சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக மக்கள்தொகை தினம் 2024


குடும்பக் கட்டுப்பாடு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா காணொலி காட்சி மூலம் விவாதித்தார்

Posted On: 11 JUL 2024 3:28PM by PIB Chennai

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா குடும்பக் கட்டுப்பாடு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று விவாதித்தார். “தாய்-சேய் நலனுக்காக ஆரோக்கியமான காலமும், கருவுறுதலில் இடைவெளியும்” என்ற மையப்பொருளில்  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் முன்னிலை வகித்தார்.

உலக மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கினை இந்தியா கொண்டிருப்பதை எடுத்துரைத்த  அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை  மறுஉறுதி செய்யும் வகையில், உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  சிறு குடும்பங்கள் என்ற நெறிமுறையை சாதித்து இந்தியாவில் உள்ள குடும்பங்களை ஆரோக்கியமாக  பராமரிப்பதன் மூலமே,  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்று  அவர் கூறினார்.

குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதற்கான தெரிவு பெண்களின் உரிமை என்பதை உறுதி செய்வதற்கும், விருப்பமில்லாத கருவுறுதல் சுமையை உருவாக்காமல் இருப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள், கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசின் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான குடும்ப நல இயக்கம் என்பது பற்றி பேசிய திரு நட்டா, இது முதலில் 7 மாநிலங்களின் 146 உயர் முன்னுரிமை மாவட்டங்களில் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் இந்த மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும், 6 வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவலை கடைக்கோடி பகுதி வரை பரவலாக்கிய சுகாதார, முன்கள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும் டாக்டர் நட்டா பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல், மத்திய அரசின் குடும்ப நலத்திட்டம் ஏற்கனவே இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டதாகவும், தற்போது தயாரிப்பு கட்டம், சமூகப் பங்கேற்பு, சேவை வழங்குதல் என்ற  3 நிலைகளில் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது, சுகம் என்ற குடும்பக்கட்டுப்பாடு மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டதோடு, உலக மக்கள் தொகை தினம் 2024-க்கான நடப்பாண்டின் மையப்பொருள் குறித்த சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின்  சுகாதாரத் துறை, முதன்மை செயலாளர்கள் தங்களின் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துரைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032409

***

SMB/RS/DL


(Release ID: 2032518) Visitor Counter : 88