பிரதமர் அலுவலகம்

ஆஸ்திரியாவின் வியன்னாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 10 JUL 2024 11:59PM by PIB Chennai

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

மேதகு ஆஸ்திரிய பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களே, வெளிநாடுவாழ் இந்தியர்களே, இந்தியாவின் அனைத்து நண்பர்களே, நலன் விரும்பிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நண்பர்களே,

ஆஸ்திரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இங்கு நான் காணும் உற்சாகமும், எழுச்சியும் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் ஒருவர் இங்கு வந்துள்ளார். இந்தியாவிலிருந்து ஒரு பிரதமர் கடைசியாக இங்கு வந்தபோது உங்களில் பலர் பிறந்திருக்க மாட்டீர்கள்.

நண்பர்களே,

இந்தக் காத்திருப்பு ஒரு வரலாற்று நிகழ்வுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவும் ஆஸ்திரியாவும் 75 வருட நட்புறவைக் கொண்டாடுகின்றன. இந்த அற்புதமான வரவேற்புக்காக அதிபர் கார்ல் நெஹாமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மார்ட்டின் கோச்சருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

புவியியல் ரீதியாக, இந்தியாவும் ஆஸ்திரியாவும் உலகின் எதிரெதிர் பக்கங்களில் உள்ளன. ஆனால் நமக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன. ஜனநாயகம் நம் இரு நாடுகளையும் இணைக்கிறது. சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிப்பது ஆகியவை நமது பகிரப்பட்ட மதிப்புகளாகும். நமது இரு சமூகங்களும் பன்முக கலாச்சாரம் மற்றும் பன்மொழி பேசுபவை. பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது நம் இரு நாடுகளின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இந்த விழுமியங்களைப் பிரதிபலிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஊடகமாக தேர்தல்கள் உள்ளன. ஆஸ்திரியாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் ஜனநாயக திருவிழாவை பெருமையுடன் இந்தியா கொண்டாடி முடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தல் இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது.

நண்பர்களே,

இந்தியாவில் தேர்தல் நடக்கிறது என்று கேள்விப்படும் போது உலகெங்கிலும் உள்ள மக்கள் வியப்படைகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தேர்தலில் 65 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இது ஆஸ்திரியாவின் மக்கள் தொகையை விட 65 மடங்கு அதிகம். கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் முடிவுகள் சில மணி நேரங்களுக்குள் அறிவிக்கப்படுகின்றன. இதுதான் இந்தியாவின் தேர்தல் இயந்திரம் மற்றும் நமது ஜனநாயகத்தின் பலம்.

நண்பர்களே,

இந்தத் தேர்தலில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளும், எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உலகெங்கிலும் அரசியல் நிலையின்மையை நாம் கண்டோம். பெரும்பாலான நாடுகளில் அரசுகள் நீடித்திருப்பது அவ்வளவு  எளிதானதல்ல. அரசுகள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், இந்திய மக்கள் என் மீதும், எனது கட்சி மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியா ஸ்திரத்தன்மையையும் தொடர்ச்சியையும் விரும்புகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்தத் தொடர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கானது. இந்தத் தொடர்ச்சி நல்லாட்சிக்கானது. இந்தத் தொடர்ச்சி மகத்தான தீர்மானங்களை நோக்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கானது.

நண்பர்களே,

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அரசுகளால் மட்டும் கட்டியெழுப்பப்படுவதில்லை என்று நான் எப்போதும் நம்புகிறேன். இந்த உறவுகளை வலுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது. அதனால்தான் இந்த உறவுகளுக்கு உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். தீபாவளியாக இருந்தாலும் சரி, கிறிஸ்துமஸ் பண்டிகையாக இருந்தாலும் சரி, நீங்கள் அதை சமமான உற்சாகத்துடன் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் டார்ட்டஸ் மற்றும் லட்டு இரண்டையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரித்து, சாப்பிட்டு வழங்குகிறீர்கள். ஆஸ்திரியாவின் கால்பந்து அணியையும், இந்தியாவின் கிரிக்கெட் அணியையும் அதே ஆர்வத்துடன் உற்சாகப்படுத்துகிறீர்கள். நீங்கள் இங்கே காபியை அனுபவிக்கிறீர்கள். உங்கள் சொந்த  நாடான இந்தியாவின்  தேநீர் கடைகளையும் அன்புடன் நினைவில் கொள்கிறீர்கள்.

நண்பர்களே,

இந்தியாவைப் போலவே, ஆஸ்திரியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது என்பதுடன் அற்புதமானதும் கூட. நமது வரலாற்று தொடர்புகள் இரு நாடுகளுக்கும் கலாச்சார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பயனளித்துள்ளன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, வியன்னா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத ஆய்வுகள் தொடங்கப்பட்டன. 1880 ஆம் ஆண்டில் இந்தியவியலுக்கான ஒரு சுதந்திரமான இருக்கை நிறுவப்பட்டது சமஸ்கிருதத்தின் மீதான இந்த ஆர்வத்தை மேலும் உயர்த்தியது. இன்று, இங்கு சில பிரபலமான இந்தியவியலாளர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களின் உரையாடல்கள் இந்தியாவின் மீது அவர்களுக்கு இருந்த ஆழமான ஆர்வத்தை தெளிவாக பிரதிபலித்தன. பல மகத்தான இந்திய ஆளுமைகள் ஆஸ்திரியாவால் மிகவும் நேசிக்கப்பட்டுள்ளனர். ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற நமது மகத்தான தலைவர்களுக்கு வியன்னா விருந்தளித்துள்ளது. காந்தியின் சீடர் மீராபென் தனது கடைசி நாட்களை வியன்னாவில் கழித்தார்.

நண்பர்களே,

 

நமது உறவு கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பானது மட்டுமல்ல; அறிவியலும் நம்மை இணைக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, நமது நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் வியன்னா பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று, நோபல் பரிசு பெற்ற ஆண்டன் ஜீலிங்கரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த இரண்டு பெரிய விஞ்ஞானிகளும் குவாண்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.

நண்பர்களே,

இன்று உலகம் முழுவதும் இந்தியாவைப் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கின்றன. இந்தியாவை அறியவும், புரிந்து கொள்ளவும் அனைவரும் விரும்புகின்றனர். இந்தியாவைப் பற்றிய சிறந்த தகவலறிந்த உலகத்தை உருவாக்குவது முக்கியம். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா உலக வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட சமமான பங்களிப்பை அளிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நாம் அறிவையும் நிபுணத்துவத்தையும் உலகத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் போர்களைத் தொடங்கவில்லை; இந்தியா புத்தரைக் கொடுத்தது, யுத்தங்களை அல்ல என்று பெருமையுடன் சொல்லலாம். புத்தரைப் பற்றி நான் பேசும்போது, இந்தியா எப்போதும் அமைதியையும், செழிப்பையும் வழங்கியுள்ளது என்று அர்த்தம்.

நண்பர்களே,

இந்தியாவில் வேகமாக நடந்து வரும் மாற்றங்களைப் பற்றி நீங்கள் படிக்கும்போதும், கேட்கும்போதும், நீங்கள் பெருமிதத்தால் மகிழ்ச்சி அடைகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா இன்று ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2014 ஆம் ஆண்டில், நான் இந்த சேவையை ஏற்றுக்கொண்டபோது, நாம் 10 வது இடத்தில் இருந்தோம். இன்று 5-வது இடத்தை எட்டியுள்ளோம். இன்று, இந்தியா 8% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் சென்றால் விரைவில், நாம் முதல் 3 இடங்களை அடைவோம்.

 நண்பர்களே,

எனது மூன்றாவது பதவிக்காலத்தில் நாட்டை உலகின் முதல் 3 பொருளாதாரங்களுக்கு கொண்டு செல்வேன் என்று குடிமக்களுக்கு உறுதியளித்துள்ளேன்.  1947 ஆம் ஆண்டில், நாடு சுதந்திரம் பெற்றது, 2047 ஆம் ஆண்டில், நாடு தனது நூற்றாண்டைக் கொண்டாடும். ஆனால் அந்த நூற்றாண்டு வளர்ந்த இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். இந்தியா எல்லா வகையிலும் வளர்ச்சி அடையும். அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம்.

நண்பர்களே,

கல்வி, திறன்கள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும், ஒரு புதிய பல்கலைக்கழகம் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு நாளும் 250 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் வழங்கப்பட்டன. இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு 10வது யூனிகார்னும் இந்தியாவில் உள்ளது. உலகின் பிற பகுதிகளில் நடக்கும் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இணையாக இந்தியா மட்டுமே உள்ளது.

நண்பர்களே,

இன்று, இந்தியா சிறந்த, பிரகாசமான, மிகப்பெரிய, மிக உயர்ந்த மைல்கற்களுக்காக உழைத்து வருகிறது. தொழில்துறை 4.0 மற்றும் பசுமையான எதிர்காலத்திற்காக இந்தியாவை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் குறிக்கோள் 2070 க்குள் நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைவதாகும். பசுமை நகர்வுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியால் ஆஸ்திரியாவும் பயனடைந்து வருகிறது. இன்று 150-க்கும் மேற்பட்ட ஆஸ்திரிய நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றன. இந்தியாவின் கட்டமைப்பு, மெட்ரோக்கள், அணைகள், சுரங்கப்பாதைகள் போன்ற பல உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஆஸ்திரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எதிர்காலத்தில் இங்கிருந்து அதிகமான நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

ஆஸ்திரியாவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை பெரிதாக இல்லை. ஆனால் ஆஸ்திரிய சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பு பாராட்டத்தக்கது. குறிப்பாக இங்குள்ள சுகாதாரத் துறையில் உங்கள் பங்கு மிகவும் பாராட்டப்படுகிறது. இந்தியர்களாகிய நாம் நமது கவனிப்புக்கும் இரக்கத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இந்த மதிப்புகளை நீங்கள் உங்கள் தொழிலில் உங்களுடன் எடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வழியில் ஆஸ்திரியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து பங்களிப்பு செய்வீர்களாக! இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்ததற்காகவும், உங்களது உற்சாகம் மற்றும் ஆற்றலுக்காகவும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி.

நண்பர்களே,

ஆஸ்திரியாவுக்கான இந்த முதல் பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆஸ்திரிய அரசுக்கும், மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இந்த முறை ஆகஸ்ட் 15 கொண்டாடுவதில் முந்தைய அனைத்து சாதனைகளையும் நீங்கள் முறியடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

மிகவும் நன்றி!

***

(Release ID: 2032285)

PKV/KV/KR



(Release ID: 2033986) Visitor Counter : 17