சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மகாராஷ்டிராவில் ஜிக்கா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதையெடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுரை குறிப்புகளை வழங்கியுள்ளது

Posted On: 03 JUL 2024 3:07PM by PIB Chennai

மகாராஷ்டிராவில்  ஜிக்கா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைச் சேர்ந்த சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அருள் கோயல்  மாநிலங்களுக்கு அறிவுரை குறிப்புகளை அனுப்பியுள்ளார். நிலைமையை கண்காணிக்கவும், ஏடிஸ் கொசுக்கள் இல்லாத வகையில் வளாகங்களைப் பராமரிக்கவும் சுகாதார நிறுவனங்கள்/ மருத்துவமனைகளுக்குத் தொடர்பு அலுவலரை அடையாளம் காணுமாறும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை  அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என்றும் அந்த அறிவுரை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பின்னணி

டெங்கு, சிக்குன்குனியா போன்று ஜிக்கா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் வைரல் நோயாகும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கருவுற்ற பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2016-ம் ஆண்டு குஜராத்தில் முதலாவது ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.

2024-ல் (ஜூலை 2 வரை) மகாராஷ்டிராவில் 8 ஜிக்கா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2030371

***

SMB/RS/KV



(Release ID: 2030493) Visitor Counter : 41