சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
77-வது உலக சுகாதார சபையின் நிறைவு அமர்வில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் உரையாற்றினார்
Posted On:
29 MAY 2024 2:22PM by PIB Chennai
ஜெனீவாவில் இன்று நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77-வது உலக சுகாதார சபையின் நிறைவு அமர்வில், இந்திய தூதுக்குழுவுக்கு தலைமை வகிக்கும், மத்திய சுகாதார செயலாளர் திரு. அபூர்வ சந்திரா உரையாற்றினார்.
"அனைவருக்கும் ஆரோக்கியம்" என்ற இந்த ஆண்டுக் கருப்பொருளைக் குறிப்பிட்டு அவர் தமது உரையைத் தொடங்கினார். "உலகம் ஒரே குடும்பம்" என்று பொருள்படும் இந்திய பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை இந்தியா செயல்படுத்துவதாகவும் இதன் மூலம் மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியை இந்தியா தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
சுகாதார அவசர நிலைகளைக் கண்டறிதல், மதிப்பிடுதல், மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்க எடுப்பதில் இந்தியா சிறந்த திறன்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். "கடந்த சில ஆண்டுகளில் பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காசநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்பும் இந்தியாவில் குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.
உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாக விளங்கும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் பற்றியும் அவர் விளக்கினார். சுகாதாரப் பராமரிப்பில் டிஜிட்டல் முன்முயற்சிகள் மூலம், இத்துறையில் இந்தியா ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
மருத்துவ சுற்றுலாவின் முக்கிய இடங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சுகாதாரத் துறையில் அதிக பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை இந்தியா கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஆயுஷ் மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைப் பெற இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவுக்கான ஆயுஷ் விசா என்ற புதிய விசா திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் செயல்முறைகளில் இந்தியா ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டுள்ளது என்றும் இது எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் மற்றும் பொது சுகாதார அவசரநிலைகளைக் கூட்டாக எதிர்கொள்ள உதவும் என்றும் திரு அபூர்வா சந்திரா கூறினார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஹெகாலி ஜிமோமி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
************
(Release ID: 2022049)
ANU/SRI/PLM/KPG/RR
(Release ID: 2022097)
Visitor Counter : 121