பிரதமர் அலுவலகம்

தமிழ்நாட்டின் சென்னையில் விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 19 JAN 2024 8:29PM by PIB Chennai

வணக்கம் சென்னை!

தமிழ்நாட்டின் ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான அனுராக் தாக்கூர், எல் முருகன், நிசித் பிரமாணிக், தமிழக அரசின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்துள்ள எனது இளம் நண்பர்களே.

13-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். இந்திய விளையாட்டுகளைப் பொறுத்தவரை, 2024-ம் ஆண்டைத் தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும். இங்கு கூடியிருக்கும் எனது இளம் நண்பர்கள், இளம் இந்தியா, புதிய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். உங்களின் ஆற்றலும், உற்சாகமும் விளையாட்டு உலகில் நமது நாட்டை புதிய உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது. நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றுபட்ட பாரதம், உன்னத பாரதம் என்ற உண்மையான உணர்வை நீங்கள் ஒன்றாக வெளிப்படுத்துகிறீர்கள். தமிழ்நாட்டின் அன்பான மக்கள், அழகான தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் நிச்சயமாக உங்களை வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அவர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை வெல்லும் என்று நான் நம்புகிறேன். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை நிச்சயம் அமையும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் புதிய நட்பை உருவாக்கவும் இது உதவும்.

நண்பர்களே,

இன்று, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் பல்வேறு திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் இங்கு நடைபெற்றன. 1975-ம் ஆண்டு ஒளிபரப்பைத் தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் மையம் இன்று முதல் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறது. தூர்தர்ஷன் தமிழ் சேனலும் புதிய அவதாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 8 மாநிலங்களில் 12 புதிய எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்படுவது சுமார் 1.5 கோடி மக்களுக்கு பயனளிக்கும். இன்று, 26 புதிய பண்பலை ஒலிபரப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தச் சாதனைக்காக தமிழக மக்களுக்கும், நாடு முழுமைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

விளையாட்டு வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் தனி இடம் பெற்றுள்ளது. சாம்பியன்களை உருவாக்கும் பூமி து. இந்த மண் டென்னிஸில் முத்திரை பதித்த அமிர்தராஜ் சகோதரர்களைப் பெற்றெடுத்தது. இந்த மண்ணிலிருந்து ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரன் தோன்றினார், அவரது தலைமையில் பாதம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, போன்ற செஸ் வீரர்களும், பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் போன்ற வீரர்களும் தமிழகத்தின் கொடைகள் ஆவர். இதுபோன்ற பல விளையாட்டு வீரர்கள் இந்த மண்ணில் இருந்து தோன்றி, ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள். தமிழ்நாட்டு மண்ணிலிருந்து நீங்கள் அனைவரும் மேலும் உத்வேகம் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

உலகின் சிறந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாக பாரதத்தைக் காண நாம் அனைவரும் விரும்புகிறோம். இதற்காக, நாட்டில் நிலையான பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவது, விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்துவது மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அடிமட்டத்திலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். கேலோ இந்தியா அபியான் இன்று இந்தப் பங்கை ஆற்றி வருகிறது. 2018 முதல், கேலோ இந்தியா விளையாட்டுகளின் 12 பதிப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் ஆகியவை விளையாடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், புதிய திறமைகளை முன்னணிக்குக் கொண்டு வருகின்றன. மீண்டும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற அற்புதமான நகரங்கள் சாம்பியன்களை வரவேற்கத் தயாராக உள்ளன.

நண்பர்களே,

நீங்கள் ஒரு தடகள வீரராக இருந்தாலும் அல்லது பார்வையாளராக இருந்தாலும், சென்னையின் அழகிய கடற்கரைகளின் வசீகரம் அனைவரையும் அவற்றை நோக்கி ஈர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மதுரையில் உள்ள தனித்துவமான கோயில்களின் தெய்வீக ஒளியை நீங்கள் உணர்வீர்கள். திருச்சியில் உள்ள கோயில்கள் மற்றும் அங்குள்ள கலை மற்றும் கைவினைப்பொருட்கள் உங்கள் மனதைக் கவரும். கோயம்புத்தூரில் கடினமாக உழைக்கும் தொழில்முனைவோர் உங்களைத் திறந்த மனதுடன் வரவேற்பார்கள். தமிழ்நாட்டின் இந்த அனைத்து நகரங்களிலும் நீங்கள் ஒருபோதும் மறக்க விரும்பாத ஒரு தெய்வீக உணர்வை அனுபவிப்பீர்கள்.

நண்பர்களே,

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 36 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களது திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த உள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் களத்தில் காலடி எடுத்து வைக்கும் சூழலை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் போட்டிகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம். கேலோ இண்டியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்குவாஷ் விளையாட்டின் ஆற்றலுக்காக நாம் காத்திருக்கிறோம். தமிழகத்தின் பண்டைய பெருமை மற்றும் பாரம்பரியத்தை உயர்த்தும் விளையாட்டான சிலம்பத்தின் வலிமையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு பொதுவான தீர்மானம், அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகத்துடன் ஒன்றிணைவார்கள். விளையாட்டின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு, உங்கள் மீதான நம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் தைரியம், அசாதாரணமான செயல்திறனுக்கான உறுதிப்பாடு ஆகியவற்றை ஒட்டுமொத்த தேசமும் காணும்.

நண்பர்களே,

மாபெரும் துறவி திருவள்ளுவர் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழ்நாடு. திருவள்ளுவர் இளைஞர்களுக்கு ஒரு புதிய திசையை வழங்கினார் மற்றும் தனது எழுத்துக்கள் மூலம் முன்னேற ஊக்கமளித்தார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இலச்சினையில் மாபெரும் திருவள்ளுவரின் படமும் இடம்பெற்றுள்ளது. 'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்' என்றால் பாதகமான சூழ்நிலைகளிலும் நாம் பலவீனமடையக் கூடாது, கஷ்டங்களைக் கண்டு ஓடக்கூடாது என்று திருவள்ளுவர் எழுதினார். நாம் நமது மனதை வலுப்படுத்தி நமது இலக்குகளை அடைய வேண்டும். இது ஒரு தடகள வீரருக்கு மிகப்பெரிய உத்வேகம். இந்த முறை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக வீர மங்கை வேலு நாச்சியார் இருக்கிறார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நிஜ வாழ்க்கை ஆளுமையைச் சின்னமாகத் தேர்ந்தெடுப்பது முன்னோடியில்லாத புதிய முயற்சியாகும். வீர மங்கை வேலு நாச்சியார் பெண் சக்தியின் அடையாளம். அவரது ஆளுமை இன்று பல அரசு முடிவுகளில் பிரதிபலிக்கிறது. அவரது உத்வேகம் விளையாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு தொடர்ந்து பணியாற்ற வழிவகுத்தது. கேலோ இண்டியா பிரச்சாரத்தின் கீழ், 20 விளையாட்டுகளில் மகளிர் லீக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், வீராங்கனைகள் பங்கேற்றனர். 'தஸ் கா டம்' எனப்படும் பத்து சக்தி முன்முயற்சி
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்தது.

நண்பர்களே,

2014-ம் ஆண்டிலிருந்து திடீரென நமது விளையாட்டு வீரர்களின் செயல்திறன் எவ்வாறு இவ்வளவு மேம்பட்டுள்ளது என்று நிறையப் பேர் ஆச்சரியப்படுகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பாரதம் இதுவரை தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதை நீங்கள் பார்த்தீர்கள். ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் பாரதம் வரலாறு படைத்துள்ளது. பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கங்களில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்து விடவில்லை. விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எப்போதும் இருந்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில், அவர்கள் புதிய தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளனர், மேலும் அரசின் ஆதரவு ஒவ்வொரு அடியிலும் சீராக உள்ளது. கடந்த காலங்களில், விளையாட்டின் நிலை வேறுபட்டது, கடந்த 10 ஆண்டுகளில், அரசு சீர்திருத்தங்களைத் தொடங்கியது, விளையாட்டு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், முழு விளையாட்டு அமைப்பும் மாற்றப்பட்டது. இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கேலோ இந்தியா இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறுகிறார்கள். 2014-ம் ஆண்டில், நாங்கள் டாப்ஸ் திட்டத்தை (இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டம்) அறிமுகப்படுத்தினோம், இது பயிற்சி, சர்வதேச வெளிப்பாடு மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்த விளையாட்டு வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்கிறது. இப்போது எங்கள் கவனம் 2024-ல் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மீது உள்ளது. டாப்ஸ் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

இன்று, இளைஞர்கள் விளையாட்டுக்கு வருவதற்காக நாம் காத்திருக்கவில்லை; இளைஞர்களுக்கு விளையாட்டை எடுத்துச் செல்கிறோம்!

நண்பர்களே,

கேலோ இந்தியா போன்ற இயக்கங்கள் கிராமப்புற, பழங்குடி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகின்றன. இன்று நாம் 'உள்ளூர் பொருட்களுக்கான குரல்' பற்றி பேசும்போது, அதில் விளையாட்டு திறமைகளும் அடங்கும். இன்று, நாங்கள் சிறந்த வசதிகளை வழங்குகிறோம் மற்றும் உள்ளூர் அளவில் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல போட்டிகளை ஏற்பாடு செய்கிறோம். இது அவர்களுக்கு சர்வதேச வெளிப்பாட்டு வாய்ப்புகளை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், பாரத்தில் முதன்முறையாக பல சர்வதேசப் போட்டிகளை நடத்தியுள்ளோம். நாட்டில் இவ்வளவு பரந்த பல கடற்கரைகள் உள்ளன. ஆனால் இப்போது, முதல் முறையாக, தீவுகளில் கடற்கரை விளையாட்டுகளை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த விளையாட்டுகளில் மல்லர் கம்பம் போன்ற பாரம்பரிய இந்திய விளையாட்டுகளும், 8 பிற விளையாட்டுகளும் அடங்கும். இந்த விளையாட்டுகளில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இது பாரதத்தில் கடற்கரை விளையாட்டுக்கள் மற்றும் விளையாட்டு சுற்றுலாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளதுடன், நமது கடலோர நகரங்களுக்கு பல நன்மைகளை கொண்டு வந்துள்ளது.

நண்பர்களே,

நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச வெளிப்பாட்டை வழங்கவும், உலக விளையாட்டு சூழலில் பாரதத்தை ஒரு முக்கிய மையமாக மாற்றவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எனவே, 2029-ல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளையும், 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் பாரதத்தில் நடத்த நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறோம். விளையாட்டு என்பது வெறும் களத்தோடு நின்றுவிடுவதில்லை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். விளையாட்டு, தன்னளவில் ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதாரமாகும், இது இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நான் உத்தரவாதம் அளித்துள்ளேன். இந்த உத்தரவாதம் பொருளாதாரத்தில் விளையாட்டுகளின் பங்களிப்பை அதிகரிப்பதை உள்ளடக்கியது, அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எனவே, கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுடன் தொடர்புடைய துறைகளையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

இன்று, விளையாட்டு தொடர்பான துறைகளில் நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க திறன் மேம்பாட்டிற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மறுபுறம், விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் தொடர்பான சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். விளையாட்டு அறிவியல், கண்டுபிடிப்பு, உற்பத்தி, விளையாட்டு பயிற்சி, விளையாட்டு உளவியல் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கு நாங்கள் ஒரு தளத்தை வழங்குகிறோம். மிக நீண்ட காலத்திற்கு முன்பு, நாடு அதன் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தைப் பெற்றது. கேலோ இந்தியா இயக்கத்தின் மூலம், இப்போது நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க அகாடமிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மையங்கள், 30-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் நம்மிடம் உள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கையில், விளையாட்டு பிரதான பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

நண்பர்களே,

மதிப்பீடுகளின்படி, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டுத் துறை ஒரு லட்சம் கோடி ரூபாயை நெருங்கும். இது நமது இளம் சக தேசபக்தர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும். சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டு பற்றிய அதிகரித்த விழிப்புணர்வு ஒளிபரப்பு, விளையாட்டு பொருட்கள், விளையாட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆடை போன்ற வணிகங்களில் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதே எங்கள் முயற்சியாகும். தற்போது, 300 வகையான விளையாட்டு உபகரணங்களை தயாரித்து வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தத் தொழிலுடன் தொடர்புடைய உற்பத்தி பகுதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

கேலோ இந்தியா இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் விளையாட்டு உள்கட்டமைப்பு வேலைவாய்ப்புக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக மாறி வருகிறது. பல்வேறு விளையாட்டுகளுடன் தொடர்புடைய பல்வேறு விளையாட்டு லீக்குகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன, நூற்றுக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அதாவது, விளையாட்டு தொடர்பான துறைகளில் வாழ்க்கையை உருவாக்க விரும்பும் இன்றையப் பள்ளிகள் மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்துக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதுவும் மோடியின் உத்தரவாதம்தான்.

நண்பர்களே,

இன்று பாரதம் விளையாட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. புதிய பாரதம் பழைய சாதனைகளை தகர்த்தெறிகிறது, புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது, புதிய மைல்கற்களைப் படைக்கிறது. நமது இளைஞர்களின் வலிமையில், வெற்றி பெற வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் மன வலிமையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இன்றைய பாரதத்தில் லட்சிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடையும் திறன் உள்ளது. எந்தச் சாதனையும் நம்மால் முறியடிக்க முடியாத அளவுக்கு பெரியதல்ல. இந்த ஆண்டு, நாம் புதிய சாதனைகளை உருவாக்குவோம், நமக்காக புதிய கோடுகளை வரைவோம், உலகில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் செல்வோம். பாரதம் உங்களுடன் முன்னேறும் என்பதால் நீங்கள் முன்னேற வேண்டும். கைகோர்த்து, உங்களுக்காக வெற்றி பெறுங்கள், நாட்டுக்காக வெல்லுங்கள். மீண்டும் ஒருமுறை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 தொடங்கப்பட்டதாக அறிவிக்கிறேன்.

***

PKV/AG/KV



(Release ID: 2016361) Visitor Counter : 40