பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு ஜூன் 18-19 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்



உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார்

ரூ.20,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையைப் பிரதமர் விடுவிக்கிறார்

சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000க்கும் அதிகமான பெண்களுக்கு விவசாயத் தோழிகளாக சான்றிதழ்களைப் பிரதமர் வழங்குவார்

பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைப் பிரதமர் திறந்து வைப்பார்

Posted On: 17 JUN 2024 9:52AM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கு  2024, ஜூன் 18-19 தேதிகளில்  பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஜூன் 18 மாலை 5 மணியளவில் விவசாயிகள் கெளரவிப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார். இரவு 7 மணியளவில் தசாஸ்வமேத் படித்துறையில் கங்கை ஆரத்தியைப் பிரதமர் பார்வையிடுவார். இரவு 8 மணியளவில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் பூஜையும் தரிசனமும் செய்வார்.

ஜூன் 19 காலை 9.45 மணியளவில் தொன்மையான நாளந்தாவுக்கு செல்லும் பிரதமர் காலை 10.30 மணியளவில் பீகாரின் ராஜ்கீரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்துவைப்பார். இந்த நிகழ்வில் பங்கேற்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.

 

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர்

மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றபின், விவசாயிகள் நலனில் அரசின் உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் விதமாக பிஎம் கிசான் நிதியின் 17-வது தவணைத் தொகையை விடுவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் முதலாவது கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். இந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பிஎம் கிசான் கெளரவிப்பு நிதியின் கீழ் 17-வது தவணையை நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம், 9.26 கோடி விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பிரதமர் விடுவிப்பார். பிஎம் கிசான் கெளரவிப்பு நிதியின் கீழ் இதுவரை 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயக் குடும்பங்கள் ரூ. 3.04 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் அதிகமான பெண்களுக்கு விவசாயத் தோழிகள் என்ற சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.

துணைத் தொழிலாளர்களாக விவசாயத் தோழிகள் பயிற்சியும் சான்றிதழும் வழங்கி கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளித்து ஊரக இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். "லட்சாதிபதி சகோதரி" திட்ட நோக்கத்துடனும் இந்தச் சான்றிதழ் வகுப்பு இணைந்துள்ளது.

 

பீகாரில் பிரதமர்

பீகாரின் ராஜ்கீரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைப்  பிரதமர் திறந்துவைப்பார்.

இந்தப் பல்கலைக்கழகம் இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டு நாடுகளின் கூட்டான ஒத்துழைப்பில் உருவாகியுள்ளது. தொடக்க விழாவில் 17 நாடுகளின் தூதரகத் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த வளாகத்தில் சுமார் 1900 இருக்கைகள் கொண்ட 40 வகுப்பறைகளுடன் இரண்டு வளாகப் பகுதிகள் உள்ளன. இது ஒவ்வொன்றும் 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்குகளைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய மாணவர் விடுதி உள்ளது.  சர்வதேச மையம், 2000 பேர் அமரக்கூடிய ஆம்பி தியேட்டர், ஆசிரியர் மன்றம்  விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் இது கொண்டுள்ளது.

இந்த வளாகம் ஒரு 'நிகர பூஜ்ஜிய' பசுமை வளாகமாகும். சூரிய மின்சக்தித் திட்டம், வீட்டு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு திட்டம், கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான நீர் மறுசுழற்சி ஆலை, 100 ஏக்கர் நீர்நிலைகள் மற்றும் பல சுற்றுச்சூழல் நட்பு வசதிகளுடன் இது தன்னிறைவானது.

இந்தப் பல்கலைக்கழகம் வரலாற்றுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பழைய  நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் முதல் குடியிருப்புப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், நாளந்தாவின் இடிபாடுகள் ஐ.நா பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.

 

***


AD/SMB/DL



(Release ID: 2025882) Visitor Counter : 50