மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேர்வுகள் வெளிப்படையாக, சுமூகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சகம் உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்துள்ளது

Posted On: 22 JUN 2024 3:04PM by PIB Chennai

தேசிய தேர்வு முகமை  மூலம் நடத்தப்படும் தேர்வுகள் வெளிப்படையாக, சுமூகமாக, நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை பின்வரும் கருத்துகள் மீது பரிந்துரைகள் வழங்க உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்தது:

தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம்,

தரவுப் பாதுகாப்பு நெறிமுறைகளில் மேம்பாடு.

தேசியத் தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்

உயர்நிலைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விவரம்:

தலைவர் - டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், இஸ்ரோ முன்னாள் தலைவர், கான்பூர் ஐஐடி நிர்வாக வாரியத் தலைவர்

உறுப்பினர்கள்:

டாக்டர் ரன்தீப் குலேரியா, தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர்  

பேராசிரியர் பி.ஜே. ராவ், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்

பேராசிரியர் கே.ராமமூர்த்தி, சென்னை ஐஐடி, சிவில் இன்ஜினீரிங் துறை முன்னாள் பேராசிரியர்

திரு பங்கஜ் பன்சால், பீப்பிள் ஸ்ட்ராங் இணை அமைப்பாளர், கர்மயோகி பாரத் வாரிய உறுப்பினர்

பேராசிரியர் ஆதித்ய மிட்டல், மாணவர் நலப்பிரிவு டீன், தில்லி ஐஐடி

திரு கோவிந்த் ஜெய்ஸ்வால், மத்தியக் கல்வி அமைச்சக இணைச்செயலாளர்

 

 

இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகள் வருமாறு:

(i) தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம்

() தேர்வு செயல்முறையை பகுப்பாய்வு செய்தல் மற்றும் அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல், சாத்தியமான மீறல்களைத்  தடுத்தல்.

()தேசியத் தேர்வு முகமையின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபிக்கள்) / நெறிமுறைகள் குறித்து முழுமையான ஆய்வு செய்தல், மேலும் ஒவ்வொரு மட்டத்திலும் இணக்கத்தை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு நடைமுறைகள் / நெறிமுறைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப்  பரிந்துரைத்தல்.

(ii) தரவுப் பாதுகாப்பு நெறிமுறைகளில் மேம்பாடு

() தற்போதுள்ள தரவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் அதன் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.

() பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பு மற்றும் பிற நடைமுறைகள் தொடர்பாகத்  தற்போதுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை ஆய்வு செய்தல் மற்றும் அமைப்பின் வலிமையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்.

(iii) தேசியத் தேர்வு முகமையின் அமைப்பு மற்றும் செயல்பாடு

() தேசியத் தேர்வு முகமையின் நிறுவன கட்டமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் (i) மற்றும் (ii) -ல் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகளை தெளிவாக வரையறுத்தல்.

() தேசியத் தேர்வு முகமையின் தற்போதைய குறை தீர்க்கும் அமைப்பை மதிப்பீடு செய்தல், முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் கண்டு அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் இந்தக் குழு தனது அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இக்குழு தங்களுக்கு உதவ துறைசார் வல்லுநர் எவரையும் நியமித்துக் கொள்ளலாம்.

 

***

ANU/SMB/KV

 



(Release ID: 2027938) Visitor Counter : 76