக்கள் தங்களுக்கு உரிமையானதைப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. எங்கள் சகோதர சகோதரிகளில் பெரும்பாலோர் மிகவும் மனமுடைந்து, தங்கள் விதியை குற்றம் சாட்டினர், தங்கள் விதிக்கு தங்களை ஒப்புக்கொடுத்தனர்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அந்த நேரத்தில், 2014-ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எங்களைத் தேர்ந்தெடுத்தனர், அந்த தருணம் மாற்றத்தின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. கடந்த 10 ஆண்டுகளில், எனது அரசு பல வெற்றிகளையும் சாதனைகளையும் அடைந்துள்ளது என்று நான் கூறுவேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நிலக்கரி ஊழல்களால் பெரிய பெயர்கள் களங்கப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று, நிலக்கரி உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. அதனால்தான் பாரதத்தால் எதையும் செய்ய முடியும் என்று தேசம் இப்போது பெருமையுடன் கூறுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன் தொலைபேசி மூலம் வங்கி மோசடிகள் நடந்த ஒரு காலம் இருந்தது. வங்கி கருவூலம் தனிச் சொத்து என்பது போல கொள்ளையடிக்கப்பட்டன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2014 ஆம் ஆண்டுக்குப் பின், கொள்கைகளில் மாற்றங்கள், முடிவெடுப்பதில் வேகம், நம்பகத்தன்மையில் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாக இந்திய வங்கிகள் உலகின் சிறந்த வங்கிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று இந்திய வங்கிகள் அதிக லாபம் ஈட்டி மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன் தீவிரவாதிகள் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் காலம் இருந்தது. 2014-ம் ஆண்டுக்குப் பின் நிலைமை மாறியது. 2014-க்கு முன், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், பாரதத்தின் ஒவ்வொரு மூலையும் குறிவைக்கப்பட்டன, அரசு அமைதியாக இருந்தன. அவர்கள் பேசக்கூட தயாராக இல்லை. இன்று, 2014-க்குப் பின் பாரதம் திருப்பித் தாக்குகிறது,  துல்லியத் தாக்குதல் நடத்துகிறது. வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது, பயங்கரவாதிகளின் சூத்திரதாரிகளுக்கு தனது திறனை நிரூபித்துக் காட்டுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

சிலரால் வாக்கு வங்கி அரசியலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்ட 370 வது பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்தது. ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் பாரத அரசியல் சாசனம் நுழைய முடியவில்லை. அரசியலமைப்பைப் பிடித்துக் கொண்டு நடனமாடியவர்களால் ஜம்மு-காஷ்மீரில் அதை அமல்படுத்தும் தைரியத்தை வரவழைக்க முடியவில்லை. பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்தனர். 370-வது பிரிவு சகாப்தத்தின் போது, நமது படைகள் மீது கற்கள் வீசப்பட்டன, ஜம்மு-காஷ்மீரில் எதுவும் செய்ய முடியாது என்று மக்கள் விரக்தியில் மூழ்கினர். இன்று, 370-வது பிரிவின் சுவர் இடிக்கப்பட்டுள்ளது, கல்வீச்சு நிறுத்தப்பட்டுள்ளது, ஜனநாயகம் வலுவாக உள்ளது. மேலும் மக்கள் இந்திய அரசியலமைப்பு, இந்திய மூவர்ணக் கொடி, இந்திய ஜனநாயகம் ஆகியவற்றை அதிகளவில் நம்புகிறார்கள். அவர்கள் உற்சாகமாக வாக்களிக்க முன்வருகிறார்கள், இது தெளிவாகத் தெரிகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டில் பொங்கி எழுந்த உணர்வுகள், நாம் சுதந்திரம் அடைவோம் என்ற உற்சாகம், ஆர்வம், நம்பிக்கை ஆகியவை இன்று அதே நிலையில் இருக்கிறது. இந்த நம்பிக்கையின் காரணமாகவே, இந்தத் தேர்தலில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளம் போடப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் போது காணப்பட்ட அதே ஆர்வம் இப்போது வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவை நனவாக்குவதிலும் காணப்படுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரத்தை 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு நகர்த்தியுள்ளோம். இப்போது அடுத்த நிலையை எட்ட நாங்கள் தொடங்கியுள்ள வேகத்துடன், இந்தியப் பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். சுதந்திரத்திற்குப் பின், இந்த அதிர்ஷ்டம் நம் நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளது, இது 60 ஆண்டுகளுக்குப் பின் வந்துள்ளது. இந்த சாதனையை அடைவதற்கு மகத்தான கடின உழைப்பும் அசாதாரண நம்பிக்கையும் தேவை என்பதே இதன் பொருள். இது அரசியல் விளையாட்டுகள் மூலம் நடக்காது; மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களால் இது நிகழ்கிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நிலைத்தன்மைக்கும் தொடர்ச்சிக்குமான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலுடன், நான்கு மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த நான்கு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்றுள்ளது. நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்துள்ளோம். ஒடிசாவின் மஹாபிரபு ஜெகந்நாதரி்ன பூமி எங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களைப் பொழிந்துள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மிகவும் சக்திவாய்ந்த நுண்ணோக்கிகளால் கூட அங்கு எதிர்ப்பைக் கண்டுபிடிக்க முடியாது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அருணாச்சல பிரதேசத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்தோம். சிக்கிமில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், உங்கள் சொந்த மாநிலமான ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.

இந்த முறை கேரளாவில் பிஜேபி தனது கணக்கைத் தொடங்கியுள்ளது, மிகுந்த பெருமையுடன் கேரளாவைச் சேர்ந்த எங்கள் எம்.பி எங்களுடன் அமர்ந்திருக்கிறார். தமிழகத்தில் பல தொகுதிகளில் பிஜேபி வலுவான முன்னிலையை பதிவு செய்துள்ளது. கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பிஜேபியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. விரைவில் 3 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நான் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் பற்றிப் பேசுகிறேன்.

இந்த மூன்று மாநிலங்களில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இந்த மக்களவைத் தேர்தலில் அதிகரித்துள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

பஞ்சாபிலும் எங்கள் செயல்திறன் குறிப்பிடத்தக்கது, நாங்கள் லாபம் ஈட்டியுள்ளோம். மக்களின் ஆசிர்வாதம் எங்களுடன் உள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2024 தேர்தல்களில், இந்த நாட்டு மக்கள் காங்கிரஸுக்கும் ஒரு ஆணையை வழங்கியுள்ளனர், அந்த ஆணை தெளிவாக உள்ளது: நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள், எதிர்க்கட்சியில் இருங்கள், வாதங்கள் தீர்ந்தவுடன், கூச்சலிடுங்கள், கத்திக்கொண்டே இருங்கள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸ் வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை 100 இடங்களைத் தாண்டத் தவறியது இதுவே முதல் முறையாகும். இது காங்கிரஸ் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய தோல்வி, மூன்றாவது மோசமான செயல்திறன் ஆகும். அவர்களின் தோல்வியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு, மக்களின் தீர்ப்பை மதித்து, அதை பிரதிபலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் நம்மை தோற்கடித்துவிட்டதாக பாரத மக்களை நம்ப வைக்க இரவு பகலாக முயற்சி செய்கிறார்கள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் இந்தத் தேர்தலை ஆய்வு செய்தார்களா என்று தெரியவில்லை. இந்தத் தேர்தல் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தியை எடுத்துச் செல்கிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

2024 முதல், காங்கிரஸ் ஓர் ஒட்டுண்ணி கட்சி என்று அறியப்படும். ஒட்டுண்ணி என்பது ஓர் உடலை சாப்பிட்டுக் கொண்டே அந்த உடலில் வாழும் ஒன்றாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸ் வேண்டுமென்றே நாட்டைப் பொருளாதார குழப்பத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களில் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளும் நாட்டைப் பொருளாதார நிலைத்தன்மை இல்லாமையை நோக்கி இழுத்துச் செல்கின்றன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அறுபது ஆண்டுகளாக இங்கு அமர்ந்திருக்கும் ஒரு கட்சி, அரசின் செயல்பாடுகளை அறிந்த, அனுபவம் வாய்ந்த தலைவர்களைக் கொண்ட ஒரு கட்சி, அராஜகம் மற்றும் பொய்களின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, நாடு ஒரு கடுமையான நெருக்கடியை நோக்கிச் செல்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், இப்போது என்ன நடக்கிறது, நேற்று என்ன நடந்தது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த செயல்களை இனி ஒரு குழந்தையின் நடத்தை என்று நினைப்பதன் மூலமோ அல்லது அவரை அப்படி கருதுவதன் மூலமோ புறக்கணிக்கக்கூடாது. அவற்றை கண்டிப்பாக புறக்கணிக்கக் கூடாது. இவற்றின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் உன்னதமானவை அல்ல என்பதால் இதைச் சொல்கிறேன்; அவை கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன, நான் நாட்டு மக்களை எச்சரிக்க விரும்புகிறேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அவர்களின் பொய்கள் நமது நாட்டு மக்களின் விவேகமான புத்திசாலித்தனத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அவர்களின் பொய்கள் தேசத்தின் பொது அறிவை சிதைத்த வெட்கங்கெட்ட செயலாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த நடவடிக்கைகள் நாட்டின் மகத்தான பாரம்பரியத்தின் மீது விழுந்த அடியாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த அவையின் மாண்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த அவையில் தொடங்கியுள்ள பொய் பாரம்பரியத்திற்கு எதிராக நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பீர்கள் என்பதே நாட்டு மக்களின் இந்த அவையின் எதிர்பார்ப்பாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இது எமர்ஜென்சியின் 50-வது ஆண்டாகும். அதிகாரப் பேராசைக்காகவும், சர்வாதிகார மனப்பான்மைக்காகவும் மட்டுமே நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் கொடுமையின் எல்லா எல்லைகளையும் தாண்டியது. அது தனது சொந்த நாட்டு மக்கள் மீது தனது கொடூர நகங்களை விரித்து, தேசத்தின் துணியை கிழித்தெறியும் பாவத்தை செய்தது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அரசுகளைக் கவிழ்ப்பது, ஊடகங்களை ஒடுக்குவது என்பதாக அவர்களின் செயல்கள் இருந்தன. அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியலமைப்பின் உணர்வுக்கு எதிரானது, அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு எதிரானது, அரசியலமைப்பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிரானது. இவர்கள்தான் ஆரம்பத்திலிருந்தே தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எதிராக கடுமையான அநீதிகளை இழைத்தவர்கள்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது. நேரு இடஒதுக்கீட்டை தெளிவாக எதிர்த்து முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார். காங்கிரஸின் பிரதமர்களில் ஒருவரான திருமதி இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தார்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது பிரதமரான ராஜீவ் காந்தி எதிர்க்கட்சியாக இருந்தபோதே இடஒதுக்கீட்டுக்கு எதிராக மிக நீண்ட உரை நிகழ்த்தினார். இது இன்னும் நாடாளுமன்ற பதிவுகளில் கிடைக்கிறது. எனவே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கும், நாட்டு மக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். நேற்று நடந்த சம்பவத்தை இனி வரும் நூற்றாண்டுகளுக்கு கோடிக்கணக்கான நாட்டு மக்களால் மன்னிக்க முடியாது.

131 ஆண்டுகளுக்கு முன், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில், "சகிப்புத்தன்மை, உலகளாவிய ஏற்பு ஆகிய இரண்டையும் உலகிற்கு கற்பித்த ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார். 131 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக ஜாம்பவான்கள் முன்னிலையில் இந்து மதம் குறித்து இந்த அறிக்கையை வெளியிட்டார்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்துக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், இந்துக்கள் சொந்தம் என்ற உணர்வுடன் வாழும் ஒரு குழு. அதனால்தான் பாரதத்தின் ஜனநாயகம், அதன் பரந்த பன்முகத்தன்மை மற்றும் அதன் மகத்துவம் தொடர்ந்து செழித்து வளர்ந்து வருகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தீவிரமான விஷயம் என்னவென்றால், இன்று இந்துக்கள் மீது பொய் குற்றம் சுமத்த சதி நடக்கிறது; ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்படுகிறது. இந்துக்கள் வன்முறையாளர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள்தான் 'இந்து பயங்கரவாதம்' என்ற வார்த்தையை உருவாக்க முயன்றவர்கள். அவர்களின் சகாக்கள் இந்து மதத்தை டெங்கு, மலேரியா போன்ற வார்த்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள், அவர்கள் கைதட்டுகிறார்கள். இதை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

நமது ஆயுதப்படைகள் நாட்டின் பெருமை. அவர்களின் தைரியம் மற்றும் வீரம் குறித்து ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. இன்று, நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்புத் துறை சுதந்திரத்திற்குப் பிந்தைய அனைத்து ஆண்டுகளையும் விட அதிகமான சீர்திருத்தங்களை சந்தித்து வருவதை ஒட்டுமொத்த நாடும் காண்கிறது. நாங்கள் நமது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறோம், ஒவ்வொரு சவாலுக்கும் பொருத்தமான பதிலடி கொடுக்க ஒரு போர் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம், சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம், தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. சி.டி.எஸ் பதவி உருவாக்கப்பட்ட பி, ஒருங்கிணைப்புக்கு  மேலும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்திய ராணுவம் பலம் பெறுவதை காங்கிரஸால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதே உண்மை. நேரு அவர்களின் காலத்தில் நமது படைகள் எவ்வளவு பலவீனமாக இருந்தன என்பது யாருக்குத் தெரியாது? காங்கிரசின் எண்ணற்ற ஊழல்கள் நமது ராணுவத்தை பலவீனப்படுத்தின. நிலம், கடல், வான் என ராணுவத்தின் ஒவ்வொரு தேவைகளிலும் ஊழல் செய்வது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு பாரம்பரியமாக இருந்து.

நமது இளைஞர்களின் ஆற்றலும், நமது வீரர்களின் மன உறுதியும்தான் நமது ஆயுதப் படைகளின் மிகப்பெரும் பலம் என்பதை காங்கிரஸ் இப்போது உணர்ந்துள்ளது. நாட்டைக் காக்க எமது இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதைத் தடுப்பதற்காக ராணுவ ஆட்சேர்ப்பு குறித்து அப்பட்டமான பொய்களைப் பரப்பி அவர்களைத் தடுக்க சதித்திட்டத்தை உருவாக்குகின்றனர்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

யாருடைய நலனுக்காக நமது ஆயுதப் படைகளை பலவீனப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என்பதை இந்த அவையின் மூலம் அறிய விரும்புகிறேன். காங்கிரஸ் உறுப்பினர்கள் யாருடைய ஆதாயத்துக்காக நமது ராணுவத்தைப் பற்றி இவ்வளவு பொய்களைப் பரப்புகிறார்கள்?

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ரு பதவி ஒரு ஓய்வூதியம் தொடர்பாக நாட்டின் துணிச்சலான வீரர்களை ஏமாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

திருமதி இந்திரா காந்தி அவர்கள் நமது நாட்டில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் முறையை ஒழித்தார். பல தசாப்தங்களாக, காங்கிரஸ் இந்த ஒரு பதவி ஒரு ஓய்வூதியத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை, தேர்தல்கள் வரும்போது, அவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை 500 கோடி ரூபாய் ஒதுக்கி முட்டாளாக்க முயன்றனர். ஆனால் ஒரு பதவி ஒரு ஓய்வூதியத்தை முடிந்தவரை தாமதப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு பதவி ஒரு ஓய்வூதியத்தை அமல்படுத்தியது, பாரதத்தில் குறைவான வளங்கள் இருந்தபோதும், கொவிட்-19-க்கு எதிரான கடுமையான போரின் போது கூட, நமது முன்னாள் வீரர்களுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் ஒரு பதவி ஒரு ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்பட்டது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு குடியரசுத் தலைவர் தனது உரையில் வினாத்தாள் கசிவுகள் குறித்து கவலை தெரிவித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் நான் கூற விரும்புவது, இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை சும்மா விடமாட்டோம். நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு ஏற்கனவே கடுமையான சட்டத்தை இயற்றியுள்ளது. ஒட்டுமொத்த தேர்வு முறையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வளர்ச்சியை அதன் மிகப்பெரிய தீர்மானமாக மாற்றியுள்ளது. இன்று, பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான தீர்மானம் எங்களிடம் உள்ளது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின், ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ஒவ்வொரு ஏழை நபருக்கும் வீட்டு வசதி வழங்குவது எங்கள் தீர்மானமாகும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

21 ஆம் நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டாக மாற்ற பாரதம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் உள்கட்டமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உலகின் அனைத்து அளவுகோல்களுடனும் நாம் சமமாக இருக்க வேண்டும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்தியாவில் உள்கட்டமைப்புக்கான முதலீடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது, அதன் பலன்கள் இன்று மக்களுக்குத் தெரிகின்றன. நாட்டில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பும், சுய வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது இப்போது விரிவுபடுத்தப்பட வேண்டும், ஒரு புதிய வடிவம் கொடுக்கப்பட வேண்டும், நவீன இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாடு செய்யப்பட வேண்டும், இதன் அடிப்படையில், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, தொழில்துறை 4.0-ல் பாரதம் ஒரு தலைவராக உருவாக வேண்டும். இந்த திசையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

பாரதம் முன்னேறிச் செல்லச் செல்ல, இயல்பாகவே போட்டிகளும், சவால்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பாரதத்தின் முன்னேற்றத்தில் பிரச்சனை உள்ளவர்கள், பாரதத்தின் முன்னேற்றத்தை ஒரு சவாலாக பார்ப்பவர்கள், தவறான உத்திகளையும் பின்பற்றுகிறார்கள். இந்த சக்திகள் பாரதத்தின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மையைத் தாக்குகின்றன, இந்தக் கவலை என்னுடையது மட்டுமல்ல.

உச்ச நீதிமன்றமும் கூட இந்தப் பிரச்சினைகள் குறித்து கவலை கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு மேற்கோளை இன்று அவையின் முன் வைக்க விரும்புகிறேன்.

"சாத்தியமான ஒவ்வொரு முனையிலும் இந்த மாபெரும் நாட்டின் முன்னேற்றத்தை சந்தேகிக்கவும், குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், பலவீனப்படுத்தவும் ஒருங்கிணைந்த முயற்சி இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய எந்தவொரு முயற்சியும் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், அவைக்கு உள்ளேயோ வெளியேயோ உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

பாரதத்தில் கூட சிலர் அத்தகைய சக்திகளுக்கு உதவுகிறார்கள். இவ்வாறான சக்திகளுக்கு எதிராக நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இப்போது தேர்தல்கள் முடிந்துவிட்டதால், 140 கோடி மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்மானத்தை நனவாக்குவதற்கு, 'வளர்ச்சியடைந்த பாரதம்' அமைப்பதற்கு இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற பொறுப்புடன் முன்வருமாறு அனைவரையும் நான் அழைக்கிறேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இன்று, நாம் ஒரு நீண்ட விவாதத்தை நடத்தினோம், மக்களவையில் பிரதமராக இங்கு பணியாற்ற எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கிடைத்தபோது, இதே போன்ற சவால்களை நான் எதிர்கொண்டதை நீங்கள் பார்த்தீர்கள். 2019-ம் ஆண்டில், நான் அதே சவால்களை எதிர்கொண்டேன். நான் மாநிலங்களவையில் அதே சவால்களை எதிர்கொண்டேன், இப்போது அதன் காரணமாக நான் வலுவாக மாறியுள்ளேன். எனது தைரியம் வலுவானது, எனது குரல் வலுவானது, எனது தீர்மானங்கள் வலுவானவை.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள், புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், இந்த எதிர்பார்ப்புடன், மாண்புமிகு குடியரசுத் தலைவரின் உரைக்காக நான் அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே, எனக்கு நேரம் ஒதுக்கியதற்காகவும், விரிவாகப் பேச வாய்ப்பளித்ததற்காகவும், இரைச்சலுக்கு இடையிலும் உண்மையைக் கேட்க அனுமதித்ததற்காகவும் நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய முயற்சிகளால் உண்மை மறைக்கப்படுவதில்லை, பொய்மைக்கு வேர்கள் இல்லை.

மாண்புமிகு மக்களவைத் தலைவர் அவர்களே,

இந்த அவைக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், இன்று நான் அதை மிகவும் அனுபவித்தேன் என்பதையும் கூற வேண்டும். இன்று சத்தியத்தின் சக்தியை நான் நேரடியாக அனுபவித்தேன், சத்தியத்தின் வலிமையையும் கண்டேன். எனவே, மக்களவைத் தலைவர் அவர்களே, நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி!

***

 (Release ID: 2030310)

SMB/RS/KR



(Release ID: 2034018) Visitor Counter : 16