தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத் தொடர்புத் துறையினர் போல் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், செல்பேசி எண்களைத் துண்டிப்போம் என்று மக்களை மிரட்டுவதற்கு எதிராக அரசின் அறிவுறுத்தல்

Posted On: 29 MAR 2024 9:46AM by PIB Chennai

தொலைத் தொடர்பு துறையினர் என்ற பெயரில்,குடிமக்களுக்கு வரும் அழைப்புகளில் அவர்களின் செல்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது அவர்களின் செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அழைப்பாளர்கள் அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) குடிமக்களுக்கு ஓர் அறிவுறுத்தலை  வெளியிட்டுள்ளது.  அரசு அலுவலர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்ற  வெளிநாட்டு செல்பேசி எண்களிலிருந்து (+92-xxxxx) வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும்  தொலைத் தொடர்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

 

இதுபோன்ற அழைப்புகள் மூலம் சைபர் குற்றவாளிகள், சைபர் குற்றம்  / நிதி மோசடிகளை செய்ய அச்சுறுத்தவும்  தனிப்பட்ட தகவல்களைத் திருடவும் முயற்சிக்கின்றனர். தொலைத் தொடர்பு துறை தனது  சார்பாக இதுபோன்ற அழைப்பைச் செய்ய யாருக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பதால்  மக்கள் விழிப்புடன் இருக்குமாறு இத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற அழைப்புகளைப் பெறும்போது எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதுபோன்ற மோசடி தகவல்தொடர்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) 'சாக்ஷு-ரிப்போர்ட் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகள்' என்ற பிரிவில் புகாரளிக்குமாறு தொலைத் தொடர்பு துறை குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள், நிதி மோசடிகள் போன்றவற்றுக்கு தொலைத்தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இதுபோன்ற முன்கூட்டிய தகவல்கள் தொலைத் தொடர்புத் துறைக்கு உதவுகின்றன.

 

மேலும், குடிமக்கள் தங்கள் பெயரில் உள்ள செல்பேசி  இணைப்புகளை சஞ்சார் சாத்தி போர்ட்டலின் (www.sancharsaathi.gov.in) 'உங்கள் செல்பேசி இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியில்  சரிபார்த்து, தங்களால்  பயன்படுத்தப்படவில்லை  அல்லது தங்களுக்குத் தேவையில்லை என்ற தகவலைத்  தெரிவிக்கலாம்.

 

ஏற்கனவே சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளாகியிருந்தால் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகாரளிக்குமாறு தொலைத் தொடர்புத் துறை குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

*** 

SMB/KRS


(Release ID: 2016665) Visitor Counter : 208