பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லக்னோவில் நடைபெற்ற, உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்ட திட்டப் பணிகளின் 4-வது அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 FEB 2024 5:46PM by PIB Chennai

வணக்கம்,

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, துடிப்பான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகா, நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே,  பாரதம் மற்றும் வெளிநாடுகளின் தொழில்துறை பிரதிநிதிகளே, என் குடும்ப உறுப்பினர்களே

வளர்ந்த இந்தியாவுக்காக வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தை உருவாக்கும் உறுதியுடன் நாம் இங்கு ஒன்றுபட்டு நிற்கிறோம். உத்தரப்பிரதேசத்தின் 400-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தொழில்நுட்பத்தின் மூலம் லட்சக்கணக்கான தனிநபர்கள் இந்த நிகழ்ச்சியில் நம்முடன் இணைந்துள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. காணொலிக் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தின் நிலை மோசமாக இருந்தது. குற்றங்கள், கலவரங்கள், திருட்டுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், இன்று உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது மாநிலத்தின் முன்னேற்றங்களைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கான பணிகள் தொடங்கிவைக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தின் சூழலை மிகச் சிறப்பாக மாற்றும். அனைத்து முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முன்பு இந்த மாநிலத்தை பாதித்த அதிகாரத்துவ தடைகள் அகற்றப்பட்டு, வணிகம் செய்வதில் எளிதான கலாச்சாரம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.  குற்ற விகிதங்கள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் வணிக வாய்ப்புகள் செழித்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது.  மின்சார உற்பத்தியாக இருந்தாலும் சரி, மின்சார பகிர்மானமாக இருந்தாலும் சரி, இன்று உத்தரப் பிரதேசம் பாராட்டத்தக்க பணிகளை செய்து வருகிறது. அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் உத்தரப்பிரதேசத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இன்றைய நிகழ்ச்சி வெறும் முதலீடு பற்றியது மட்டுமல்ல. இது ஒரு பரந்த நம்பிக்கை மற்றும் சிறந்த வருமானத்திற்கான எதிர்பார்ப்பைக் குறிக்கிறது. உலகெங்கிலும், பாரதத்தின் வளர்ச்சிப் பாதை குறித்து முன்னெப்போதும் இல்லாத நேர்மறை எண்ணங்கள் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாடுகளுக்குச் சென்று திரும்பினேன். ஒவ்வொரு நாடும் பாரதத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது. 

சகோதர சகோதரிகளே,

வளர்ச்சியடைந்த பாரதம் என்று நான் பேசும் போது, புதிய கண்ணோட்டங்களும், புதிய பாதைகளும் தேவைப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக மக்களுக்கு அடிப்படை வசதிகளே கிடைக்காமல் இருந்தது.  முந்தைய அரசாங்கங்கள் ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டுமே வசதிகளையும் வேலை வாய்ப்புகளையும் குவித்தன. நாட்டின் பெரும்பகுதியை வளர்ச்சியடையாத நிலையில் விட்டுவிட்டன. உத்தரப்பிரதேசம் கடந்த காலங்களில் இதேபோன்ற புறக்கணிப்பை சந்தித்தது. ஆனால், இந்த நிலையை இரட்டை இன்ஜின் அரசு தகர்த்தெறிந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், வர்த்தக செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் நாங்கள் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இரட்டை இன்ஜின் அரசின் நோக்கம், தகுதியான எந்தவொரு பயனாளியும் அரசுத் திட்டங்களின் பயன்களில் இருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். மோடியின் உத்தரவாத வாகனம் ஒவ்வொரு கிராமத்தையும், நகரத்தையும் சென்றடைந்து, மக்களுக்கு திட்டப் பயன்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

நண்பர்களே,

முன்பு புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு மோடி ஆதரவை வழங்குகிறார். ஸ்வநிதி திட்டத்தின் சாலையோர வியாபாரிகளுக்கு எங்களது அரசு உதவுகிறது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை 22 லட்சம் ஆகும்.  

நண்பர்களே,

நமது இரட்டை இன்ஜின் அரசின் முடிவுகளும், முன்முயற்சிகளும் சமூக நீதிக்கும், பொருளாதார வளத்துக்கும் பங்களிக்கின்றன. லட்சாதிபதி சகோதரிகள் முன்முயற்சியின் மூலம் நாடு முழுவதும் ஒரு கோடி பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மூன்று கோடி பெண்களை இந்த அந்தஸ்துக்கு உயர்த்த அரசாங்கம் இப்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்தைப் பற்றி நாம் பேசும்போது, அதன் பின்னால் உள்ள மற்றொரு உந்து சக்தியை நாம் கவனிக்க வேண்டும். அது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வலிமை ஆகும். இரட்டை இன்ஜின் அரசு அமைந்ததிலிருந்து, உத்தரப் பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.

நண்பர்களே,

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டமும் குடிசைத் தொழில்களின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. பூட்டு தயாரித்தல் முதல் பித்தளை வேலை வரை, கம்பள நெசவு முதல் வளையல் உற்பத்தி வரை, களிமண் கலை முதல் பூ தையல் வரை, இந்த பாரம்பரியங்கள் வளமாக உள்ளன. பாரம்பரிய கைவினைப்பொருட்களை நவீனமயமாக்குவதற்கும், அத்தகைய கைவினைப்பொருட்களில் ஈடுபட்டுள்ள விஸ்வகர்மா குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கும் ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.  இது அவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவும்.

சகோதர சகோதரிகளே,

எங்கள் முயற்சிகள் பொம்மை உற்பத்தித் துறையிலும் விரிவடைந்துள்ளன. காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அங்கு தயாரிக்கப்படும் மர பொம்மைகளை நான் தீவிரமாக ஊக்குவித்து வருகிறேன்.

நண்பர்களே,

பொம்மை தயாரிப்பில் இந்தியாவுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருந்தபோதிலும், பாரதம் பொம்மை இறக்குமதியை பெரிதும் நம்பியிருந்தது. நமது கைவினைஞர்கள் பல தலைமுறைகளாக திறமை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவும் நவீனமயமாக்கல் நடைமுறைகளும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக, இந்திய சந்தைகள் மற்றும் வீடுகளில் வெளிநாட்டு பொம்மைகள் ஆதிக்கம் செலுத்தின. இதை மாற்ற தீர்மானித்து, நாங்கள் நாடு முழுவதும் பொம்மை தயாரிப்பாளர்களை ஆதரித்துள்ளோம். இதன் விளைவாக இறக்குமதி குறைந்து தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் முதன்மையான சுற்றுலாத் தலமாக மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளது. இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வாரணாசி மற்றும் அயோத்திக்கு வர விரும்புகிறார்கள்.  வாரணாசியும் அயோத்தியும் தினமும் எண்ணற்ற மக்களை ஈர்க்கின்றன. இது உத்தரப் பிரதேசத்தில் வணிகங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகிறது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பயணிகளும் தங்கள் பயண நிதியில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2025-ம் ஆண்டில் நடைபெறும் கும்பமேளாவும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். எதிர்காலத்தில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உத்தரப் பிரதேசத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நண்பர்களே,

நமது வலிமையைப் பயன்படுத்தி, அவற்றை நவீனமயமாக்கி, வளர்ந்து வரும் துறைகளில் சிறந்து விளங்குவதே நமது குறிக்கோள். இந்தியா தற்போது மின்சார வாகனப் போக்குவரத்து மற்றும் பசுமை எரிசக்திக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகிறோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எனவே, பிரதமரின் சூரிய சக்தி வீடு இலவச மின்சார திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும். மேலும் தனிநபர்கள் அதிகப்படியாக உள்ள மின்சாரத்தை அரசிற்கு விற்கலாம்.

நண்பர்களே,

சூரிய மின்சக்தி மட்டுமின்றி,  மின்சார வாகனங்கள் தொடர்பான இயக்க முறையிலும் நாங்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். மின்சார வாகன உற்பத்தியாளர்கள், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 34.5 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் சூரிய மின்சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டிலும் கணிசமான வாய்ப்புகள் உள்ளன.

நண்பர்களே,

விவசாயிகளின் நலனுக்காகப் பாடுபட்ட செளத்ரி சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் வாய்ப்பை எங்கள் அரசு பெற்றுள்ளது. உத்தரபிரதேச மண்ணின் மைந்தரான செளத்ரி சரண் சிங்கை கௌரவிப்பது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துவதாகும். செளத்ரி சரண் சிங் தமது கொள்கைகளில் உறுதியாக இருந்தார். சிறு விவசாயிகளின் நலனுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாடு என்றென்றும் நினைவில் கொள்ளும். அவரிடமிருந்து உத்வேகம் பெற்று, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நண்பர்களே,

நாட்டின் விவசாயத்தை ஒரு புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல நாங்கள் நினைக்கிறோம்.  விவசாயிகளுக்கு நாங்கள் பல உதவிகளைச் செய்து ஊக்குவித்து வருகிறோம். இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானியங்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.

உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் சிறு விவசாயிகளை ஒரு வலிமையான சந்தை சக்தியாக மாற்றுவதற்கு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதும், அவர்களின் பொருட்களை வாங்குவதை உறுதி செய்வதும் விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் பயனளிக்கும். அது மட்டுமல்லாமல், வணிகங்களையும் மேம்படுத்தும். இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் உத்தரப்பிரதேசம் வரலாற்று ரீதியாக முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை முழு அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தரப்பிரதேச மக்களின் திறன் மீதும், இரட்டை இன்ஜின் அரசின் முயற்சிகள் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இன்றைய முயற்சிகள் உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை மேலும் வலுவாக்கும். யோகி ஆதித்யநாத்  மற்றும் உத்தரபிரதேச அரசுக்கு சிறப்பு வாழ்த்துகள். உத்தரப்பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய விரும்புகிறது என்பதைக் கேட்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உத்தரப்பிரதேசத்தைப் பின்பற்றி, உங்கள் மாநிலங்களில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் லட்சிய கனவுகள் மற்றும் தீர்மானங்களுடன் செயல்படுவோம். தொழில்துறை நண்பர்களே, எல்லையற்ற வாய்ப்புகளுடன் நேரம் கனிந்துள்ளது. வாருங்கள், ஒன்றாக இந்தப் பயணத்தை மேற்கொள்வோம்.

நண்பர்களே

உத்தரப்பிரதேசம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் இன்று 400 இடங்களில் கூடியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம் தனது தீர்மானங்களை விரைவாக நிறைவேற்றுகிறது. நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி!

 

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

(Release ID: 2007158)

AD/PLM/RR


(Release ID: 2016030) Visitor Counter : 90