பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
Posted On:
10 JUL 2024 5:27PM by PIB Chennai
மேதகு பிரதமர் கார்ல் நெஹாமர் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக உறுப்பினர்களே,
வாழ்த்துக்கள்.
அன்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் பிரதமர் நெஹாமருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பானது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சிறப்பானதாகும். நமது இருதரப்பு உறவுகள் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் பயணம் நடைபெறுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகும்.
நண்பர்களே,
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகள் மீதான நமது பகிரப்பட்ட நம்பிக்கை நமது உறவுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. இருதரப்பினரின் நம்பிக்கை, பகிரப்பட்ட நலன்கள் நமது உறவுகளை வலுப்படுத்துகின்றன. இன்று, பிரதமர் நெஹாமரும் நானும் மிகவும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம். நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டுள்ளோம். நமது உறவுக்கு உத்திபூர்வ திசையை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் தசாப்தங்களில் ஒத்துழைப்புக்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ரஜன், நீர், கழிவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நமது பலத்தை ஒருங்கிணைக்க நாம் பணியாற்றுவோம். இரு நாடுகளின் இளைஞர்களையும், சிந்தனைகளையும் இணைக்கும் வகையில், ஸ்டார்ட் அப் பாலம் விரைவுபடுத்தப்படும். புலம்பெயர்வு கூட்டாண்மை குறித்த உடன்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. இது சட்டப்பூர்வ இடப்பெயர்வு, திறமையான தொழிலாளர்களின் இயக்கத்தை எளிதாக்கும். கலாச்சார, கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஊக்குவிக்கப்படும்.
நண்பர்களே,
நாம் நிற்கும் இந்த மண்டபம் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. 19 ஆம் நூற்றாண்டில், வரலாற்று சிறப்புமிக்க வியன்னா காங்கிரஸ் இங்கு நடத்தப்பட்டது. அந்த மாநாடு ஐரோப்பாவில் அமைதி, நிலைத்தன்மைக்கு வழிகாட்டுதலை வழங்கியது. பிரதமர் நெஹாமரும் நானும் உலகெங்கிலும் நடந்து வரும் மோதல்கள் குறித்து விரிவாக விவாதித்தோம், அது உக்ரைன் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசிய நிலைமையாக இருந்தாலும் சரி. இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன். போர்க்களத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எங்கிருந்தாலும் அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை விரைவில் மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தை, ராஜீய நடவடிக்கைகளை இந்தியாவும் ஆஸ்திரியாவும் வலியுறுத்துகின்றன. இதை அடைவதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் இருவரும் தயாராக இருக்கிறோம்.
நண்பர்களே,
பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இன்று நாங்கள் எங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். பருவநிலை தொடர்பாக, சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற நமது முன்முயற்சிகளில் இணையுமாறு ஆஸ்திரியாவை நாங்கள் அழைக்கிறோம். தீவிரவாதத்தை நாங்கள் இருவரும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை, இதர சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
வரவிருக்கும் மாதங்களில், ஆஸ்திரியாவில் தேர்தல் நடைபெறும். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய மக்களின் சார்பில் பிரதமர் நெஹாமருக்கும், ஆஸ்திரிய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில், இரு நாடுகளின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளோம். மதிப்பிற்குரிய ஆஸ்திரிய அதிபரைச் சந்திக்கும் கவுரவத்தையும் நான் பெறுகிறேன். நட்புக்காக பிரதமர் நெஹாமருக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கிறேன்.
மிகவும் நன்றி.
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
PKV/RR/DL
(Release ID: 2032193)
Visitor Counter : 90
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam