பிரதமர் அலுவலகம்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தி்ற்கு பதிலளித்து மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 07 FEB 2024 9:25PM by PIB Chennai

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்க நான் இங்கு வந்துள்ளேன். என் சார்பில் மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது பணிவான நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

இந்த 75-வது குடியரசு தினம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த தருணத்தில், அரசியலமைப்பின் பயணத்தில் முக்கியமான கட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. தனது உரையில் அவர் இந்தியாவின் தன்னம்பிக்கை பற்றிப் பேசினார். இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். கோடிக்கணக்கான இந்திய மக்களின் ஆற்றலை மிக சுருக்கமான முறையில் மிக மதிநுட்பத்துடன் இந்த அவையின் மூலம் நாட்டிற்கு எடுத்துரைத்தார். உத்வேகம் அளிக்கும் வகையிலும், நாட்டை வழிநடத்தியதற்காகவும், வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில், அவர் ஆற்றிய உரைக்காக நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவாதத்தின் போது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி விவாதத்தை தங்களுக்கே உரித்தான வழிமுறையில் வளப்படுத்த முயன்றனர். இந்த விவாதத்தை செழுமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட மதிப்பிற்குரிய அனைத்து சக உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலரை விமர்சிக்கவும், கடுமையாக பேசவும் சில உறுப்பினர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் அன்று குறிப்பிட முடியவில்லை என்றாலும், கார்கே அவர்களுக்கு இப்போது நான் சிறப்புமிகு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கார்கே அவர்களின் பேச்சை மிகவும் கவனமாக கேட்டு மிக, மிக, மகிழ்ச்சியடைந்தேன். இதுபோன்ற சந்தோஷங்கள் கிடைப்பது அரிதாகும்.  சில நேரங்களில் மக்களவையில், நாங்கள் அவரை சந்திக்கிறோம். ஆனால், தற்போது அவருக்கு இரண்டாவது பணி இருப்பதால், எங்களுக்கான பொழுதுபோக்கு அம்சத்தில் குறை ஏற்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம் மக்களவையில் நாங்கள் உணரும் அந்த குறையை நீக்கும் வகையில் பேசி குறையை நிவர்த்தி செய்தார். மதிப்பிற்குரிய கார்கே அவர்கள் நீண்டநேரம், நிதானமாகவும், அமைதியாகவும் மகிழ்ச்சியுடன் அவருக்கு  அளிக்கப்பட்ட போதுமான நேரத்தில் உரையாற்றியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம், இவ்வளவு நேரம் பேசுவதற்கான சுதந்திரம் நமக்கு எப்படி கிடைத்தது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், அங்கு வழக்கமாக வாதிடும் இரண்டு சிறப்பு தளபதிகள் அன்று இல்லை என்பது பின்னர் என் நினைவிற்கு வந்தது. இப்போதெல்லாம் அந்த சிறப்புத் தளபதிகள் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை. அதனால்தான் மதிப்பிற்குரிய கார்கே அவர்கள், கூடுதல் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டார். கார்கே அவர்கள், அன்றைய தினம் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைக் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன். இனி இதுபோன்ற வாய்ப்பு எங்கே கிடைக்கப் போகிறது என்று அவர் எண்ணவோட்டத்தில் நிறைந்திருந்திருக்கலாம். கார்கே அவர்கள் மன்னரும் இல்லை, படைவீரரும் இல்லை, என்பதாலோ என்னவோ அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்து மகிழ்ந்தார். ஆனால், அதில் ஒரு விஷயம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று அவர் ஆசீர்வதித்துள்ளார். இந்த ஆசீர்வாதத்தை மனமாற, நெஞ்சம் நிறைய கார்கே அவர்கள் அளித்த கொடையாக ஏற்றுக்கொள்கிறேன். இப்போது நீங்கள் உங்கள் ஆசீர்வாதத்தைத் திரும்பப் பெற விரும்பினாலும், அதை நீங்கள் தாராளமாகச் செய்யலாம்.  ஏனென்றால் உங்கள் ஆட்கள் வந்துவிட்டார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

கடந்த ஆண்டு நாம் அந்த அவையில் அமர்ந்திருந்தபோது, நாட்டின் பிரதமரின் குரலை நசுக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்பதை நான் தெளிவாக நினைவு கூர்கிறேன். உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் மிகுந்த பொறுமையுடனும், பணிவுடனும் கேட்டோம். இன்றும்கூட, கேட்காமலிருப்பதற்கு தயாராக வந்திருக்கிறீர்கள். கேட்கக்கூடாது என்று தயாராக வந்திருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய குரலை உங்களால் நசுக்க முடியாது. இந்த குரலுக்கு நாட்டு மக்கள் வலு அளித்துள்ளனர். நாட்டு மக்களின் ஆசீர்வாதங்களுடன் தான் இந்தக் குரல் ஒலிக்கிறது. அதே ஆசிர்வாதங்களுடன்தான் நீங்களும் கடந்த முறை வருகை தந்தீர்கள், ஆகையால், நான் இந்த முறை முழு தயாரிப்புடன் வந்துள்ளேன். அந்த நாளில் உங்களைப் போன்ற ஒரு நபர் இந்த அவைக்கு அன்றைய தினம் வந்திருந்தால் அவையின் கண்ணியத்தை எப்படி பின்பற்றியிருப்பார் என்று நான் சிந்தித்துப்பார்த்தேன், ஆனால் சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை நீங்கள் எப்படியெல்லாம் என்னை அவமதித்தீர்கள், அதற்குப் பிறகும், நான் ஒரு வார்த்தை கூட வரம்பு மீறி பேசவில்லை.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீங்களும் செய்யலாம். நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறேன். மேற்கு வங்கத்திலிருந்து சவால் விடுக்கப்பட்டுள்ளது, காங்கிரசால் 40 இடங்களுக்கு மேல் தாண்ட முடியாது என்று. ஆனால், நீங்கள் அந்த நாற்பதையாவது தக்கவைத்து கொள்ள வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

பல விஷயங்கள் எங்களுக்கு கூறப்பட்டு, நாங்களும் ஏராளமாக கேள்விப்பட்டுள்ளோம். ஜனநாயகத்தில் சொல்வதற்கான உரிமை  உங்களுக்கு உள்ளது என்பது போல், கேட்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இன்று நடைபெற்ற எல்லாவற்றையும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதை அவசியம் செய்வேன்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நான் நாலாபுறங்களிலும் கேள்விப்படுவது என்னவென்றால், அவர்களுடைய கட்சி எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு காலாவதியாகிவிட்டது என்ற எனது நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய எண்ணங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில், அவர்களுடைய பணியையும் அவர்கள் வாடகைக்கு விட்டுவிட்ட நிலை உருவாகியுள்ளது.  பல பத்தாண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அக்கட்சியின், இத்தகைய வீழ்ச்சியைப் பார்த்து, நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, உங்கள் மீது எங்களுக்கு அனுதாபம் பிறக்கிறது. ஆனால், நோயாளியே தனக்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று கூறும்போது, மருத்துவர் என்ன செய்ய முடியும்?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இன்று பல்வேறு பெரிய சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுவது என்னவோ உண்மைதான். நாம் அவற்றை கேட்டுப் புரிந்துகொள்ளும் சக்தியைக்கூட இழந்துவிட்டோம், ஆனால் நான் உங்களது கருத்துக்களை நாட்டின் முன் வெளிச்சத்திற்கு கொண்டுவருமாறு நிச்சயமாக கேட்பேன். பதவி ஆசையில் ஜனநாயகத்தின் குரல்வளையை பகிரங்கமாக நெரித்த காங்கிரஸ், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏராளமான மாநில அரசுகளை ஒரே இரவில் கலைத்த காங்கிரஸ், அவர்களை பதவி நீக்கம் செய்த காங்கிரஸ், அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய காங்கிரஸ், ஜனநாயகத்தின் மாண்பை அவமதித்த காங்கிரஸ், அதை சிறைக் கதவுகளுக்குப் பின்னால் தள்ளிப்பூட்டிய காங்கிரஸ், செய்தித்தாள்களை தடை செய்ய முயன்ற காங்கிரஸ், இன்று புதிய பொழுதுபோக்காக நாட்டை பிரிக்கும் புனை கதையை பரப்பி வருகிறது. இதுபோதாதென இப்போது வடக்கு-தெற்கே இடையே பிரிவினையை உருவாக்கும் வகையில், தற்போது அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இத்தகைய ஒரு கட்சி ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவம் பற்றி நமக்குப் பாடம் நடத்துகிறதா?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

சாதி, மொழி அடிப்படையில் நாட்டில் பிரிவினையை உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது  தீவிரவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் அனுமதித்த நிலையில், வடகிழக்குப் பகுதியில் வன்முறை நிகழ்ந்தது. நக்ஸல் பிரச்சனைகள் பெரிய சவாலாக இருந்தன. நாட்டின் பரந்த நிலப்பரப்பை எதிரி நாட்டிடம் ஒப்படைத்தனர். நாட்டின் ராணுவத்தை நவீனப்படுத்த தவறிய காங்கிரஸ், இப்போது நமக்கு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து உரை நிகழ்த்துகிறதோ? சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து தொழில்துறை அவசியமா? அல்லது வேளாண்மைத் துறை அவசியமாக என்ற குழப்பத்தில் காங்கிரஸ் இருந்தது.

தேசிய மயமாக்குவதா? அல்லது தனியார் மயமாக்குவதா? என்ற குழப்பத்திலேயே அக்கட்சி இருந்தது. பொருளாதார அமைப்பை பத்தாண்டுகளில் 12-ம் இடத்திலிருந்து 11-ம் இடத்திற்கு தான் காங்கிரசால் கொண்டுவரமுடிந்தது. இதற்கு கடின உழைப்பெல்லாம் தேவைப்படாது. ஆனால் நாங்கள் உண்மையிலேயே கடினமாக உழைத்து கடந்த பத்தாண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை 5-ம் இடத்திற்கு கொண்டுவந்துள்ளோம். இத்தகைய காங்கிரஸ், பொருளாதார கொள்கைகள் குறித்து நமக்கு இங்கே உரை நிகழ்த்துகிறதோ?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அளிக்கவில்லை. பொதுப்பிரிவினரில் ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. பாபா சாகேப் அவர்களுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருதை அளிப்பது குறித்து பரிசீலிக்காமல், தங்களுடைய குடும்பத்தினருக்கு பாரத ரத்னா விருது அளித்தது. தங்கள் குடுத்தினரின் பெயரை பூங்காக்களுக்கும், தெருக்களுக்கும், சதுக்கத்திற்கும் சூட்டிவிட்டு, அது நமக்கு பாடம் கற்பிக்கிறதோ? அவர்கள் சமூக நீதி குறித்து நமக்கு போதிக்கிறார்களோ?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

காங்கிரஸ் கட்சியில் அதற்கான தலைவருக்கோ, கட்சிக்கான கொள்கைக்கோ உத்தரவாதம் இல்லாத நிலையில், மோடியின் உத்தரவாதம் குறித்து அது கேள்விகள் கேட்கிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நாங்கள் இப்படி ஏன் எடுத்துரைக்கிறோம் என்றும், இத்தகைய காட்சிகளை நாம் ஏன் காண்கிறோம் என்றும் அவர்கள் ஆச்சரியமடைந்ததன் காரணமாக இங்கே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பத்தாண்டு கால ஆட்சியில் இந்த நாடும், உலக நாடுகளும் இப்படி ஒரு நிலையை ஏன் கண்டன. நாடு ஏன் கடும்கோபம் கொண்டது, அது ஏன் தாங்கவொண்ணாத சினம் கொண்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, எங்களது வார்த்தைகள் காரணமாக இவையெல்லாம் நடைபெறவில்லை. ஆனால் அவர்கள் விதைத்த வினையின் கனியை இப்போது அறுவடை செய்கிறார்கள், அதுவும் இந்தப் பிறவியிலேயே.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

யாரைப் பற்றியும் நாம் தவறாக கூறவில்லை. அவர்களே தங்களைப் பற்றி ஏராளமான தகவல்களைக் கூறும்போது, நாம் வேறு ஏன் தனியாக  அவர்களது தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.  இந்த அவைக்கு முன்பாக நான் ஒரு முக்கியமான தகவலை முன்வைக்க விரும்புகிறேன். முதல் கருத்தை இப்போது நான் வாசிக்கிறேன். உறுப்பினர்களுக்கு தெரியும், இது ஒருவரின் கருத்து என்று.  கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது வளர்ச்சி விகிதம் குறைந்து, நிதிப்பற்றாக்குறை அதிகரித்து, பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை நமது எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது என்பதை அவையின் உறுப்பினர்கள் அறிவார்கள்.  நான் இப்போது வாசித்த கருத்து என்னுடையதோ, அல்லது இதர பிஜேபி தலைவர்களுடைய கருத்தோ அல்ல.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பத்தாண்டுகள் பிரதமராக  ஆட்சி செய்த மதிப்பிற்குரிய பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களின் கருத்துதான் இது.  இதுதான் அப்போதைய நிலை என்று அவர் விளக்கினார்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

தற்போது நான் இரண்டாவது கருத்தை வாசிக்கிறேன்.  நாடு முழுவதும் பரந்த அளவில் கோபம் நிலவுகிறது. அரசு அலுவலகங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், நிர்வாக அமைப்புகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகவும்  பெரும் கோபம் உள்ளது. அந்த தருணத்தில் நான் கூட இதை சொல்லவில்லை. இதைக்கூறியது அவர்களுடைய பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் ஆவார். அந்த நாட்களில் ஊழல் காரணமாக நாட்டின் அனைத்து தெருக்களிலும், போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது நான் மூன்றாவது கருத்தை வாசிக்கிறேன். திருத்தம் மேற்கொள்வது தொடர்பான சில வரிகள் இவை. இதையும் கேளுங்கள். வரி வசூலில் ஊழல் நடைபெறுகிறது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரிமுறையை கொண்டு வரவேண்டும். பொது விநியோகத்திட்டத்தில் தவறுகள் நடப்பதால், நாட்டில் உள்ள மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வுகளை காணவேண்டும்.  அரசின் ஒப்பந்தங்கள் அளிக்கும் முறைகளில் சந்தேகம் நிலவுகிறது - இதைக் கூறியதும், மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள்தான். அதற்கு முன்பாக மற்றொரு பிரதமர் கூறிய போது, தில்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால் அது 15 பைசாவாக மக்களைச் சென்றடைகிறது என்று குறிப்பிட்டார். நோயைப் பற்றி அறிந்திருந்தும் கூட அதை குணப்படுத்துவதற்கான எந்தவொரு தயார் நிலையும் அவர்களிடம் இல்லை. ஆனால் இன்று பெரும் பெரும் பேச்சுக்களை பேசி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பத்தாண்டு கால ஆட்சி வரலாற்றை பார்க்கும்போது முதன்மையான 5 பொருளாதார நாடுகளில் இந்தியா இல்லை என்று உலக நாடுகள் குறிப்பிட்டன. இதை நான் கூறவில்லை உலக நாடுகள் கூறின. கொள்கை முடக்கம் அவர்களுடைய அடையாளமாக இருந்தது. நமது பத்தாண்டு ஆட்சி காலத்தில் முதன்மையான 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாம் திகழ்கிறோம்.  இந்த பத்தாண்டுகளில் மேற்கொண்ட பெரிய மற்றும் உறுதியான நடவடிக்கைகளுக்காக நாம் நிச்சயம் நினைவுகூரப்படுவோம்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

மிக கடின உழைப்பு, உரிய சிந்தனை மூலம் கடினமான தருணத்தில் இருந்து நாம் நாட்டை மீட்டுள்ளோம். இந்த நாடு மிக சுலபமாக நம்மை ஆசீர்வதிக்கவில்லை.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

பிரிட்டிஷ்காரர்கள் இந்த அவையில் நினைவுகூரப்பட்டனர். அக்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களுடன் மன்னர்களும், மஹாராஜாக்களும் வலுவான நட்புறவை கொண்டிருந்தனர். எனவே, பிரிட்டிஷ்காரர்களால் யார் உத்வேகம் அடைந்தனர் என நான் தற்போது கேட்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வித்திட்டது யார் என்று நான் கேட்கப்போவதில்லை. ஆனால் சுதந்திரத்திற்கு பின்பும் நாட்டில் அடிமை மனநிலையை ஊக்குவித்தது யார்? நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில் அவர்களுடைய தண்டனை சட்டத்தில் ஏன் மாற்றம் கொண்டுவரவில்லை?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் நூற்றுக்கணக்கான சட்டங்கள் ஏன் தொடர்ந்து அமலில் இருந்தன? நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்பட வில்லையெனில், பல பத்தாண்டுகளாக ஏன் வாகனங்களில் சுழலும் சிகப்பு விளக்கு கலாச்சாரம் தொடர்ந்தது?

நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில், பட்ஜெட் ஏன் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது? ஏனென்றால், அது பிரிட்டிஷ் நாடாளுமன்ற அவையின் காலை நேர தொடக்க நேரம். பிரிட்டிஷ் நாடாளுமன்ற நேரத்திற்கு பொருந்தும் வகையில், மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பாரம்பரியம் ஏன் தொடர்ந்தது?  பிரிட்டிஷாரால் யார் உத்வேகமடைந்தனர்? பிரிட்டிஷ்காரர்களால் நீங்கள் உத்வேகம் அடையவில்லையெனில், நமது ராணுவ முத்திரைகளில் அடிமைச் சின்னங்கள் ஏன் இன்றும் தொடர்ந்து காணப்படுகின்றன. அவற்றை நாங்கள் ஒவ்வொன்றாக நீக்கிக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லை எனில், ராஜபாதை கடமைப்பாதையாக மாற, மோடி வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில், ஏன் பிரிட்டிஷ் ஆட்சி அடையாளங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்றுவரை தொடர்கின்றன?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில், ஏன் இந்த நாட்டின் உயிரிழந்த ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில், அவர்களுக்கு போர் நினைவிடம் கூட கட்டவில்லை? நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில், இந்திய மொழிகளை ஏன் தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்கிறீர்கள்? உள்ளூர் மொழியில் மக்கள் கற்பதில் ஏன் அலட்சியமாக இருந்தீர்கள்?

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நீங்கள் பிரிட்டிஷ்காரர்களால் ஈர்க்கப்படவில்லையெனில், இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்க உங்களை தடுத்தது யார்?  இதனை நீங்கள் ஏன் உணரவில்லை? மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, பல்வேறு சூழ்நிலைகளில் ஈர்க்கப்பட்டு பணியாற்றியது தொடர்பாக நூற்றுக்கணக்கான உதாரணங்களை நான் அளிக்க முடியும். இதையெல்லாம் கேட்கும் நாட்டு மக்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நான் மற்றொரு உதாரணத்தை இங்கு தரவேண்டும்.

காங்கிரஸ் புனைக்கதைகளைப் பரப்பியது, அதன் காரணமாக இந்திய   கலாச்சாரம், மதிப்புகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள்  இழிவாகவும், பழமைவாதிகளாகவும் கருதப்பட்டனர். இதனால்   நமக்கு மூதாதையர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. நீங்கள் உங்கள் நம்பிக்கைகளுக்கு எதிராக பாரம்பரியத்திற்கு எதிராக நடந்து கொண்டால் வளர்ச்சி காண முடியும் என்பன போன்ற கட்டுக்கதைகள் நாட்டில் உருவாக தொடங்கின. ஆனால், இவற்றிற்கான தலைமையகம் எது என்று உலக நாடுகளுக்கு நன்றாக தெரியும். மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது அவர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது. அதுவே உள்நாட்டிலிருந்து என்றால் இரண்டாம் தரமாக கருதப்பட்டது. வெளிநாட்டு தயாரிப்பு என்ற அடையாளம் பெருமைமிக்கதாக கருதும் நிலை உருவாக்கப்பட்டது. இன்றும் கூட இவர்களை போன்றவர்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்று கூறுவதை தவிர்க்கின்றனர். ஆனால், உள்ளூர் தயாரிப்புகளை ஆதரிப்போம் என்ற நோக்கம் எனது நாட்டின் ஏழை மக்களின் நலனுக்கான செயலாகும். தற்சார்பு இந்தியா என்று அவர்கள் எப்போதும் உச்சரிப்பதில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்று கூறப்படும்போது அவர்களது வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இந்த நாடு தற்போது எல்லாவற்றையும் பார்த்து புரிந்துகொண்டுள்ளது. நீங்கள் கூட, இதன் விளைவுகளால் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றீர்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

குடியரசுத்தலைவர் தமது உரையில், நான்கு மிகப்பெரிய ஜாதிகள் பற்றி நமக்கு விரிவாக எடுத்துரைத்தார். அவர்கள் இளையோர், மகளிர், ஏழைகள் மற்றும் விவசாயிகள். அவர்களுடைய பிரச்சனைகள் ஒரேமாதிரியானவை என்பதும் எங்களுக்கு தெரியும்.  அவர்களுடைய கனவுகளும் ஒரேமாதிரியானவை. இவர்களுக்கான தீர்வுகள் கண்டறியப்படும் நிலையில், அவற்றில் 19 முதல் 20 சதவீதம் வரையிலான சிறிய வேறுபாடுகள் மட்டுமே இருக்கும்.  ஆனால், இந்த நான்கு பிரிவினருக்கான தீர்வுகளும் ஒரேமாதிரியானவை. எனவே, இந்த நான்கு தூண்களையும் வலுப்படுத்துவதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தையொட்டி நாடு விரைவாக முன்னேறும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இந்த 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை இந்த நூற்றாண்டிலேயே அதாவது 2047-ம் ஆண்டுக்குள் நாம் நிறைவேற்றவேண்டும் என்ற உறுதி நமக்குள் இருக்குமானால், அதற்கு 20-ம் நூற்றாண்டின் சிந்தனை பொருந்தாது. 20-ம் நூற்றாண்டின் நான், எனது என்ற சுயநலம் நிறைந்த திட்டத்தைக் கொண்டு, 21-ம் நூற்றாண்டுக்குள் செழுமைமிக்க வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியாது. காங்கிரஸ் குறித்து தற்போது அதிகளவில் பேசப்படுகிறது. சாதிப்பிரிவினை மீண்டும் ஏன் தேவை என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அவர்கள் இதயசுத்தி உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை  மனப்பூர்வமாக உணரவேண்டும். தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் பெரிய எதிரியாகவே இருந்து வந்துள்ளது. பாபா சாகேப் இல்லாமல் இருந்திருந்தால், எஸ்சி, பழங்குடியினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்குமா? என்ற கேள்வியும் என் மனதில் சில நேரங்களில் எழுந்துள்ளது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நான் கூறும் அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. இத்தகைய அவர்களுடைய சிந்தனை தற்போது தொடங்கியது அல்ல, தொடக்கத்தில் இருந்தே உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆதாரம் இல்லாமல் பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இதுபோன்ற விவகாரங்கள் உருவாகும் போது தொடர்புடையவர்கள் அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும். சுமார் பத்து வருடங்களாகவே அவர்கள் (காங்கிரஸ்) என்னை நன்றாக அறிவார்கள். இப்போதெல்லாம் நான் நேரு அவர்களை அதிகம் நினைவுகூர்கிறேன். ஏனென்றால், நமது சகாக்கள் (காங்கிரசைச் சேர்ந்தவர்கள்) அவரைப் பற்றி நான் ஏதாவது சொல்லமாட்டேனா என்று எதிர்பார்க்கிறார்கள். இப்போது நேரு அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தை வாசிக்கிறேன். இந்தக் கடிதம், மாநில முதலமைச்சர்களுக்கு நாட்டின் பிரதமர் பண்டித நேரு அப்போது எழுதியதாகும். இது பதிவில் உள்ளது. அதன் மொழியாக்கத்தை நான் வாசிக்கிறேன்: “நான் எந்தவிதமான இடஒதுக்கீட்டையும், குறிப்பாக வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை விரும்பவில்லை. திறமையின்மையை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் நான் எதிரானவன். அது தரத்தில் இரண்டாம் நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.” இதுதான் பண்டித நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம். ஆகவே அவர்கள் எப்போதும் இட ஒதுக்கீட்டை எதிர்த்துள்ளனர். எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயத்தினர் வேலைகளில் இடஒதுக்கீட்டைப் பெற்றால், அரசு பணியின் தரம் சீர்கேடு அடைந்துவிடும் என்று நேரு அவர்கள் கூறுவது வழக்கம்.  இன்று விரல்களை நீட்டுபவர்களின் வேர் இதுவாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் அதனை (இடஒதுக்கீடு) நிறுத்திவிட்டார்கள். ஆட்சேர்ப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்களது (எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயத்தினர்) ஆட்சேர்ப்பு அரசுப்பணியில் அப்போது நடந்திருந்தால் அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்கும். அவர்கள் இன்று இந்த இடத்திற்கு வந்திருப்பார்கள். 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இந்த வரியை நான் படிக்கிறேன். நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். பண்டித நேரு கூறியதை நான் வாசிக்கிறேன். 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நேரு அவர்கள் என்ன சொன்னாரோ அது எப்போதுமே காங்கிரசுக்கு ஒரு மைல்கல் என்பதை நீங்கள் அறிவீர்கள். நேரு அவர்கள் எதையாவது கூறுகிறார் என்றால், அது அவர்களுக்கு ஒரு மைல்கல். நீங்கள் எதையாவது சொல்வது போல, பாவனை செய்யலாம். ஆனால் உங்களது எண்ணங்கள் பல உதாரணங்கள் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.  ஏராளமான எடுத்துக்காட்டுகளை நான் உங்களுக்கு கொடுக்க முடியும். ஆனால் நான் ஒரே ஒரு உதாரணத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.  ஜம்மு-காஷ்மீர் உதாரணத்தை நான் அளிக்க விரும்புகிறேன். ஜம்மு-காஷ்மீரின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயத்தினர் தங்கள் உரிமைகளை பெற முடியாமல் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் பறித்து வைத்திருந்தது.370-வது பிரிவு… நாங்கள் எத்தனை இடங்களை வெல்லப்போகிறோம் என்ற எண்ணிக்கைப் பற்றி பேசவில்லை. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தான் பல தசாப்தங்களாக உரிமைகளை இழந்திருந்த எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயத்தினர் நாட்டின் மற்றப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பெற்றிருந்த உரிமையை அடைந்துள்ளனர். வன உரிமைகள் சட்டம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் வன்முறை தடுப்புச் சட்டம் இல்லை. 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் அந்த உரிமைகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். நமது எஸ்சி சமுதாயத்தில் யாராவது பின்தங்கியிருக்கிறார்கள் என்றால் அது நமது வால்மீகி சமுதாயம்தான். 70 ஆண்டுகள் ஆகியும்  ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களுக்கு சேவை புரிந்து வந்துகொண்டிருந்த நமது வால்மீகி குடும்பங்களுக்கு அந்தப் பகுதிக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை. இன்று உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கான மசோதா மக்களவையில் நேற்று அதாவது பிப்ரவரி 6-ந் தேதி நிறைவேற்றப்பட்டதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகரித்து வருவது காங்கிரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய கவலையாக எப்போதும் இருந்து வந்துள்ளது. பாபா சாகிப்பின் அரசியலையும், சிந்தனைகளையும் நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது பற்றிய கருத்துக்கள் ஏற்கனவே உள்ளன. தேர்தலின் போது என்ன கூறப்பட்டது என்பதும் உள்ளது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. பிஜேபியின் ஆதரவுடன் அரசு (வி.பி.சிங்) ஆதரவுடன் அரசு அமைந்தபோதுதான் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த சீதாராம் கேசரி தெருவில் தூக்கியெறியப்பட்டார். (ஏனென்றால் அவர்) ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்! சீதாராம் கேசரிக்கு என்ன நடந்தது என்று நாடு பார்த்தது. இதற்கு வீடியோ உள்ளது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

செல்வாக்கு பெற்ற அவர்களது ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். கடந்த தேர்தலின் போது அவர் என்னென்னவோ கருத்தை தெரிவித்து புகழடைந்தார்.  இந்தக் குடும்பத்துடன் காங்கிரஸ் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது. அரசியல் சாசனத்தின் சிற்பியான பாபா சாகிப் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட அவர் அண்மையில் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நாட்டில் முதல் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிவாசி புதல்வி ஒருவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தது. எங்களுடன் உங்களுக்கு சித்தாந்த ரீதியாக எதிர்ப்பு உள்ளதை புரிந்துகொள்ள முடியும். எங்களுடன் சித்தாந்த ரீதியாக எதிர்ப்பு இருந்தால், நீங்கள் உங்களது சொந்த வேட்பாளரை நிறுத்துவதை நான் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால் சித்தாந்த ரீதியான எதிர்ப்பு இல்லை. ஏன்? ஏனெனில், நீங்கள் வேட்பாளராக தேர்வு செய்தவர் (யஷ்வந்த் சின்ஹா) எங்களிடமிருந்து வந்தவர்.  ஆகவே சித்தாந்த எதிர்ப்பு இல்லை என்பதை உணரலாம். உங்களது எதிர்ப்பு ஒரு ஆதிவாசி புதல்விக்கு எதிரானதாகும்.  அதனால்தான், (பி.ஏ.) சங்மா அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட போது, அவரும் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசியாக இருந்தார். அவருக்கும் இதே போன்ற நிலைதான் ஏற்பட்டது. இன்று, தலைவர் அவர்களே, மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு எதிரான அவமரியாதை சம்பவங்கள் காணப்படவில்லை. நாட்டில் முதல் முறையாக இது நடந்துள்ளது. பொறுப்புள்ள மக்கள் (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்) இதுபோன்ற வார்த்தைகளை  பேசியுள்ளனர். இது ஒவ்வொருவரையும் அவமானத்தால் கூனிக்குறுக வைக்கக்கூடியதாகும். குடியரசுத் தலைவர் மீது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்… இதயத்தில் உணரப்படும் அமைதியின்மை எப்போதும் தன்னை வெளிப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் பத்தாண்டுகளாக பணியாற்றும் வாய்ப்பை நாங்கள் பெற்றோம்.  முதலில் தலித்தையும், (ராம்நாத் கோவிந்த்), இப்போது ஆதிவாசியையும் (திரௌபதி முர்மு) குடியரசுத் தலைவராக ஆக்கியுள்ளோம். நாங்கள் எப்போதும் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளோம்.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

நமது அரசின் செயல்பாடுகளை பற்றி நான் பேசும் போது, ஏழைகளின் நலனுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கைகளை பற்றி பேசுகிறேன். அந்த சமூகத்தைப் பற்றி நெருக்கமாக நீங்கள் அறிந்திருந்தால், பயனாளிகள் யார்? இவர்கள் எத்தகைய சமுதாயத்தினர்? குடிசைப்பகுதிகளில் வசித்து கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் இவர்கள் யார்? அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? வசதிகள் மறுக்கப்பட்டு, தொல்லைகளை அனுபவித்து வரும் இவர்கள் யார்? நாம் எந்தப் பணியைச் செய்தாலும் அது எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஆதிவாசி சமுதாயத்தினருக்காகத் தான். குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முறையான வீடுகளை வழங்குவதால், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் பயடைந்துள்ளனர். இதற்கு முன்பு சுகாதாரம் இல்லாத காரணத்தால் அவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டனர். நமது தூய்மை இந்தியா இயக்கம் என்னும் முன் முயற்சியின் காரணமாக இப்போது அவர்கள் பயனடைந்துள்ளனர். இப்போது அவர்கள் சிறந்த வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். விறகு அடுப்புகளில் சமைத்ததால் நமது தாய்மார்களும், சகோதரிகளும் புகையால் சுகாதார கோளாறு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இந்தக் குடும்பங்களுக்கு நாம் உஜ்வாலா எரிவாயு இணைப்பை வழங்கியிருக்கிறோம். இலவச ரேஷனாக இருந்தாலும்? இலவச சிகிச்சையாக இருந்தாலும் பயனாளிகள் இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். சமுதாயத்தின் இந்தப் பிரிவைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்காகத் தான் எங்களது அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இத்தகைய உண்மைகளை மறுத்து இங்கு பேசப்பட்டு வருகிறது.  இதுபோன்ற உண்மைகளை மறுப்பதன் மூலம் என்ன பலன்களைப் பெற்றுவிட முடியும்?  இதுபோன்று நடந்துகொள்வதால் உங்களது நம்பகத் தன்மையை இழப்பது மட்டுமல்லாமல், உங்கள் நேர்மையையும் இழக்கிறீர்கள்.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இங்கு கல்வி பற்றிய தவறான புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தவறாக வழி நடத்துவதற்கு என்னவெல்லாம் முயற்சி செய்யப்படுகிறது? கடந்த பத்தாண்டுகளில் கல்வி உதவித்தொகை பெறும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளில் பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் பயில்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.  பள்ளிகளில் இருந்து இடை நிற்றல் அதிக அளவில் குறைந்துள்ளது.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

பத்துவருடங்களுக்கு முன்பு 120 ஏகலைவா மாதிரி பள்ளிகள் இருந்தன. மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே, இன்றைக்கு 400 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த உண்மைகளை ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள்? ஏன் இதைச் செய்கிறீர்கள்? இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

முன்பு இங்கு ஒரே ஒரு மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் இருந்தது. இன்றைக்கு இரண்டு மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பது உண்மை. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, தலித், பின்தங்கியோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மகன்கள் மற்றும் மகள்கள் கல்லூரிகளின் வாசலைக்கூட பார்த்ததில்லை என்பதும், நீண்ட கால உண்மையாக இருக்கிறது. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் உமர்காவ்ன் முதல் அம்பாஜ் வரையிலான முழுமையான பகுதி குறித்த அதிர்ச்சி தரும் ஆய்வுகள் எனக்கு கிடைத்தன. நமது திக்விஜய்சிங் அவர்களின் மருமகன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தான். நான் அந்தப் பகுதிக்கு சென்ற போது அங்கு ஒட்டுமொத்த பகுதியிலும் எந்தவொரு பள்ளியிலும்  அறிவியல் பாடம் இல்லை.  பின் எப்படி பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்பு படிக்க முடியும்? இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள்…  இங்கு எந்தவிதமான உரைகள் கொடுக்கப்படுகின்றன?

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த அவைக்கும், உறுப்பினர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம் ஒன்றை நான் தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு சில மாற்றங்கள் குறித்து அரசு உங்களிடம் பேசினால் அது குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். சமுதாயத்தின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் இது ஊக்குவிக்கும். நாட்டின் முக்கிய நீரோட்டத்தில் அவர்கள் வேகமாக முன்னேற்றமடையட்டும். அவர்களது முன்னேற்றத்திற்கு கூட்டு முயற்சிகளை எடுக்க வேண்டும். நமது பழங்குடியின எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பதிவைப் பாருங்கள். நான் சில புள்ளி விவரங்களை அளிக்க விரும்புகிறேன். உயர்கல்வியில் எஸ்சி மாணவர்களின் பதிவு 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயர்கல்விகளில் எஸ்டி மாணவர்களின் பதிவு 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயர்கல்வியில் ஓபிசி மாணவர்களின் பதிவு 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. நமது ஏழை, எளிய, தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உயர்கல்விக்கு சென்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆகும்போது சமுதாயத்திற்குள் ஒரு புதிய சுற்றுச்சூழல் உருவாகும். எங்களது முயற்சி இந்த திசையில்தான் உள்ளது. அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நமது முயற்சி உள்ளது. இதற்கு சிறிது காலம் பிடித்தாலும் அது சரியான முறையில் வந்துசேரும். ஆகவே நாங்கள் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறோம்.  தகவல் பரவலில் குறைபாடுகள் இருந்தால் தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு உரிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். ஆனால் உங்களது கண்ணியத்தை குலைக்கும் வகையில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி, உங்கள் வார்த்தைகளின் வலிமையை நீங்களே பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டாம். சில சமயங்களில் உங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்'! இது வெறும் முழக்கம் அல்ல; இது மோடியின் உத்தரவாதம். இவ்வளவு வேலைகள் நடக்கும் போது... ஒருவர் எனக்கு ஒரு கவிதை அனுப்பினார். கவிதை மிகவும் நீளமானது, ஆனால் அதில் ஒரு வரி உள்ளது:

இது மோடியின் உத்திரவாத காலம்.

புதிய பாரதத்தின் விடியல்,

கடைகளில் வாரண்டி தீர்ந்து கிடக்கிறது.

கடைகளில் வாரண்டி தீர்ந்து கிடக்கிறது.

உங்கள் வலிமையைத் தேடுங்கள்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

ஏற்கனவே நம்பிக்கையற்ற படுகுழியில் மூழ்கிவிட்டவர்களுக்கு நாட்டில் விரக்தியை பரப்புவதற்கான முயற்சிகள் புரிந்து கொள்ளக் கூடியதே. இருப்பினும், விரக்தியை பரப்பும் அவர்களின் திறனும் குறைந்து வருகிறது. அவர்களால் நம்பிக்கையை உருவாக்க முடியாது. விரக்தியில் மூழ்கியிருப்பவர்களே நம்பிக்கையை அளிக்க முடியாது. உண்மையை மறுக்கும் அதே வேளையில், விரக்தியைப் பரப்பும் இந்த விளையாட்டை நாடு முழுவதும் விரக்தியைப் பரப்புபவர்களால் ஒருபோதும் தங்களுக்கோ அல்லது நாட்டுக்கோ எந்த நன்மையும் செய்ய முடியாது.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

ஒவ்வொரு முறையும் ஒரே பாடல் பாடப்படுகிறது. சமூகத்தின் சில பிரிவினரை ஆத்திரமூட்டுவதற்காக மட்டுமே உண்மைகளை கருத்தில் கொள்ளாமல் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. நான் சில யதார்த்தங்களை நாட்டின் முன் முன்வைக்க விரும்புகிறேன், ஊடகங்கள் இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், இதனால் உண்மையை வெளிப்படுத்த முடியும்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இங்கு அரசு நிறுவனங்கள் தொடர்பாக எங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன? இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இப்போது, மாருதி பங்குகளை வைத்து விளையாடிய விளையாட்டை நினைவு கூர்வோம். அந்த நேரத்தில் இது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. மாருதி பங்குகளில் என்ன நடக்கிறது? நான் அதன் ஆழத்தை ஆராய விரும்பவில்லை,  அப்படி ஆராய்ந்தால் அவர்கள் அந்த வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடும். ஆகவே அதன் ஆழத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

நாடு உண்மையை அறிய வேண்டியது அவசியம்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

நான் சுதந்திர பாரதத்தில் பிறந்தேன். எனது எண்ணங்களும் எனது கனவுகளும் சுதந்திரமானவை. அடிமை மனப்பான்மையுடன் வாழ்பவர்களுக்கு ஒட்டிக் கொள்வதற்கு பழைய காகிதங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்றோம், பொதுத்துறை நிறுவனங்களை அழித்துவிட்டோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதுபோன்ற விவாதங்கள் இங்கு நடக்கின்றன, நான் அதை மூத்த உறுப்பினர்களிடமிருந்தும் கேட்டேன். பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல்-ஐ அழித்தது யார் என்று நினைவிருக்கிறதா? பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் அழிந்த காலம் எது? எச்.ஏ.எல்-ன் அவல நிலையை நினைவுகூருங்கள், அது எவ்வாறு அழிக்கப்பட்டது? பின்னர் அவர்கள் எச்ஏஎல்-ஐ பயன்படுத்தி அதன்  வாயிலில் உரைகளை வழங்கியதன் மூலம் 2019 தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரலை அமைத்தனர். எச்.ஏ.எல். நிறுவனத்தை அழித்தவர்கள் எச்.ஏ.எல். வாயிலில் உரையாற்றிக் கொண்டிருந்தனர்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

ஏர் இந்தியாவை அழித்தது யார்? ஏர் இந்தியாவை இவ்வளவு இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்தது யார்? அதன் அழிவில் இருந்து காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் விலகிச் செல்ல முடியாது. அதை நாடு நன்கு அறியும். இப்போது, எங்களது ஆட்சியில் நிகழ்ந்த சில சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

உங்களால் (காங்கிரஸ்) கடந்த காலங்களில் தடுமாறிக் கொண்டிருந்த பிஎஸ்என்எல், சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இன்று பி.எஸ்.என்.எல் மேட் இன் இந்தியா 4ஜி மற்றும் 5ஜி நோக்கி நகர்ந்து உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

எச்.ஏ.எல். பற்றி பல கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன. இன்று எச்.ஏ.எல். நிறுவனம் சாதனை உற்பத்தி செய்துள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் வரலாறு காணாத வருவாயை ஈட்டி வருகிறது. எச்.ஏ.எல் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, இன்று கர்நாடகாவில் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி நிறுவனமாக எச்.ஏ.எல் உருவெடுத்துள்ளது. நீங்கள் அதை எங்கே விட்டுச் சென்றீர்கள், நாங்கள் அதை எங்கே கொண்டு சென்றோம்?

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இங்கு இல்லாத ஒரு படைவீரரும் எல்.ஐ.சி பற்றி மிகவும் அறிவார்ந்த அறிக்கைகளை வழங்கி வருகிறார். எல்.ஐ.சி போன்றவற்றுக்கு என்ன நடந்தது தெரியுமா? இதுதான் நடந்தது. எல்.ஐ.சி பற்றி வதந்திகளைப் பரப்புவது, பொய்களைப் பரப்புவது, குழப்பத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர். எதையாவது அழிப்பதற்கான முறையும் ஒன்றுதான். கிராமத்தில் யாராவது ஒரு பெரிய மாளிகையை வாங்க விரும்பும்போது, அதைப் பெற முடியாவிட்டால் இதே உத்தி பயன்படுத்தப்படுகிறது; பின்னர் அது பேய் வீடு என்று வதந்தி பரப்பி, யாரும் அதை வாங்க முன்வராத சூழலை உருவாக்குவார்கள். யாரும் ஆர்வம் காட்டாதபோது, அவர்கள் இறுதியில் அதைப் பிடித்துக் கொள்வார்கள்.

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

எச்.ஏ.எல். பற்றி பல கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன. இன்று எச்.ஏ.எல். நிறுவனம் சாதனை உற்பத்தி செய்துள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் வரலாறு காணாத வருவாயை ஈட்டி வருகிறது. எச்.ஏ.எல் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, இன்று கர்நாடகாவில் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி நிறுவனமாக எச்.ஏ.எல் உருவெடுத்துள்ளது. நீங்கள் அதை எங்கே விட்டுச் சென்றீர்கள், நாங்கள் அதை எங்கே கொண்டு சென்றோம்?

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இங்கு இல்லாத ஒரு படைவீரரும் எல்.ஐ.சி பற்றி மிகவும் அறிவார்ந்த அறிக்கைகளை வழங்கி வருகிறார். எல்.ஐ.சி போன்றவற்றுக்கு என்ன நடந்தது தெரியுமா? இதுதான் நடந்தது. எல்.ஐ.சி பற்றி வதந்திகளைப் பரப்புவது, பொய்களைப் பரப்புவது, குழப்பத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர். எதையாவது அழிப்பதற்கான முறையும் ஒன்றுதான். கிராமத்தில் யாராவது ஒரு பெரிய மாளிகையை வாங்க விரும்பும்போது, அதைப் பெற முடியாவிட்டால் இதே உத்தி பயன்படுத்தப்படுகிறது; பின்னர் அது பேய் வீடு என்று வதந்தி பரப்பி, யாரும் அதை வாங்க முன்வராத சூழலை உருவாக்குவார்கள். யாரும் ஆர்வம் காட்டாதபோது, அவர்கள் இறுதியில் அதைப் பிடித்துக் கொள்வார்கள்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இதை நான் பெருமிதத்துடன், தலை நிமிர்ந்து சொல்ல விரும்புகிறேன். இன்று எல்ஐசி பங்குகள் வரலாறு காணாத உச்சத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக  ஒரு தவறானப் பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இப்போது அவர்களுக்கு உண்மை என்னவென்றே தெரியாது. யாரோ அவர்களைத் தூண்டிவிட்டார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், 2014-ல் நாட்டில் 234 பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. இன்று 254 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இப்போது, அவர்களுக்கு ந்த எண்கணிதம் புரிகிறதா? பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிட்டோம் என்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிட்டோம் என்றால், இப்போது எப்படி 254 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இன்று, பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் சாதனை வருமானத்தை வழங்குகின்றன, மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள் கூட இதை புரிந்துகொள்வார்கள். புரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, கடந்த ஆண்டில் மும்பை பங்குச் சந்தையின் பொதுத்துறை நிறுவனக் குறியீடு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தைப் பற்றி பேசுகிறேன். பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் சுமார் ஒன்றேகால் லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், பொதுத்துறை நிறுவனங்களின் நிகர மதிப்பு 9.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

அவர்கள் எதில் தலையிட்டாலும், அது மூழ்கிப் போவது  வழக்கமாகும். அப்படி ஒரு நிலையை உருவாக்கியவர்கள் அவர்கள். நாங்கள் கடுமையாக உழைத்து பொதுத்துறை நிறுவனங்களை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மாயைகளைப் பரப்ப வேண்டாம், நாட்டின் சாதாரண முதலீட்டாளர்களைக் குழப்பும் இதுபோன்ற வதந்திகளை சந்தையில் பரப்ப வேண்டாம். அப்படி ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியாது.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

இப்போது தங்களது பட்டத்து இளவரசரை ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாற்றிவிட்டனர். தற்போது, அவர் ஒரு தொடக்க வீரராக இல்லை. அவர் புறப்படவும் இல்லை, எழவும் இல்லை.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

கடந்த முறையைப் போலவே நீங்கள் (காங்கிரஸ் உறுப்பினர்கள்) இங்கு அமைதியாக இருந்திருந்தால், அது மிகவும் வேடிக்கையாக இருந்திருக்கும்.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நீண்ட காலமாக நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வது எனது பாக்கியம் ஆகும். எனவே, பிராந்திய அபிலாஷைகளை நான் நன்கு புரிந்துகொள்கிறேன், ஏனென்றால் அதிலிருந்துதான் நானே வெளிவந்தேன். இங்கு அமர்ந்திருக்கும் திக்விஜய் ஜி போன்ற தலைவர்கள்,  ஒரு மாநிலத்தின்  பிரச்சனைகள் பற்றி  நன்கு அறிவார்கள். ஏனெனில்  நாமெல்லாம் ஒரே உலகத்திலிருந்து வருகிறோம். எனவே இதற்கு என்ன அர்த்தம் என்பதை இயல்பாகவே புரிந்துகொள்வார்கள். எங்களிடம் அனுபவம் உள்ளது, எங்களுக்குத் தெரியும். சரத் பவார் அவர்களுக்கும் தெரியும், தேவகவுடா சாஹிப் போன்றவர்களுக்கும் இவை அனைத்தும் தெரியும். எனவே, அதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதைப் பற்றி நாம் புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை; அதை நாம் நேரடியாக அனுபவித்திருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையும் கூட. சுமார் பத்தாண்டுகளாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒட்டுமொத்த இயந்திரமும் குஜராத்துக்கு ஏதாவது ஒன்றில் ஏதாவது இடையூறு செய்வதில் கவனம் செலுத்தியது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் நான் கண்ணீர் விடவில்லை; அழுவது என் பழக்கம் அல்ல. ஆனால் அப்போதும் கூட, பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும், அனைத்து வகையான கொடுமைகளையும் சகித்துக் கொண்டாலும், இங்குள்ள ஒரு அமைச்சரை சந்திக்க நேரம் கூட கிடைக்காத அளவுக்கு எனது பிரச்சினை இருந்தது. அவர்கள், "தம்பி, நான் உங்களுடன் நண்பராக  இருக்கிறேன், நான் உங்களுடன் தொலைபேசியில் பேசுவேன்” என்று  கூறிவிடுவார்கள்.  ஒருவேளை நாங்கள் சந்திக்கும் புகைப்படம் (எந்த செய்தித்தாளிலும்) வந்துவிடுமோ என்று அவர்கள் மிகவும் பயந்தார்கள். எப்படியோ அவர்களின் கஷ்டத்தை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒருமுறை, எனது மாநிலத்தில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட்டது. பிரதமரே நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று பல வேண்டுகோள்களை வைத்தேன். அவரது பயண அட்டவணை ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஒரு ஆலோசனைக் குழு இருந்தது, யாராவது ஹெலிகாப்டர் மூலம் வான்வழி ஆய்வு நடத்த வேண்டும் என்று அங்கிருந்து உத்தரவு வந்திருக்கலாம். அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென நிகழ்ச்சியை மாற்றிவிட்டு தென்னிந்தியாவில் வேறு மாநிலத்துக்கு அவர் சென்றுவிட்டார். எது ன்று எனக்கு நினைவில்லை. "விமானத்தில் இருந்து பார்ப்போம், நாங்கள் குஜராத்துக்கு வர மாட்டோம்" என்று என்னிடம் கூறப்பட்டது.  அவரது வரவை எதிர்பார்த்து முன்னதாகவே நான் சூரத்தில் இருந்தேன், இறுதியில் என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே, இயற்கை பேரழிவுகளின் போது கூட இதுபோன்ற சிரமங்களை நான் சந்தித்திருக்கிறேன் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். ஆனால் அதையும் மீறி, நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலத்தின் வளர்ச்சி முக்கியமானது என்பதே அப்போதும் இன்றும் கூட எனது மந்திரமாகும். பாரதத்தின் வளர்ச்சிக்கு குஜராத்தின் வளர்ச்சி அவசியம். இந்த வழியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலமே நாட்டின் வளர்ச்சியை நாம் அடைய முடியும். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. தலைவர் அவர்களே, ஒரு மாநிலம் ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால், இரண்டு அடி முன்னே எடுத்து வைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கூட்டுறவு கூட்டாட்சி என்றால் என்ன? போட்டி கூட்டுறவு கூட்டாட்சியில் போட்டி பற்றி நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன். இன்று நாட்டுக்கு போட்டி கூட்டுறவு கூட்டாட்சி தேவைப்படுகிறது. நமது மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும், அப்போதுதான் நம் நாடு வேகமாக முன்னேற முடியும். நேர்மறையான மனநிலையுடன் நாம் முன்னேற வேண்டும். நான் மாநிலத்தில் இருந்தபோதும் இதே கொள்கைகளுடன் பணியாற்றினேன். அதனால்தான் நான் மௌனமாக சகித்துக் கொள்கிறேன்.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

கொவிட் பெருந்தொற்று ஒரு உதாரணம். இது உலகின் மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்தது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், நாங்கள் மாநில முதலமைச்சர்களுடன் 20 கூட்டங்களை நடத்தினோம். நாங்கள் ஒவ்வொரு அம்சத்தையும் விவாதித்தோம், அனைவரையும் அழைத்துச் சென்றோம், ஒரு குழுவை உருவாக்கினோம், மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் ஒன்றிணைந்து பணியாற்றின. நெருக்கடியை சமாளிக்க முடியாமல் உலகம் தவித்த போது, ஒன்றாக இணைந்து, இந்த நாட்டைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இதில் தனிப்பட்ட எவருக்கும் பெருமை கிடையாது. அனைவரும் ஒன்றாக, இந்த நாட்டைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். அதற்கான பெருமையை ஏற்க மாநிலங்களுக்கும் முழு உரிமை உண்டு. இந்த உணர்வுடன் நாங்கள் பணியாற்றினோம்.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

தில்லியில் ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தியிருக்க முடியும். தில்லியில் இந்த முக்கிய தலைவர்கள் மத்தியில் இருந்ததன் மூலம், நாம் அனைத்தையும் சாதித்திருக்க முடியும். இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது. ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை. ஜி-20 அமைப்பின் வெற்றிக்கான பெருமையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். தில்லியில் ஒரு கூட்டம் நடத்தினோம். மாநிலங்களில் 200 கூட்டங்கள் நடத்தினோம். உலக அரங்கில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெருமை கிடைக்கும்படி செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, இது யாருடைய அரசு என்பது முக்கியமல்ல. அதை அடிப்படையாகக் கொண்டு நான் நாட்டை நடத்தவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக நாட்டை முன்னோக்கி நகர்த்த விரும்புகிறோம், அதுதான் நாங்கள் ஆற்றிய பணி.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

வெளிநாட்டுத் தலைவர்கள் நம் நாட்டுக்கு, நான் பிரதமரான பிறகு மட்டும் வரவில்லை. முன்பே இங்கு வந்து சென்றிருக்கிறார்கள். வெளிநாட்டுத் தலைவர்கள் இன்று வந்தால், குறைந்தபட்சம் ஒரு நாளாவது ஒரு மாநிலத்திற்கு வருகை தருமாறு அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எனது நாடு தில்லி மட்டுமல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நான் அவர்களை மாநிலங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். சென்னையிலும் என் நாடும் இருக்கிறது. பெங்களூரிலும் என் நாடு இருக்கிறது. என் நாடு ஹைதராபாத்திலும் உள்ளது. எனது நாடு பூரியிலும் உள்ளது, புவனேஸ்வரத்திலும் உள்ளது. என் நாடு கொல்கத்தாவிலும் உள்ளது. எனது நாடு கவுகாத்தியிலும் உள்ளது. எனது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள வாய்ப்புகளை உலகம் அறிந்து கொள்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மாநில அரசின் ஆதரவையோ, எதிர்ப்பையோ இந்த அளவில் வைத்து நாங்கள் மதிப்பிடவில்லை. நேர்மையுடனும், இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகவும், முழு உலகிற்கும் பாரதத்தைப் பற்றி தெரியப்படுத்த முயற்சிக்கிறோம். ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தினம் போன்ற ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், 25 ஆம் தேதியன்று நான் பிரான்ஸ் அதிபருடன் ராஜஸ்தான் தெருக்களில் சுற்றி வந்து ராஜஸ்தானைப் பற்றி உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தேன்.

 

மதிப்பிற்குரிய  தலைவர் அவர்களே,

மாற்றத்தை விரும்பும் மாவட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு உலகளவில் விவாதிக்கப்படும் மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். முன்னேற விரும்பும் மாவட்டங்களின் வெற்றிக்கு எனது மாநிலங்களின் 80 சதவீத ஆதரவே காரணம். மாநிலங்கள் அளிக்கும் ஆதரவு, முன்னேற விரும்பும் மாவட்டங்கள் குறித்த எனது தொலைநோக்குப் பார்வையை அவர்கள் புரிந்துகொண்டுள்ளதைக் காட்டுகிறது. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல மாநிலங்களிடமிருந்து 80 சதவீத ஆதரவை இன்று நான் பெற்று வருகிறேன். மாவட்ட அளவிலான அதிகாரிகளின் ஆதரவை நான் பெற்று வருகிறேன். தேசிய சராசரியை விட பின்தங்கிய மாநிலங்கள் இப்போது அதனுடன் போட்டியிடுகின்றன, ஒரு காலத்தில் பின்தங்கியதாகக் கருதப்பட்ட மாவட்டங்கள் இப்போது தேசிய சராசரியுடன் போட்டியிடுகின்றன. ஒத்துழைப்பு இருந்தால் இவை அனைத்தும் சாத்தியம். எனவே, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து முன்னோக்கி நகர்வதே எங்கள் வேலைத்திட்டங்களின் கட்டமைப்பாகும். இன்று, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு குடும்பமும் வளர்ச்சியின் பலன்களை அறுவடை செய்ய வேண்டும்; இது எங்கள் கூட்டுப் பொறுப்பு, நாங்கள் அந்தத் திசையில் செல்ல விரும்புகிறோம். ஒவ்வொரு மாநிலமும் அதன் உரிய பங்கைப் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். இருப்பினும், இன்று ஒரு முக்கியமான விஷயத்தில் எனது வேதனையை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

தேசம் என்பது நமக்கு ஒரு நிலம் மட்டுமல்ல. இது ஊக்கமளிக்கும் ஒரு அலகு. ஒரு உடலுக்கு பல்வேறு உறுப்புகள் இருப்பது போல, ஒரு முள் காலில் குத்தினால், "நான் ஏன் கவலைப்பட வேண்டும்என்று கை யோசிப்பதில்லை.  சிறிது நேரத்தில் கை பாதத்தை அடைந்து முள்ளை அகற்றுகிறது. முள் காலில் குத்தினால், "நான் ஏன் அழ வேண்டும்?" என்று கண் சொல்லாது. கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது. பாரதத்தின் எந்த மூலையில் வலி இருக்கிறது என்றாலும், அனைவரும் அந்த வலியை உணர வேண்டும். உடலின் ஒரு பகுதி சரியாக செயல்படவில்லை என்றால், முழு உடலும் ஊனமுற்றதாகக் கருதப்படுகிறது. நாட்டின் எந்தப் பகுதியும் வளர்ச்சியை இழந்து தவித்தால், நாடு முன்னேற முடியாது. எனவே, பாரதத்தை ஒரு ஒருங்கிணைந்த அலகாக நாம் பார்க்க வேண்டும். அதை நாம் துண்டு துண்டாக பார்க்கக் கூடாது. இந்த நாட்களில் மொழி பேசப்படும் விதம், அரசியல் சுயநலத்திற்காக நாட்டை பிளவுபடுத்த புதிய கதையாடல்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு முழு அரசும் வீதிகளில் இறங்கி பிளவுபடுத்தும் மொழியில் ஈடுபட்டுள்ளது. இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் நாட்டுக்கு என்ன இருக்க முடியும்?

 

ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒரு பழங்குடியினக் குழந்தை ஒலிம்பிக் போட்டிக்குச் சென்று, பதக்கம் வென்றால், "இவர் ஜார்க்கண்டின் குழந்தை" என்று நாம் நினைக்கிறோமா அல்லது ஒட்டுமொத்த நாடும் "இது நமது தேசத்தின் குழந்தை" என்று நினைக்கிறதா? ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒரு குழந்தையின் திறமையை நாம் பார்க்கும்போது, நாடு ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து சிறந்த பயிற்சிக்காக மற்றொரு நாட்டிற்கு அனுப்புகிறது, இந்த செலவு ஜார்க்கண்டிற்காக என்று நாம் நினைக்க வேண்டுமா, அல்லது இது முழு நாட்டிற்கும் இல்லையா? நாம் என்ன செய்கிறோம், எந்த மொழியைப் பேசத் தொடங்குகிறோம்? இது தேசத்தின் கௌரவத்தை பாதிக்கிறது. தடுப்பூசிகள் என்று வரும்போது, கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி அந்த குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கப்பட்டது என்றால் அது அவர்களின் உரிமை, நாட்டின் உரிமை அல்ல என்று நினைக்கலாமா? அந்த நகரத்தில் தடுப்பூசி உருவாக்கப்பட்டால், நாட்டின் பிற பகுதிகள் அதனால் பயனடையாதா? இந்த வகையான சிந்தனையை நாம் ஏற்றுக்கொள்கிறோமா? ஒரு தேசியக் கட்சியில் இதுபோன்ற சிந்தனைகள் உருவானால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

"இந்த நதிகள் இங்கிருந்துதான் ஓடுகின்றன. நான் தண்ணீர் தர மாட்டேன். தண்ணீருக்கான உரிமை என்னுடையது" என்று இமயமலை சொல்ல ஆரம்பித்தால், நாட்டுக்கு என்ன நடக்கும்? நாடு எங்கே போகும்? நிலக்கரி வைத்திருக்கும் மாநிலங்கள், "உங்களுக்கு நிலக்கரி கிடைக்காது, இது எங்கள் சொத்து, உங்கள் வாழ்க்கையை இருளில் கழியுங்கள்" என்று சொன்னால், நாடு எப்படி இயங்கும்?

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

கொரோனா காலத்தில், முழு நாட்டிற்கும் ஆக்ஸிஜன் தேவைப்பட்டபோது, கிழக்கு பிராந்தியத்தின் தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன்  அதிக அளவில் இருந்தன. அந்த நேரத்தில், கிழக்கிலிருந்து வந்தவர்கள் வெறுமனே "எங்களால் ஆக்ஸிஜனை வழங்க முடியாது, எங்கள் மக்களுக்கு அது தேவை, நாட்டிற்கு எதுவும் கிடைக்காது" என்று கூறியிருந்தால், நாட்டிற்கு என்ன நடந்திருக்கும்? நெருக்கடியைத் தாங்கிக்கொண்ட போதிலும், ஆக்ஸிஜன் நாட்டின் பிற பகுதிகளை அடைவதை அவர்கள் உறுதி செய்தனர். இந்த உணர்வுகளை நாட்டுக்குள் சிதைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. "எங்கள் வரிகள், எங்கள் பணம்" பற்றி இவ்வாறு பேசுவது நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாட்டை பிளவுபடுத்த புதிய கதையாடல்களைத் தேடுவதை நிறுத்துவோம். நாடு முன்னேற வேண்டும். ஒன்றாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடுவோம்.

 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

கடந்த பத்தாண்டு கால கொள்கைகளும், கட்டமைப்பும் புதிய இந்தியாவை நோக்கிய புதிய பாதையை காட்டுகின்றன. கடந்த பத்தாண்டில் நாம் மேற்கொண்டுள்ள பாதை, கட்டுமானப்பணிகள், அடிப்படை வசதிகளை வழங்குவதில் நமது முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் அதிகரிக்க வேண்டும் எளிதாக வாழ்க்கை நடத்துவதும் அதிகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் நமது தேவை வாழ்க்கைத் தரத்தை நாம் எப்படி முன்னேற்றுகிறோம் என்பதுதான். வரும் நாட்களில் நமது முழு வலிமை மற்றும் திறனை செலுத்தி எளிதாக வாழ்க்கை நடத்துவதையும், வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வறுமையிலிருந்து வெளியேறியுள்ள புதிய, நடுத்தர வர்க்கத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய உச்சங்களுக்கு கொண்டுசென்று அதிகாரமளிக்க பல்வேறு திட்டங்களுக்கு நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவிருக்கிறோம். எனவே மோடி நமக்கு அளித்துள்ள சமூக நீதி கேடயத்தை நாம் வலுப்படுத்தவிருக்கிறோம்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

25 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றிவிட்டோம் என்று நாம் கூறும்போது அப்படி என்றால் 80 கோடி பேருக்கு ஏன் நீங்கள் உணவையும் தானியங்களையும் வழங்க வேண்டும் என்று தற்போது தவறாக கேட்கப்படுகிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஒரு நோயாளி சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போது மேலும் சில நாட்கள் உணவு உண்பதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் மற்ற பிறவற்றிலும் கவனமாக இருக்குமாறு மருத்துவர் அவரிடம் கூறுவது போன்றதுதான் இந்தச் செயல்பாடு. ஏனென்றால் மீண்டும் பிரச்சனை ஏற்படக்கூடாது. வறுமையிலிருந்து வெளியேறிய ஒருவர் சிறந்த கவனிப்புடன் இருந்தால்தான் அவருக்கு நெருக்கடி ஏற்படாமல் இருப்பதோடு மீண்டும் வறுமையில் தள்ளப்படமாட்டார். அவர் வலுப்பெற நேரம் அளிக்கப்பட வேண்டும். இப்போது ஏழைகளை வலுப்படுத்தியிருக்கிறோம். புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் வந்துள்ள அவர்கள் மீண்டும் வறுமையில் வீழ்ந்துவிடக் கூடாது. ஆயுஷ்மானுக்கு நாம் வழங்குகின்ற ரூ.5 லட்சத்திற்குப் பின்னால் இந்த நோக்கம் தான் உள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் ஏழையாவதற்கு நீண்டகாலம் பிடிக்காது. எனவே வறுமையிலிருந்து விடுபடுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு தவறுதலாகக் கூட மீண்டும் வறுமையில் வீழ்ந்துவிடாமல் கவனித்துக் கொள்வதும் அவசியமாகும். இதனால்தான் நாம் உணவு தானியங்களை வழங்குகிறோம். தொடர்ந்து வழங்குவோம்.  எவர் எப்படி புரிந்து கொண்டாலும் 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள். நான் நவீன நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். நான் வாழ்ந்த அந்த உலகம் பற்றி நான் அறிவேன். அவர்களின் தேவை மகத்தானது. அதற்கேற்ப எங்களின் திட்டம் தொடரும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இதனால் தான் நான் ஒரு உத்தரவாதத்தை அளித்திருக்கிறேன். ஏழைகள் சிகிச்சை செய்துகொள்ள ரூ.5 லட்சம் வரையிலான நிதியுதவி தொடரும் என்பது எனது உத்தரவாதம் என்பதை நாடு அறியும். மருந்துகளுக்கு 80 சதவீத தள்ளுபடி வழங்குவதன் மூலம் நடுத்தர வகுப்பு ஏழைகள் பயனடைகிறார்கள். இது தொடரும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

மோடியின் உத்தரவாதமான விவசாயிகள் கௌரவிப்பு நிதி தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம் மிகுந்த பலத்துடன் அவர்கள் வளர்ச்சிப் பயணத்தில் இணைய முடியும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஏழைகளுக்கு நிரந்தர வீடு வழங்குவது எனது இயக்கமாகும். குடும்பம் வளர்ச்சியடையும் போது புதிய குடும்பம் உருவாகிறது. நிரந்தர வீடுகள் வழங்கும் எனது திட்டம் தொடரும். குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  இதற்கான எனது உத்தரவாதம் தொடரும். புதிய கழிப்பறைகளை கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான உத்தரவாதத்தையும் நாங்கள் தொடர்வோம். இந்தப்பணிகளெல்லாம் வெகுவேகமாக நடைபெறுகின்றன. ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள வளர்ச்சியின் பாதை, வளர்ச்சியின் திசை வழி இதற்கு காரணம். இது எந்தச் சூழ்நிலையிலும் சிறிதளவு கூட மந்தப்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லை.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலம் வெகுதூரத்தில் இல்லை. சிலர் இதனை மோடி 3.0 என்று அழைக்கிறார்கள்.  வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலுவான அடித்தளத்திற்கு மோடி 3.0 அனைத்து பலத்தையும் அளிக்கும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட, பலமடங்கு அதிகரிக்கும். மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நாட்டில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு மிகவும் குறைவாக இருப்பதோடு எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஏழையின் வீடும் குடிநீர் குழாய் இணைப்பைப் பெற்றிருக்கும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வரும் ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திலிருந்து ஒரு நபர் கூட விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய தீவிர கவனம் செலுத்தப்படும்.  அடுத்த ஐந்தாண்டுகளில் சூரிய சக்தி மின்சாரத்தின் மூலம் மின்சாரக் கட்டணம் பூஜ்யமாகப் போகிறது. எவ்வளவு பேருக்கு என்றால் கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சாரக் கட்டணம் பூஜ்யமாகும். முறையாக திட்டமிட்டால் அவர்கள்  தங்களின் வீடுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்து வருவாயை ஈட்டவும் முடியும். இது அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டமாகும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

அடுத்த ஐந்தாண்டுகளில் குழாய் வழியாக எரிவாயு இணைப்புகளை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதற்கான வலைப்பின்னல் நாடு முழுவதும் உருவாக்கப்படும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வரும் ஆண்டுகளில் நமது இளைஞர் சக்தியை ஒட்டுமொத்த உலகமும் காணவிருக்கிறது. நமது இளைஞர்களின் ஸ்டார்ட் அப்கள், இளைஞர்களின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கப்போகின்றன. இதுமட்டுமல்ல, 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்கள் புதிய ஸ்டார்ட் அப்களுடன் புதிய அடையாளத்தைப் பெறவிருக்கின்றன. நான் காணும் ஐந்தாண்டுகளின் சித்திரம் எனக்கு முன் இருக்கிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இருப்பு நிதி அதிகரிப்பின் தாக்கத்தை நீங்கள் காண முடியும்.  வரும் ஆண்டுகளில் கடந்த 70 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமைகளை விட அதிக எண்ணிக்கையில் தாக்கல் செய்து சாதனை படைப்பதை நான் காண்கிறேன்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

தற்போது எனது நடுத்தர வகுப்பின் லட்சக்கணக்கான பிள்ளைகள் படிப்பதற்கு வெளிநாடு செல்கிறார்கள்.  இவர்களின் லட்சக்கணக்கான ரூபாய் சேமிக்கப்படும் சூழ்நிலையைக் கொண்டுவர நான் விரும்புகிறேன்.  எனது நாட்டின் நடுத்தர வகுப்பினரின் கனவுகள் நிறைவேற்றப்படும். மிகச்சிறந்த பல்கலைக்கழகம் எனது நாட்டில் இருக்க வேண்டும்.  எனது நாட்டில் அவர்கள் மிக உயர்ந்த கல்வியைப் பெறுவதன் மூலம் அவர்களின் பணமும், குடும்பத்தினரின் பணமும் சேமிக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வரும் ஆண்டுகளில் இந்திய கொடிகள் பறக்காத சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் எதுவும் இருக்காது. ஐந்தாண்டுகளில் விளையாட்டு உலகிற்குள் இந்திய இளைஞர்களின் ஆற்றல் அங்கீகரிக்கப்படுவதை நான் காணப்போகிறேன்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக மாற்றமடையவிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் சொகுசான பயண வசதிகளை எளிதாக பெறவிருக்கிறார்கள். நீங்கள் அதிவேகத்தை, ஏராளமான வசதிகளை முழு ஆற்றலுடன் பெறவிருக்கிறீர்கள். அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு புல்லட் ரயிலையும் காணவிருக்கிறது. வந்தே பாரத் ரயில் சேவையின் விரிவாக்கத்தையும் நாடு காணவிருக்கிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

அடுத்த ஐந்தாண்டுகளில் தற்சார்பு இந்தியா இயக்கம் புதிய உச்சங்களைத் தொடும். ஒவ்வொரு துறையிலும் நாடு தற்சார்பைக் காணவிருக்கிறது. 

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வரும் ஐந்தாண்டுகளில் செமிகண்டக்டர் உலகில் நமது எதிரொலியாக இந்திய தயாரிப்பு இருக்கும். ஒவ்வொரு மின்னணு உற்பத்திப் பொருளிலும் ஒரு சிப் இருக்கும். அது இந்தியர்களின் வியர்வையைக் கொண்டிருக்கும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வரும் ஆண்டுகளில் உலகின் மின்சாதன சந்தையில், மின்னணு சாதன சந்தையில் புதிய வேகத்தின் ஆற்றலை நாடு காணவிருக்கிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நாடு தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. நமது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய நாம் தொடர்ந்து தற்சார்பு பெறுவதை நோக்கி செயல்படுவோம். படிம எரிசக்தி தேவைகள் மீதான நமது சார்பு வெற்றிகரமாக குறைக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுமட்டுமின்றி பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் மூலம் உலக சந்தையை ஈர்ப்பதை நோக்கி நாம் முன்னேறுகிறோம். பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்தி நமது தேவைகளை எதிர்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது. எத்தனால் உலகை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.  20 சதவீதம் என்ற இலக்கை எட்டுவதன் மூலம் நமது மக்களின் போக்குவரத்தை மலிவானதாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

20 சதவீத எத்தனால் பற்றி நான் பேசும் போது, அது எனது நாட்டின் விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கப் போகிறது. விவசாயிகள் புதிய முன்னேற்றத்தை அடையவிருக்கிறார்கள். தற்போது நாட்டின் உணவு உற்பத்தி மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயாக உள்ளது. விவசாய நாடு என்று நாம் கூறுகிறோம். ஆனால் இன்றும் கூட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புக்கு வெளிநாட்டில் இருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். நமது நாட்டின் விவசாயிகளிடம் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நாம் பின்பற்றும் கொள்கைகளை நான் உறுதியாக நம்புகிறேன். அடுத்த ஐந்தாண்டுகளில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் எனது நாடு வெகு விரைவில் தற்சார்பை அடையும். வெளிநாட்டு சந்தைக்குச் சென்ற பணம், எனது நாட்டின் விவசாயிகளின் பைகளுக்கு வரும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ரசாயன விவசாயம் காரணமாக எனது அன்னை பூமி ஏராளமான துயரங்களை சந்திக்கிறது. வரும் ஐந்தாண்டுகளில் நாட்டில் விவசாயிகளை இயற்கை வேளாண்மையை நோக்கி வெற்றிகரமாக நாம் கொண்டுசெல்லவிருக்கிறோம்.  ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்படும். நமது அன்னை பூமியும் பாதுகாக்கப்படும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

இயற்கை விவசாயம் அதிகரிக்கும் போது உலகச் சந்தையில் நமது உற்பத்திப் பொருட்களின் பலமும் அதிகரிக்கும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஐநா சபை மூலம் சிறுதானியங்கள் இயக்கத்தை நான் தொடங்கினேன். தற்போது அவற்றுக்கு ஸ்ரீஅன்னா என்ற அங்கீகாரத்தை நாம் அளித்திருக்கிறோம்.  சிறுதானிய ஸ்ரீஅன்னா எனது கிராமத்தின் சிறிய வீடுகளிலும் பயிர் செய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நான் காண்கிறேன். இது உலகச் சந்தையில் உயரிய உணவு என்ற பெருமையைப் பெற்றிருக்கும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வயல்வெளிகளில் விவசாயிகளுக்கான புதிய சக்தியாக ட்ரோன்கள் உருவெடுக்கப்போகின்றன. நாங்கள் ஏற்கனவே 15,000 ட்ரோன் சகோதரிகள் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். இது ஒரு தொடக்கம் மட்டுமே. ஏராளமான வெற்றியை வெகுவிரைவில் நாம் காணவிருக்கிறோம்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

வேளாண் துறையில் நானோ தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் அனுபவத்தில் இதுவரை நாங்கள் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். நானோ யூரியாவில் நாங்கள் மகத்தான வெற்றியை அடைந்திருக்கிறோம். நானோ டிஏபி உரத்திலும் வெற்றி ஈட்டப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோணிப்பையில் உரத்துடன் பயணம் செய்யும் விவசாயி, ஒரு பாட்டிலில் உரத்தைக் கொண்டு செல்வதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.  

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

கூட்டுறவுத் துறையில் புதிய அமைச்சகத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.  கூட்டுறவின் ஒட்டுமொத்த மக்கள் இயக்கம் புதிய பலத்துடன் உருவாக வேண்டும் என்பதும், 21-ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப அது உருவாக வேண்டும் என்பதும் இதன் பின்னால் உள்ள நோக்கமாகும். இதன் மிகப்பெரிய பயனாக 2 லட்சம் கிடங்குகளை அமைப்பதற்கான பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். ஐந்தாண்டுகளில் இது நிறைவேறும் போது சிறு விவசாயிகள் கூட தங்களின் விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கான இடத்தை பெற முடியும். சந்தையில் எந்த விலைக்கு விற்பது, அல்லது விற்காமல் இருப்பது என்பதை விவசாயி முடிவு செய்வார். வீணாகிவிடும் என்ற அச்சத்தில் இருந்து விடுபடுவதால் விவசாயியின் பொருளாதார பலம் அதிகரிக்கும். கால்நடை பராமரிப்பும், மீன் வளமும் புதிய சாதனைகளை படைக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன். தற்போது பெரும் எண்ணிக்கையில் கால்நடைகளை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் பால் உற்பத்தி குறைவாக இருக்கிறது. இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம். மீன்களின் ஏற்றுமதியை அதிவேகமாக நாம் மேம்படுத்துவோம் என்பதிலும் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை உள்ளது.  வேளாண் உற்பத்தி அமைப்புகள் உருவாக்கத் திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதன் அனுபவம் மிக நன்றாக உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் விவசாயிகளின் புதிய அமைப்புகள் மற்றும் வேளாண் உற்பத்தி மதிப்பின் சக்தியிலிருந்து விவசாயிகள் நிச்சயமாக பயன்களை பெறவிருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

ஜி20-ன் வெற்றி இதனை தெளிவுபடுத்தியிருக்கிறது. கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வெளிப்படை தன்மை என்பது மிகப்பெரும் பயனைத் தந்துள்ளது. இந்தியாவை நோக்கி உலகின் கவனம் திரும்பியதை நாம் பார்த்திருக்கிறோம். வரும் நாட்களின் மிகப்பெரிய சுற்றுலா வாய்ப்பு உருவாகப் போகிறது. இது அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும். உலகின் பல நாடுகள் தற்போது தங்களின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவை சார்ந்துள்ளன. இந்தியாவிலும் கூட பல மாநிலங்களை இப்படி உருவாக்க முடியும். இவற்றின் மிகப்பெரிய பொருளாதார பகுதியாக சுற்றுலா இருக்கும். இதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. நாம் பின்பற்றும் கொள்கைகள் காரணமாக இந்தியா மிகப்பெரிய சுற்றுலா இடமாக மாறவிருக்கிறது.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

டிஜிட்டல் இந்தியா பற்றியும் நிதி நுட்பம் (ஃபின்டெக்) பற்றியும் நான் விவாதித்த போது நான் பயனின்றி பேசுவதாக சிலர் நினைத்தார்கள். தரவு சிந்தனையாளர்களுக்கான திறன் குறைவாக இருந்தது. ஆனால் நான் முழு நம்பிக்கையோடு கூறுகிறேன். வரும் ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் பொருளாதார உலகில் இந்தியா ஆதிக்கம் செலுத்தவிருக்கிறது. இந்தியா ஒரு புதிய சக்தியாக மாறவிருக்கிறது. டிஜிட்டல் முறைகள் தற்போது இந்தியாவின் ஆற்றலை அதிகரிக்கவிருக்கின்றன.  செயற்கை நுண்ணறிவை அதிகமாகப் பயன்படுத்தும் திறன் ஒரு நாட்டுக்கு இருக்குமென்றால் அது இந்தியாவாக இருக்கும் என்று உலகம் நம்புகிறது. எனது நாடு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

விண்வெளி உலகில் இந்தியாவின் பெயர் புகழ் பெற்று வருகிறது. நமது விஞ்ஞானிகளின் திறன் வெளிப்பட்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கான திட்டம் பற்றி இன்று வார்த்தைகளால் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. உலகத்தை வியக்கவைக்கும் திசையில் விண்வெளி உலகை நமது விஞ்ஞானிகள் இந்தியாவை எடுத்துச் செல்வார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை ஆகும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

அடித்தள நிலையில் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. சுயஉதவிக் குழுவில் எனது 10 கோடி தாய்மார்களும், சகோதரிகளும் ஈடுபட்டுள்ளனர். நமது 3 கோடி லட்சாதிபதி சகோதரிகள்  தங்களுக்குள் முன்னேற்றத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாரதம் கேள்விப்படாத பல துறைகளில் தெளிவான முன்னேற்றத்தை அடையும் நிலையை நான் காண்கிறேன்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாம் ஒரு வலுவான அடித்தளத்தை நிறுவும் நாளை நான் கற்பனை செய்கிறேன், நான் கனவு காணும் அந்தப் பொற்காலம் நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை. மேலும் நாம் 2047-ஐ எட்டும் போது, இந்த நாடு அந்த பொற்காலத்தை மீண்டும் அனுபவிக்கும். இந்த நம்பிக்கையுடன், தலைவர் அவர்களே, 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. இது எங்கள் உறுதிப்பாடு, இதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எங்களது ஒவ்வொரு மூச்சும் அந்தப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, எங்களது ஒவ்வொரு நொடியும் அந்தப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, எங்களது ஒவ்வொரு சிந்தனையும் அந்தப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதே உணர்வுடன், நாம் முன்னேறிச் செல்கிறோம், தொடர்ந்து அணிவகுத்துச் செல்வோம், நாடு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கும். அதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வரவிருக்கும் நூற்றாண்டுகள் வரலாற்றில் இந்தப் பொற்காலத்தைப் பொறிக்கும். நாட்டு மக்களின் மனநிலையை நான் நன்கு புரிந்துகொள்வதால் இந்த நம்பிக்கை எனக்குள் எதிரொலிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மாற்றத்தின் அனுபவத்தை தேசம் கண்டுள்ளது. மாற்றத்தின் விரைவான வேகம், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் புதிய உயரங்களையும், புதிய பலங்களையும் கொண்டு வரும். ஒவ்வொரு தீர்மானத்தையும் அடைவது எங்கள் பணி நெறிமுறையின் ஒரு பகுதியாகும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,

நீங்கள் அனைவரும் இந்தச் சபையில் உங்கள் கருத்துக்களை முன்வைத்தீர்கள், இந்த அவையின் புனிதத்தின் மத்தியில் தேசத்தின் முன் உண்மையைப் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உத்தரவாதம் காலாவதியானவர்களின் பேச்சை தேசம் கேட்க முடியாது என்று நான் நம்புகிறேன். யாருடைய உறுதியின் வலிமையைக் கண்டார்களோ அவர்களின் கருத்துக்களை நம்பி, நாடு முன்னேறும்.

நான் மீண்டும் ஒருமுறை அவைத் தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் உரைக்காக எனது பணிவான வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் எனது கருத்துக்களை நிறைவு செய்கிறேன்.

மிகவும் நன்றி.

***

PKV/PLM/RS/AG/KV



(Release ID: 2016363) Visitor Counter : 32