சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதாரத்திற்கான நெல்சன் மண்டேலா விருதினை தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் கல்விக்கழகம் பெற்றுள்ளது

Posted On: 31 MAY 2024 4:22PM by PIB Chennai

2024-ம் ஆண்டிற்கு சுகாதாரத்திற்கான நெல்சன் மண்டேலா விருது தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் கல்விக்கழகத்திற்கு உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் பெங்களூருவில் செயல்படும் இந்தக் கல்விக்கழகம் நெல்சன் மண்டேலா விருது பெற்றிருப்பதற்கு மத்திய சுகாதார  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார கவனிப்பில் இந்தியாவின் முயற்சிக்கான அங்கீகாரம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதே போல் சுகாதாரத்துறைச் செயலாளர் திரு அபூர்வ சந்திராவும் இந்தக் கல்விக் கழகத்தின் சாதனைக்காக பாராட்டுத் தெரிவித்துள்ளார். மனநலத்துறையில் இந்தியாவின் முயற்சி மற்றும் முன்மாதிரிப் பணிகளுக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது பற்றி அவர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.

 

“எமது கல்விக் கழகப் பயணத்தின் இந்தத் தருணத்தில் சுகாதார மேம்பாட்டுக்கான கௌரவம் மிக்க நெல்சன் மண்டேலா விருது பெற்றிருப்பது  நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று  தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் கல்விக்கழக இயக்குநர் டாக்டர் பிரதீமா மூர்த்தி தெரிவித்துள்ளார்.  “இந்த விருது எங்களின் கடந்த காலம் மற்றும் நிகழ்கால சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, மனநல மேம்பாட்டு இயக்கத்தைத் தொடர்வதற்கான எங்களின் முயற்சியையும் வலியுறுத்துகிறது“ என்று  அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யும் தனிநபர்கள், நிறுவனங்கள்,  அரசு அல்லது அரசு சாரா அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  உலக சுகாதார நிறுவனத்தால்  2019-ம் ஆண்டு சுகாதார மேம்பாட்டுக்கான நெல்சன் மண்டேலா விருது நிறுவப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022303

------ 

SMB/KPG/KV



(Release ID: 2022387) Visitor Counter : 102