உள்துறை அமைச்சகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது


இந்த தினம் அனுசரிக்கப்படுவது, ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களுக்கு மரியாதை செலுத்துதற்கான அடையாளமாகும் – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 12 JUL 2024 5:40PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினதாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 1975 ஜூன் 25 அன்று, அப்போதைய பிரதமர் ஒரு சர்வாதிகார மனப்பான்மையின் அடிப்படையில் தேசத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி  ஜனநாயக ஆன்மாவின் குரல்வளையை நெரித்ததாகக் கூறியுள்ளார். இதனால் லட்சக்கணக்கான மக்கள் எந்தத் தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும், ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 25ஆம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின்போது மனிதாபிமானமற்ற செயல்களால் துன்பங்களைச் சந்தித்த அனைவரின் மகத்தான பங்களிப்புகளையும் இந்த நாள் நினைவுகூரும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அப்போதைய அடக்குமுறை அரசால் துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும் ஜனநாயகத்தை மீட்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் உணர்வை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்த தினம் கடைப்பிடிக்கப்படுவது, தனிநபர் சுதந்திரம் என்ற சுடரை ஒவ்வொரு இந்தியரிடமும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எந்தவொரு சர்வாதிகார சக்தியும் இதுபோன்ற கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும் என்றும் மத்திய அமைச்சர் திரு அமித்ஷா கூறியுள்ளார்.  

***************

PLM/KV
 



(Release ID: 2032971) Visitor Counter : 11