உள்துறை அமைச்சகம்

தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டாவது மலையேற்றப் பயணக் குழுவான 'விஜய்' வெற்றிகரமாகத் திரும்பியது- மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வரவேற்றார்

Posted On: 29 JUN 2024 4:07PM by PIB Chennai

21,625 அடி உயர மணிரங் மலையில் வெற்றிகரமாக ஏறித் திரும்பிய தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டாவது மலையேற்றப் பயணக் குழுவான விஜய்  குழுவை மத்திய உள்துறை அமைச்சர்  திரு அமித் ஷா இன்று (29.06.2024) புதுதில்லியில் வரவேற்றார்.மத்திய உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குநர் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பேரிடர் மேலாண்மைத் துறை ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியையும் உள்துறை அமைச்சர் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் பயன்படுத்தும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் துருக்கியில் பல்வேறு பேரிடர் மீட்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இந்த நிகழ்ச்சியின்போது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித்ஷா, வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்பது, நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பது, இடிந்து விழுந்த கட்டடங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணி, மலைகளில் மீட்பு, ஆழ்துளை கிணறுகளில் விழுந்தவர்களை மீட்பது, புயல்களின்போது மீட்புப் பணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டினார். தேசியப்  பேரிடர் மீட்புப் படையின் உபகரணங்களை மேலும் மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.

21,625 உயரமான மணிரங் மலையை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக தேசியப் பேரிடர் மீட்புப் படையினரை திரு அமித் ஷா பாராட்டினார்இதுபோன்ற மலையேற்றப் பயணங்களில் இலக்குகளை அடைவது மிகப் பெரிய சாதனை என்று  அமைச்சர் கூறினார்.

ஆபரேஷன் விஜய் என்ற இந்த மலையேற்றப் பயணக் குழுவில் இடம்பெற்ற 35 வீரர்களுக்கும், தேசியப்  பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநருக்கும் மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீரர்கள்  21,600 அடிக்கும் அதிகமான உயரத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது ஒட்டுமொத்த படையினருக்கும் மிகப்பெரிய சாதனை விஷயமாகும் என்று திரு ஷா கூறினார். நாம் வெற்றியின் உச்சியை அடைய வேண்டும் என்றால், வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான இலக்கை நாம் பின்பற்ற வேண்டும், அப்போதுதான் வெற்றியை அடைய முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது நாட்டில் பேரிடர் மேலாண்மை என்பதில்  உயிரிழப்பு இல்லாத அணுகுமுறை பின்பற்றப்படுகிறது என்றும் நிவாரணத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறை அல்ல என்றும் திரு அமித் ஷா கூறினார். பேரிடர் மேலாண்மை அணுகுமுறையைப் பொறுத்தவரை இது இந்தியாவின் மகத்தான செயல்பாடு என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர்களை சமாளிக்க சிறந்த நடைமுறைகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது உலகில் எங்காவது பேரிடர் ஏற்பட்டால், அனைவரும் நமது தேசியப் பேரிடர் மீட்புப் படையின் சேவையை எதிர்நோக்குகின்றனர் என்று அவர் கூறினார்துருக்கி, சிரியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் பேரிடர்களின்போது இந்தியப் பேரிடர் மீட்புப் படையினர் ஆற்றிய பணிகளை அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக, பனிச்சரிவு, நிலச்சரிவுகள், வெள்ளம், புயல்கள் போன்ற அபாயங்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதை மனதில் கொண்டு, பூஜ்ய உயிரிழப்பு என்ற இலக்கை நோக்கி நாம் உறுதியாகச் செல்ல வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

******

 

ANU/SMB/PLM/KV

 



(Release ID: 2029518) Visitor Counter : 32